யூபிலி ஆண்டிற்கான புதிய இலச்சினை வெளியீடு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகம் முழுவதிலுமுள்ள குழந்தைகளிடமிருந்து கையால் வரையப்பட்ட பல வடிவமைப்புகள் பெறப்பட்டன என்றும், கற்பனை மற்றும் எளிய நம்பிக்கையின் பலனாக இவற்றைப் பார்ப்பது மனதிற்கு நிறைமகிழ்ச்சி அளிக்கிறது என்றும், 2025-ம் யூபிலி ஆண்டிற்கான இலச்சினையை வரையும் போட்டியில் பங்குபெற்றோர் பற்றி குறிப்பிட்டுள்ளார் திருபீட அதிகாரி ஒருவர்.
ஜூன் 28, இச்செவ்வாயன்று, வத்திக்கானின் அப்போஸ்தலிக்க அரண்மனையின் சாலா ரெஜியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் 2025-ம் யூபிலி ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ இலச்சினையை வெளியிட்டபோது இவ்வாறு கூறியுள்ளார் புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella.
ஜூன் 11ம் தேதி, பேராயர் Fisichella மூன்று இறுதி திட்டங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஒப்படைத்ததாகவும், பலமுறை ஆராய்ந்து பார்த்ததில் திருத்தந்தை, Giacomo Travisani என்பவர் வரைந்த இலச்சினை படத்தை தேர்வு செய்துள்ளதாகவும் பேராயர் Fisichella தெரிவித்துள்ளார்.
இந்த இலட்சினையானது, புவியின் நான்கு மூலைகளிலிருந்தும் அனைத்து மனித இனத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக நான்கு அழகான மனித உருவங்களைக் காட்டுகிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் அரவணைத்து செல்வது, உலக மக்களை ஒன்றிணைக்க வேண்டிய ஒற்றுமையையும் உடன்பிறந்த உணர்வு நிலையையும் எடுத்துக்காட்டுகிறது. இதிலுள்ள முதல் மனித உருவம் சிலுவையை தழுவி நிற்கிறது.
இந்த நான்கு மனித உருவங்களுக்கும் கீழுள்ள கடல் அலைகள், மனித வாழ்வின் பயணம் என்பது போராட்டம் நிறைந்தது என்பதையும், அதில் நாம் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
இந்த இலட்சினையில் சிலுவையின் கீழுள்ள நங்கூரமானது பேரலைகளில் அல்லாடும் கப்பலை நிலைநிறுத்த உதவுவதுபோல, பல்வேறு போராடங்காளால் தள்ளாடும் மனித வாழ்வை நிலைநிறுத்த இந்தச் சிலுவை என்னும் நங்கூரம் உதவுகிறது என்பதைக் குறித்துக் காட்டுகிறது.
புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையிடம் 2025-ம் யூபிலி ஆண்டிற்கான திருப்பீடத் தயாரிப்புகளை "நம்பிக்கையின் திருப்பயணிகள்" என்ற பொன்மொழியுடன் ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்