‘செங்கடலைக் கடக்கும் நிகழ்வையொத்த’ பல்சமய இறைவேண்டல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் உலக அளவில் உருவாக்கியுள்ள பதட்டநிலைகள் மற்றும், துன்பங்களைக் கருத்தில்கொண்டு, கிறிஸ்தவ தொழில் அதிபர்கள் மற்றும், பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள், இம்மாதம் 21ம் தேதி உலகில் அமைதிக்காக இணையதள இறைவேண்டல் நிகழ்வு ஒன்றை நிகழ்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இச்செப நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள Nelida Ancora அவர்கள் கூறுகையில், சமுதாயம் அனைத்தின் வருங்காலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ள இப்போதைய வரலாற்று தருணத்தில், இஸ்ரயேல் மக்கள் மீட்பை நோக்கி செங்கடலைக் கடந்துவந்த விவிலிய நிகழ்வு நினைவுக்கு வந்தது என்று கூறியுள்ளார்.
மோசே இஸ்ரேல் மக்களை மீட்பை நோக்கி வழிநடத்தியதுபோல, அனைத்து மதங்கள் மற்றும், சமய நிறுவனங்களின் தலைவர்கள், அமைதி மற்றும், வளர்ச்சி ஆகிய, கடவுளால் வாக்குறுதியளிக்கப்பட்ட பூமியை எட்டுவதற்கு ஒன்றுசேர்ந்து பணியாற்றத் தொடங்கவேண்டும் என்றும், Nelida Ancora அவர்கள் கூறியுள்ளார்.
வர்த்தக உலகில் கிறிஸ்தவ சமூக எண்ணத்தை ஊக்கப்படுத்தும், UNIAPAC எனப்படும், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடல் அமைப்பின் பிரதிநிதியாகிய Nelida Ancora அவர்கள், இந்த பல்சமய இறைவேண்டல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.
உலகின் அமைதிக்காக, இணையதளம் வழியாக நடைபெறும் இந்நிகழ்வு, ஜூன் 21, வருகிற செவ்வாய் உரோம் நேரம் மாலை 4 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்கப்படுத்தும் UNIAPAC அமைப்பு, அமைதிக்காக மதங்கள் என்ற அமைப்போடும் இணைந்து பணியாற்றுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னர், இவ்விரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் போர் குறித்த கவலையைத் தெரிவித்து, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்