தேடுதல்

உக்ரைனில் போரின் அழிவுகள் உக்ரைனில் போரின் அழிவுகள் 

உக்ரைனில் இடம்பெறும் போர் நிறுத்தப்பட உழைக்கவேண்டும்: caracciolo

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் இரஷ்யா-உக்ரைன் போரில், விரைவில் போர் நிறுத்தம் ஏற்படுவது, அமைதியை நோக்கிச்செல்வதற்கு முதல் படியாக அமையும்.

மெரினா ராஜ்: வத்திக்கான்

"போர் நிறுத்தம் என்பது, அமைதிக்கு வெகு தொலைவில் இருந்தாலும், குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு, தொடர் உயிரிழப்புக்கள் போன்றவற்றை நிறுத்துவதற்கு பெரும்வாய்ப்பாக அமையும்" என்ற இத்தாலிய புவிசார் அரசியல் இதழான லைம்ஸ் (limes)ன் இயக்குனர்   luccio caracciolo அவர்கள் தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் செய்திகளுக்காக அளித்த நேர்காணலின்போது, அறிவற்றதனமான போர் என்று திருத்தந்தையால் கூறப்படும் உக்ரைன்-இரஷ்யா போர் பற்றி கருத்து தெரிவித்த caracciolo அவர்கள், அமைதியை நிலைநாட்ட போர் நிறுத்தம் கட்டாயம் தேவை எனவும், அனைத்துலக அளவில், நாடுகளின் பாதுகாப்பிற்கென அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொண்டிருப்பது, போர் தொடங்காமல் இருப்பதற்கு ஒரு காரணியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியான மோதல், போதுமான தகவல் தொடர்பின்மைகள் போன்ற நிலைகளை அதிகமாக ஏற்படுத்தும் இப்போர், விரைவில் முடியாது என்பதுபோலத் தோன்றினாலும், தனது பார்வையில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், caracciolo அவர்கள் தெரிவித்தார்.

மேலும், ஆயுதக்குவிப்புகளுக்கு எதிரான திருத்தந்தையின் விண்ணப்பத்தை ஏற்று, விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், இவ்வுலகில் கட்டாயம் ஒரு நாள் அது நிறைவேறும் என்று, தான் உறுதியாக நம்புவதாகவும் caracciolo அவர்கள் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் என்று தான் கூறுவது,  இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி உடன்படிக்கை, மற்றும் எல்லைகளுக்கு இடையேயான தீர்வு அல்ல என்றும், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு, மனித உயிரிழப்பு போன்றவையின்றி இருப்பதே நிறுத்தமே என்றும் வலியுறுத்தினார், லைம்ஸ் இதழின் இயக்குனர்.

உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவைப் பற்றிய தனது கருத்தை தெரிவித்த அவர், இரண்டு நிபந்தனைகளின் அடைப்படையில் தற்காப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவது முற்றிலும் சரியானது  என்றும் எடுத்துரைத்தார். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பலவீனமான நாடான உக்ரைனுக்கு உதவும் மேற்கத்திய நாடுகள் போரின் விளைவுகளை உணரவேண்டும் என்றும், தற்காப்பு ஆயுதங்களைப் பெறும் உக்ரைன் அதனை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், ரஷ்யா மீதோ பிற நாடுகள் மீதோ எதிர்த் தாக்குதல் நடந்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் caracciolo.

இப்போது உக்ரைனுக்கு ஆயுதங்களைவிட படைவீரர்களே அதிகம் தேவைப்படுகின்றார்கள், எனவே இப்போர் விரைவில் முடிவடைய ஒவ்வொருவரும்  சிறப்பாக உழைக்கவேண்டும் என்றும், caracciolo வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூலை 2022, 15:18