உக்ரைனில் அமைதியைக்கொணரும் முயற்சிகள் புதுப்பிக்கப்படவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைனில் நிலையானதன்மை மற்றும், அமைதியைக்கொண்டு வருவதற்கு புதிய யுக்திகளைப் பரிந்துரைத்துள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவாக்குவதில் நம்பகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, ஐரோப்பிய ஆயர்கள் அவ்வொன்றியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாண்டு பிப்ரவரியில் உக்ரைனில் தொடங்கிய போர், புவிசார் அரசியலிலும் தாக்கத்தை உருவாக்கியுள்ள நிலையில், ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் தயாரித்துவருவதை முன்னிட்டு, COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அத்தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்பேனியா, வட மாசிடோனியா ஆகிய இரு நாடுகளை இணைப்பது, மற்றும், அதில் உக்ரைன் நாடு இணைவதற்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்குவது உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவாக்கும் நடவடிக்கைகள் நம்பகமான முறையில் இடம்பெறவேண்டும் என்றும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“ஐரோப்பா, அமைதியை ஊக்குவிக்கும் தன் அழைப்பைப் புதுப்பிக்கவேண்டும்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், ஐரோப்பாவிலும், உலகிலும் நிலையானதன்மை மற்றும், அமைதியைக் கொணர்வதற்கு, ஐரோப்பாவிற்கு இருக்கின்ற முக்கியமான பங்கை முழுவதும் உணருமாறு, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடம் கூறியுள்ளனர்.
ஆயர் Stepan Meniok
மேலும், இரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் உக்ரைனின் Donbas மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்களுக்காகச் செபிக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார், உக்ரைனின் Donetsk கிரேக்க கத்தோலிக்க ஆயர் Stepan Meniok.
அப்பகுதியில் போர் தொடர்ந்து இடம்பெற்றாலும், அருள்பணியாளர்கள் மக்களோடு தங்கியிருப்பார்கள் என்றும், ஆபத்துக்களின் மத்தியில் அருள்பணியாளர்கள் தினமும் மக்களுக்கு பணியாற்றி வருகின்றனர் என்றும், வத்திக்கான் செய்திகளிடம் கூறியுள்ளார், ஆயர் Stepan Meniok.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்