அமேசான் பழங்குடி மக்களோடு சேர்ந்து துணிந்து நில்லுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
எனது சகோதரர்களே, அமேசான் பழங்குடி மக்கள் மற்றும், ஏழைகளோடு சேர்ந்து சவாலை எதிர்கொள்ளுங்கள், இவ்வாறு செயல்படவில்லையென்றால் நீங்கள் ஏற்கனவே தவறு செய்கின்றீர்கள் என்று, பிரேசில் நாட்டு 17 ஆயர்களை, ஜூன் 20 இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி உள்ளிட்ட வட மாநில ஆயர்கள் 17 பேரை, அத் லிமினாவை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்து, அவர்களோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
அச்சமயத்தில் ஆயர்கள், 1989ம் ஆண்டில் அப்பகுதியின் பழங்குடி கலைஞர் ஒருவர் "SOS Yanomami" என்ற தலைப்பில் வரைந்த ஓவியத்தையும், தொப்பி ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினர்.
பிரேசில் ஆயர்களின் இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்ட Rondônia மாநிலத்தின் Porto Velho பேராயர் Roque Paloschi அவர்கள், ஒன்றிப்பு, எதிர்நோக்கு, துணிச்சல் ஆகிய பண்புகளைக் கொண்டதாய் இச்சந்திப்பு இருந்தது என்று கூறினார்.
இச்சந்திப்பின்போது, அமேசான் பகுதியில் திருஅவைகளின் எதார்த்தச் சூழல்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததால் இது ஒன்றிப்பு உணர்வை வெளிப்படுத்துவதாகவும், மேய்ப்பர்களாக நாங்கள் ஆற்றவேண்டியது என்ன என்பதை திருத்தந்தை எடுத்துரைத்ததால் இது எதிர்நோக்கு கொண்டதாகவும் இருந்தது என்று பேராயர் Paloschi அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஏழைகளோடு சேர்ந்து பணியாற்ற, எல்லாவற்றுக்கும் மேலாக, கலாச்சாரங்களை மதிப்பது எவ்வாறு என்பதை திருஅவை அறிந்திருக்கவேண்டும் என்ற உள்தூண்டுதல் கிடைத்ததால், இச்சந்திப்பு துணிச்சலை அளித்தது என்று, பேராயர் Paloschi அவர்கள் கூறியுள்ளார்.
அருள்பணியாளர்கள் பற்றாக்குறை, பொருளாதார இன்னல்கள், மக்கள் வாழ்கின்ற ஏழ்மையான சூழல் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் எங்களிடம், துணிந்து நில்லுங்கள், மந்தையின் உணர்வுகளை அறிந்த மேய்ப்பர்களாய் இருங்கள் என்று திருத்தந்தை ஊக்கப்படுத்தினார் எனவும், பேராயர் Paloschi அவர்கள் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்