கனடா திருத்தூதுப் பயணத்தின் மையக்கருத்தாக ஒப்புரவு
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டிற்கு மேற்கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க திருத்தூதுப் பயணம், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து அந்நாட்டு பூர்வீக இன மக்களோடு ஆயர்கள் நடத்திவரும் ஒப்புரவு நடவடிக்கையை ஊக்குவிப்பதாக அமையும் என்று, கனடாவின் ஆயர் பேரவைத் தலைவரான ஆயர் Raymond Poisson அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு பேட்டியளித்துள்ள ஆயர் Poisson அவர்கள், ஒப்புரவு, மற்றும், குணப்படுத்தல் ஆகியவை, இப்பயணத்தின் மையமாக விளங்கும் என்றும், கடந்த கால நிகழ்வுகளை மறக்காமல் முன்னோக்கி முயற்சிகளை மேற்கொள்வதற்கு இப்பயணம் உதவும் என்றும் கூறியுள்ளார்.
கனடாவில் பூர்வீக இனச் சமூகங்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்பட்ட மாணவர் விடுதிப் பள்ளிகளில் கொடூரமாய் இடம்பெற்ற, மொழி, இன, மற்றும், கலாச்சார அவமதிப்பு, அந்நாட்டு வரலாற்றின் இருண்ட காலம் என்று குறிப்பிட்ட ஆயர் Poisson அவர்கள், அந்நாட்டில் முதலில் குடியேறியவர்கள் First Nations பூர்வீக இனச் சமூகங்களே என்பதை எடுத்துரைத்துள்ளார்.
பல ஆண்டுகளாக கடுமையான துயரங்களை எதிர்கொண்ட பூர்வீக இன மக்களோடு கனடா தலத்திருஅவை மேற்கொண்டுள்ள ஒப்புரவு நடவடிக்கை குறித்து விளக்கிய ஆயர் Poisson அவர்கள், கனடாவின் உண்மையைக் கண்டறியும், மற்றும் ஒப்புரவு பணிக்குழு, 2015ம் ஆண்டிலேயே திருத்தந்தை தங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பிதழ் கொடுத்தது, ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றால் அப்பயணம் தள்ளிப்போடப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே, ஆயர்கள், பூர்வீக இனச் சமூகங்களின் பிரதிநிதிகளோடு வத்திக்கான் வந்து திருத்தந்தையைச் சந்தித்தனர் எனவும், இச்சந்திப்பின்போது, திருத்தந்தை அம்மக்களின் ஏக்கங்கள், கவலைகள், கதைகள் போன்றவற்றை கேட்டறிந்தார் எனவும், ஆயர் Poisson அவர்கள் கூறியுள்ளார்.
இச்சந்திப்பின்போது, First Nations பூர்வீக இனச் சமூகங்களின் பிரதிநிதிகள் திருத்தந்தைக்கு மரத்தாலான தொட்டில் ஒன்றைப் பரிசாக அளித்தனர், அதை அன்றைய நாள் முழுவதும் தன்னோடு வைத்திருந்து, அதற்கு அடுத்த நாள் அதை அவர்களிடமே திருப்பிக்கொடுத்த திருத்தந்தை, உங்களின் இடங்களுக்கு நானே நேரில் வந்து உங்களோடு உரையாடி நீங்கள் கூறுவதை மீண்டும் கேட்கிறேன் என்று கூறியதாகவும், ஆயர் Poisson அவர்கள் கூறியுள்ளார்.
1984, 1987, மற்றும், 2002ஆம் ஆண்டுகளில் கனடா மண்ணில் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்ட திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஜூலை 24, வருகிற ஞாயிறு முதல், 30ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்