தேடுதல்

அன்னை தெரேசா நினைவு நாளில் அருள்சகோதரிகள் உணவு வழங்குகின்றனர் அன்னை தெரேசா நினைவு நாளில் அருள்சகோதரிகள் உணவு வழங்குகின்றனர் 

நிகராகுவாவிலிருந்து அன்னை தெரேசா சபை அருள்சகோதரிகள் வெளியேற்றம்!

“தற்போது எங்களின் பணியை மேற்கொள்ள முடியாத அளவிற்கு நாங்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளோம்”

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நிகராகுவாவின் சர்வாதிகாரம் அருள்சகோதரிகளை நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது எனக்கு வருத்தமளிக்கிறது என்றும், அருள்சகோதரிகள் வழங்கும் அன்பும் அர்ப்பணமும் நிறைந்த பணிக்கு நானே சாட்சியாக இருக்கிறேன் என்றும கடவுள் அவர்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக என்று துணை ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவிலிருந்து புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு சபை அருள்சகோதரிகள் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டதைக் குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் மனாகுவாவின் துணை ஆயர் Silvio José Baez.

அந்நாட்டில் நிகழ்ந்துவரும் அரசின் அடக்குமுறைகளால் கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அதன் பணித்தளங்கள்மீது நடத்தப்பட்டுவரும் தொடர்ச்சியான தாக்குதல்களால் இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் 28, செவ்வாயன்று, அருள்சகோதரிகள் வெளியேற்றப்பட்ட செய்தி குறித்து  பல கத்தோலிக்கத் தலைவர்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளதுடன்,  நிகராகுவாவின்  ஊடகங்களும் இதுகுறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

நிகராகுவாவில் கைவிடப்பட்ட இளம் பருவத்தினருக்கான இல்லம், முதியோர்களுக்கான இல்லம், மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான நர்சரி பள்ளி ஆகியவற்றை புனித அன்னை தெரெசாவின் பிறரன்பு சபை அருள்சகோதரிகள் நடத்தி வருகின்றனர்.

நிகராகுவாவின் அரசுத் தலைவர் டேனியல் ஒர்தேகாவும் அவரது கூட்டணியினரும் கத்தோலிக்கத் திருஅவையையும் குடிமக்களையும் அதிகளவில் துன்புறுத்தியுள்ளனர் என்று கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் கருத்துக்கணிப்புகள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாகவும், தற்போது அவர் தொடர்ந்து அரசியல் கைதிகளை அடைத்து வைத்துள்ளதுடன் அரசியல் காரணங்களை முன்வைத்து கடைகளை அனைத்தையும் மூடியுள்ளார் என்றும் யூக்கா செய்தி தெரிவிக்கிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2022, 14:40