திருத்தந்தையர் வரலாறு : திருத்தந்தை 22ம் யோவான் - இறுதி பாகம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை 22ம் யோவானுக்கு எதிராக எழுந்த லூயி மன்னர், பிரான்சிஸ்கன் துறவியான Pietro Rainalducci என்பவரை எதிர் திருத்தந்தையாக நியமித்தது குறித்து கடந்த வாரம் கண்டோம். இவ்வேளையில், உரோம் நகரில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வு குறித்தும் நாம் தெரிந்திருக்க வேண்டும். இன்று, நாம் வேண்டப்படாதவர்களுக்கு எதிர்ப்புக் காட்டும் விதமாக அவர்களின் கொடும்பாவியை எரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதே நிகழ்வு 1328ம் ஆண்டு மே மாதம் அதாவது ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் உரோம் நகரில் இடம்பெற்றுள்ளது. வைக்கோல் போரால் செய்யப்பட்ட திருத்தந்தை 22ம் யோவானின் உருவப்பொம்மை உரோம் நகரில் பொது மக்கள் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அதேவேளை, மே மாதம் 22ம் தேதி எதிர் திருத்தந்தை 5ம் நிக்கலஸ் என்ற பெயருடன் பிரான்சிஸ்கன் துறவி Pietro Rainalducci அவர்கள் மன்னரால் நியமிக்கப்பட்டாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அதிக வரி வசூலிக்கத் துவங்கிய மன்னரையே அவர்கள் வெறுக்கத் துவங்கினர். பல நகர்களும், மன்னர்களும் திருத்தந்தை 22ம் யோவானுக்கே கீழ்ப்படிவோம் என வெளிப்படையாக அறிவித்ததால் எதிர்திருத்தந்தையால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, தான் செய்தது தவறு என கடிதம் எழுதிய எதிர் திருத்தந்தை 5ம் நிக்கலஸ் அவர்கள், 1330ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திருத்தந்தை 22ம் யோவான் அவர்களிடம் வந்து, மன்னிப்பை வேண்டி திருஅவையில் ஒப்புரவாகினார். தன் இறுதி நாட்களை இறைவேண்டலிலும், கல்வியிலும் செலவிட்டார், இந்த எதிர்திருத்தந்தை. இதற்கிடையில், இத்தாலி முழுவதும் திருத்தந்தை 22ம் யோவானின் தலைமையின்கீழ் வந்தது. திருத்தந்தையும் லூயி மன்னருக்கு எதிரான சிலுவைப்போரை அறிவித்தார்.
மன்னர் லூயியும் ஜெர்மனிக்குத் திரும்பவேண்டியதாகியது. மோதல்கள் தொடர்ந்து வந்ததால் வெறுப்புற்றிருந்த ஜெர்மன் மக்கள், மன்னருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கத் துவங்கினர். இதனால், திருத்தந்தையுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மன்னர் லூயி. ஆனால், அவர் பேரரரசர் என்ற பட்டத்தை விட்டுவிடவேண்டும் என்ற திருத்தந்தை 22ம் யோவானின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். இது குறித்து விவாதிப்பதையே தள்ளிப்போட்டார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் திருத்தந்தையின் படிப்பினைகள் குறித்த ஒரு குழப்பமும் இறையியலாளர்களிடையே நிலவியது. திருத்தந்தையாவதற்கு முன்னால், 22ம் யோவானின் போதனைகள், அப்போது நடைமுறையில் இருந்த, அதாவது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த சில நம்பிக்கைகளுக்கு சிறிது எதிராக இருந்தது. அதாவது, இவ்வுலகிலிருந்து பிரிந்து செல்லும் ஆன்மாக்கள், இறுதித் தீர்ப்புவரை இறைவனை முகம்முகமாகப் பார்ப்பதில்லை என்பது 22ம் யோவானின் போதனையாக இருந்து வந்தது. இதையே திருத்தந்தை ஆனபின்னரும் தன் மறையுரைகளில் வலியுறுத்தினார் திருத்தந்தை. இப்போதனை, இவரின் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இவர் கிறிஸ்தவப் படிப்பினைகளுக்கு எதிராகப் பேசுகிறார் என குற்றஞ்சாட்டினர். 1334ம் ஆண்டு சனவரி மூன்றாம் தேதி கூடிய கர்தினால்கள் அவையில், இக்கருத்து குறித்து விவாதிக்கப்பட்டபோது, திருத்தந்தையோ, தான் விவிலியத்திற்கு எதிராகவோ, விசுவாசத்திற்கு எதிராகவோ பேசவில்லை எனவும், அதேவேளை, இது குறித்து ஒரு தீர்மானமான முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறினார். இருப்பினும், இவர் இறப்பதற்கு முன்னரே, தன் பழைய கருத்துக்களை மாற்றிக்கொண்டு, இவ்வுலகிலிருந்து பிரிந்து செல்லும் ஆன்மாக்கள் இறுதித் தீர்ப்புக்கு முன்னரே இறைவனைக் காணமுடியும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டார்.
திருத்தந்தை 22ம் யோவான் தன் வாழ்நாளின்போது, பல மன்னர்களுக்கு நல்வழிகாட்டியாக இருந்துள்ளார். மன்னர்களின் மோதல்களை சுமுகமாகத் தீர்க்க உதவியுள்ளார். பல கல்லூரிகள் திறக்கப்பட நிதியுதவிகள் அளித்துள்ளார். அறிஞர்களை ஊக்குவித்துள்ளார். Avignonல் ஒரு சட்ட நூலகத்தை அமைத்தார். தூரகிழக்கு நாடுகளுக்கு மறைபோதகர்களை அனுப்பி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். திருப்பீட நிர்வாகத்தை விரிவாக்கி சீரமைத்தார். இவ்வாறு பல பெருமைகளைக் கொண்ட திருத்தந்தை 22ம் யோவான் அவர்கள், தன் 85ம் வயதில் 1334ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி காலமானார்.
நேயர்களே, உரோம் நகரிலிருந்து பிரான்சின் அவிஞ்ஜோனுக்கு இடம் மாறிய திருஅவை தலைமைப் பீடத்தின் தொடர் வரலாறு குறித்து வரும் வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்