தென் அரேபியாவில் உடன்பிறந்த உணர்வில் மறைப்பணி
மேரி தெரேசா: வத்திக்கான்
ஒவ்வொரு நாளும் பல நாடுகளின் மக்கள் சந்திக்கின்ற, இணைந்து பணியாற்றுகின்ற, மற்றும், எண்ணற்ற மரபுகள்கொண்ட அரபு நாடுகளைக் கண்டு வியக்கிறேன் என, தென் அரேபிய நாடுகளுக்கு திருத்தந்தையின் பதிலாளராகப் பொறுப்பேற்கும் ஆயர் பவுலோ மர்த்திநெல்லி அவர்கள் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியிலுள்ள புனித யோசேப்பு பேராலயத்தில், தென் அரேபிய நாடுகளின் தலைமைப்பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய ஆயர் மர்த்திநெல்லி அவர்கள், பன்முக கலாச்சாரம் மற்றும், சகிப்புத்தன்மை ஆகியவை மதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கப்புச்சின் சபையைச் சார்ந்த, 64 வயது நிரம்பிய இத்தாலிய ஆயர் மர்த்தினெல்லி அவர்கள், மதிப்புமிக்க உணர்வில் நல்லிணக்கம், மற்றும், சகிப்புத்தன்மையை ஊக்கப்படுத்திவரும் அந்நாடுகளின் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மற்றும், உயர்மதிப்புக்குரியவர்கள் ஆகிய அனைவருக்கும், மரியாதை கலந்த நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மக்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும், மதங்களைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும், அனைவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றிணைந்து வாழ்வதற்கே கடவுள் எல்லாரையும் அழைத்திருக்கிறார் என்றுரைத்த ஆயர் மர்த்திநெல்லி அவர்கள், இப்பகுதியில் ஆயராகப் பணியைத் தொடங்கும் நான், பல்சமய உரையாடல், மற்றும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வை ஊக்குவிப்பது, எனது மிகப்பெரும் ஆவல் என்பதை எடுத்துரைத்தார்.
தென் அரேபியாவில், திருத்தந்தையின் பதிலாளர் தலைமையின்கீழ் ஏறத்தாழ இருபது இலட்சம் கத்தோலிக்கர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பிலிப்பீன்ஸ் மற்றும், ஏனைய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்