அருளாளர் இராணி மரியாவைப் பற்றிய புதிய குறும்படம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மாறிவரும் இக்காலச் சூழலில், மறைப்பணி என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே உள்ளது என்று குறும்பட வெளியீட்டு விழா ஒன்றில் கூறியுள்ளார் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அருள்பணியாளர் Babu Joseph.
போபாலின் அமலா மறைமாநிலத்தின் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (FCC) தயாரித்துள்ள அருளாளர் இராணி மரியா பற்றிய ‘மன்னிப்பின் கதை’ என்ற 42 நிமிட குறும்படம் மே 27, கடந்த வியாழனன்று இந்தூரில் Prerna Sadanல் வெளியிடப்பட்டுள்ளது.
இக்குறும்படம் மன்னிப்பை மையமாகக் கொண்டிருந்தாலும், ஏழைகளுக்கு தன்னலமின்றி சேவை செய்யும்போது ஒரு கிறிஸ்தவ மறைப்பணியாளர் எப்படிப்பட்ட சவால்களையெல்லாம் சந்திக்கவேண்டும் என்று வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவித்தார் அருள்பணியாளர் Babu Joseph
மேலும் கடந்த காலங்களைப் போலல்லாமல் ஏழைகள் மத்தியில் நாம் ஆற்றவேண்டிய சமூக நலப்பணிகள் இன்னும் அதிகச் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும், இக்குறும்படம் நமக்குத் திட்டவட்டமாய் எடுத்துரைக்கிறது என்று சுட்டிக்காட்டினார் அருள்பணியாளர் Babu Joseph.
இவ்விழாவில் கலந்துகொண்ட இந்தூர் ஆயர் Bishop Chacko Thottumarickal, அருளாளர் இராணி மரியாவின் தன்னலமற்ற பணிகளையும், மறைசாட்சிய வாழ்வையும் நினைவுகூர்ந்து போற்றினார்.
இந்தூர் மறைமாவட்டத்தால் நடத்தப்படும் நிகழ்நிலை தகவல் தொடர்பு ஊடகமான ஆத்மதர்ஷன் தொலைக்காட்சியின் தொழில்நுட்ப உதவியுடன் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Franciscan Clarist சபையை சேர்ந்த அருளாளர் இராணி மரியா, பிப்ரவரி 25, 1995 அன்று மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது சம்மந்தர் சிங் என்பரால் கத்தியால் குத்திக்கொள்ளப்பட்டார். இவர் 2017ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்