தேடுதல்

கிழக்கு ஆப்ரிக்க  நாடுகளின் ஆயர்கள் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர்கள் 

இப்பூமியின் அழுகுரலுக்குப் பதிலளிக்க ஆப்ரிக்க ஆயர்கள் உறுதி

வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி கென்யாவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல், சுதந்திரமான, நியாயமான, மற்றும், அமைதியான முறையில் நடைபெறுமாறு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இப்பூமியின் அழுகுரலுக்குப் பதில் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

11 கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை உள்ளடக்கிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான  AMECEA பேரவை, டான்சானியாவில், இம்மாதம் 9ம் தேதி முதல் 18, இத்திங்கள் வரை, ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்தியது. இப்பேரவையில், சமூகத்தொடர்பு திருப்பீட அவையின் தலைவர் பவுலோ ரூஃபீனி அவர்களும் கலந்துகொண்டு எட்டு முக்கிய கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

இக்கூட்டத்தில், காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்ட அந்நாடுகளின் ஆயர்கள், இக்கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், திருத்தந்தையின் Laudato si' திருமடலின் போதனைகளுக்கு ஒத்திணங்கும் வகையில், ஒருங்கிணைந்த சூழலியலைப் பாதுகாப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளால் துன்புறும் மக்களோடும், எத்தியோப்பியா, எரிட்ரியா, தென் சூடான், சூடான் போன்ற நாடுகள் உள்ளிட்ட உலகில் போர்கள் மற்றும், உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடும், தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.  

வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி கென்யாவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல், சுதந்திரமான, நியாயமான, நம்பகமான மற்றும், அமைதியான முறையில் நடைபெறுமாறும் ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

மேலும், இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், படைப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அனைவரின் பங்களிப்பும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றமும் குறைபடும்போது உடன்பிறந்த உணர்வு துன்புறுகிறது என்று கூறியுள்ளார்.

AMECEA என்பது, எத்தியோப்பியா, எரிட்ரியா, கென்யா, மலாவி, டான்சானியா, உகாண்டா, சூடான், தென் சூடான், சாம்பியா, திஜிபுத்தி, சொமாலியா ஆகிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2022, 15:24