தேடுதல்

சிங்கப்பூர் திருஅவைக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு சிங்கப்பூர் திருஅவைக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு  

புதிய கர்தினாலுக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து

பேராயர் William Goh அவர்கள், சிங்கப்பூரில் நல்லிணக்கத்தை ஊக்குவித்து வருகிறார், மற்றும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருகிறார் - பிரதமர் லீ

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்களுக்கு, அந்நாட்டு பிரதமர் Lee Hsien Loong அவர்கள் தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்..

2013ம் ஆண்டு மே மாதத்திலிருந்து சிங்கப்பூர் சிறுபான்மை கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்தி வருகின்ற பேராயர் William Goh அவர்கள், சிங்கப்பூரிலுள்ள மற்ற மதத்தினரோடு இணைந்து நல்லிணக்க வாழ்வை ஊக்கப்படுத்தி வருகிறார், மற்றும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருகிறார் என்று, பிரதமர் லீ அவர்கள் பாராட்டியுள்ளார்.

பேராயர் வில்லியம் அவர்கள், சிங்கப்பூர் வரலாற்றில் முதல் கர்தினால் என்றும், இவர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, கடந்த ஆண்டில் இருநூறாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய சிங்கப்பூர் கத்தோலிக்க சமுதாயத்திற்குச் சிறப்புசேர்க்கின்றது என்றும், பிரதமர் லீ அவர்கள், ஜூன் 01, இப்புதனன்று தன் முகநூலில் எழுதியுள்ளார்.

சிங்கப்பூரில் கத்தோலிக்கம் பரவத் தொடங்கியதன் 200ம் ஆண்டு நிறைவு, 2021ம் ஆண்டு டிசம்பரில் சிறப்பிக்கப்படபோது, பேராயர் வில்லியம் கோ அவர்களுடன் எடுத்த புகைப்படத்தையும், பிரதமர் லீ அவர்கள் தன் முகநூலில் வெளியிட்டுள்ளார்.

பேராயர் வில்லியம் அவர்கள், தனது புதிய பொறுப்புக்களை ஞானம் மற்றும், தாழ்ச்சியோடு தொடர்ந்து ஆற்றுவார் மற்றும், இப்புதிய நியமனம், சிங்கப்பூரையும் கடந்து, பரந்த அளவில் திருஅவைக்குப் பணியாற்ற அவரைத் தூண்டும் என்பதில் தான் நம்பிக்கையோடு இருப்பதாகவும் பிரதமர் லீ அவர்கள் எழுதியுள்ளார்.

பேராயர் William Goh அவர்கள், சிங்கப்பூர் நாட்டின் 56 இலட்சம் மக்களில் ஏறத்தாழ மூன்று இலட்சம் கத்தோலிக்கரின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

பல இனங்கள் மற்றும், பல மதங்களைக்கொண்ட சிங்கப்பூர் சமுதாயத்தில் புத்த மதத்தினர் 31.1 விழுக்காடு, கிறிஸ்தவர்கள் 18.9 விழுக்காடு, முஸ்லிம்கள் 15.6 விழுக்காடு, தாவோயிச மதத்தினர் 8.8 விழுக்காடு, மற்றும், இந்துக்கள் 5 விழுக்காடு. மேலும், ஏறத்தாழ இருபது விழுக்காட்டினர் எம்மதத்தையும் சார்ந்தவர் இல்லை என்று அந்நாட்டில் 2020ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்கர் பெரும்பாலும் சீனர்கள், மற்றும், அந்நாட்டிற்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும், அவர்களின் வாரிசுகள் ஆவர். இக்கத்தோலிக்கர் 32 பங்குத்தளங்களின் உள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2022, 15:45