தேடுதல்

திருத்தந்தையின் வருகைக்காக தயாராகும் edmonton, kanada திருத்தந்தையின் வருகைக்காக தயாராகும் edmonton, kanada 

திருத்தந்தையின் “தவ திருப்பயணம்” குறித்த எதிர்பார்ப்புகள்

கனடா திருஅவை மேற்கொண்டுவரும் ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் பயணத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், ஓர் உந்துசக்தியாக இருக்கும் - பேராயர் ஸ்மித்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடாவுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தில், அவர் முதலில் செல்லுகின்ற எட்மன்டன் நகரின் பேராயர் ரிச்சர்டு ஸ்மித் அவர்கள், இத்திருத்தூதுப் பயணம் பற்றிய தலத்திருஅவையின் நம்பிக்கைகள் மற்றும், எதிர்பார்ப்புகள் குறித்து வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“ஒன்றிணைந்து பயணம்” என்ற தலைப்பைக்கொண்ட இப்பயணத்தில், கனடாவின் பூர்வீக இன மக்களோடு ஒப்புரவை உருவாக்குதல், மற்றும், அம்மக்களின் மனக்காயங்களைக் குணப்படுத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டிருக்கும் திருத்தந்தை, ஆழ்ந்த பரிவிரக்கம் கொண்ட ஒரு மனிதராகத் திகழ்கிறார் என்று பேராயர் ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.

பூர்வீக இன மக்கள் எதிர்கொண்ட துயரங்களைக் கேட்டறியவும், அவற்றுக்கு ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் ஆகியவை வழியாகப் பதிலளிக்கவும் திருஅவை தன்னை அர்ப்பணித்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவும், திருத்தந்தையின் இப்பயணம் அமைந்துள்ளது என்றும், பேராயர் ஸ்மித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளை திருத்தந்தை வத்திக்கானில் சந்தித்ததை நினைவுகூர்ந்த பேராயர் ஸ்மித் அவர்கள், அச்சந்திப்பில் அப்பிரதிநிதிகள் திறந்த மனதோடு பேசியதை, திருத்தந்தை மிகுந்த கவனம், அக்கறை, மற்றும், பரிவன்போடு கேட்டார் எனவும், அந்நேரத்தில் அவர் அவர்களுக்கு, தன் உள்ளாழத்திலிருந்து பதிலளித்தார் எனவும் கூறியுள்ளார்.

திருஅவை அம்மக்களோடு உடனிருக்கிறது என்பதை திருத்தந்தை உறுதிப்படுத்தினார் எனவும், இத்திருத்தூதுப் பயணத்தில் பலரின் மனப்புண்கள் குணமாக்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும், எட்மன்டன் பேராயர் ஸ்மித் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

கனடா திருஅவை மேற்கொண்டுவரும் ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் பயணத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருத்தூதுப் பயணம், ஓர் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் தான் உறுதியாய் இருப்பதாகவும் பேராயர் ஸ்மித் அவர்கள் வத்திக்கான் செய்திகளிடம் கூறியுள்ளார்.  

கனடா திருத்தூதுப் பயணம்

ஜூலை 24, இஞ்ஞாயிறன்று கனடாவின் எட்மன்டன் நகருக்கு முதலில் செல்லுகின்ற திருத்தந்தை, MASKWACIS நகரில் அந்நாட்டின் பூர்வீக இன மக்களைச் சந்தித்தல், கியூபெக் நகர் சென்று, கனடாவின் பிரதமர், ஆளுனர் ஆகியோரைச் சந்தித்தல், அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பூர்வீக இன மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு உரையாற்றுதல் ஆகிய பயண நிகழ்வுகளை, 27ம் தேதி வரை நிறைவேற்றுவார்.

28ம் தேதி கியூபெக் நகரில் புனித அன்னா தேசிய திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றுதல், கனடாவின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், மேய்ப்புப்பணியாளர்கள் போன்றோருக்கு மாலை திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுதல், Iqaluit  நகரில், அக்காலத்தில் இயங்கிய மாணவர் விடுதிப் பள்ளி செல்லுதல் என முக்கிய பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, இம்மாதம் 29ம் தேதி உரோம் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 30ம் தேதி காலை 7.50 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் வந்தடைவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2022, 14:54