காவல்துறை நடத்தியுள்ள சித்ரவதைகள் அதிர்ச்சியளிக்கின்றன
மேரி தெரேசா: வத்திக்கான்
மொரீஷியஸ் நாட்டில், தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள குடிமக்கள் மீது காவல்துறை நடத்தியுள்ள சித்தரவதைகள் அதிர்ச்சியளிக்கின்றது மற்றும், சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறாக உள்ளன என்று, அந்நாட்டின் Port Louisன் ஆயரான கர்தினால் Maurice Evenor Piat அவர்கள் கூறியுள்ளார்.
தலைநகர் போர்ட் லூயிசில், தடுப்புக்காவலில் இருந்த சிலர் மீது மூன்று காவல்துறையினர் மேற்கொண்ட சித்ரவதைக் கொடூரங்கள், இணையதளத்தில் காணொளிகளாக வெளிவந்துள்ளதைப் பார்த்த குடிமக்களும் தானும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்று, கர்தினால் பியட் அவர்கள் கூறியுள்ளார்.
இக்கொடூர வன்முறையை நடத்தியவர்கள் கடுமையாய்த் தண்டிக்கப்படவேண்டும் மற்றும், இத்தகைய கொடூரங்கள் இனிமேலும் தொடர்ந்து இடம்பெறக் கூடாது என்று, மொரீஷியஸ் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் பியட்.
காவல்துறையின் இவ்வன்முறை குறித்து பீதேஸ் செய்திக்கு எழுதியுள்ள கர்தினால் பியட் அவர்கள், சட்டம், ஒழுங்கையும், குடிமக்களையும் பாதுகாக்கவேண்டிய காவல்துறையினரே இத்தகைய வன்முறைகளை நடத்தியிருப்பது அதிரச்சி தருகின்றது, மற்றும், அத்துறையே, சமூகப் பதட்டநிலைகளுக்குக் காரணமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளானவர்களின் உடல்கள் மட்டும் அல்ல, அவற்றோடு அவர்கள், அவர்களின் குடும்பம், ஏன் சமுதாயம் முழுவதன் மாண்பே சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள கர்தினால் பியட் அவர்கள், குற்றவாளிகள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.(Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்