ஏழை நாடுகளுக்காக குரல் எழுப்பும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உலகில் பல இலட்சக்கணக்கான மக்கள் உணவு நெருக்கடியை எதிர்நோக்கிவரும் இந்நாள்களில், அவர்களுக்கு உணவு வழங்கவும், அவர்களின் வாழ்வைக் கட்டியெழுப்ப உதவவும், அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவு தேவைப்படுவதாக CAFOD எனும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.
உலகம் முழுவதும் எண்ணற்ற குடும்பங்கள் உணவுக்காகத் துன்பங்களை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கும் இந்த அமைப்பு, கென்யா, எத்தியோப்பியா, தென் சூடான் ஆகிய நாடுகளில் மட்டும் 2 கோடிப் பேர் வாழ்வதற்கான பெரும்போராட்டங்களை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கின்றது.
காலநிலை மாற்றத்தால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் மக்கள், குறிப்பாக கிழக்கு ஆப்ரிக்க மக்கள், உணவு விநியோக சங்கிலித்தொடர் அறுபட்டுள்ளதாலும், வறட்சி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தலைவிரித்து ஆடுவதாலும், மற்றவர்களின் உதவியையும், தாராளமனத்தையும் சார்ந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் கத்தோலிக்க CAFOD பிறரன்பு அமைப்பு, ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளின் ஏழைகளிடையே சிறப்புப் பணியாற்றி வருகிறது.
உணவு நெருக்கடியை அதிகமாக அனுபவித்து வந்த மக்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதோடு, தற்போது, உக்ரைனில் இரஷ்யாவின் ஆக்ரமிப்பாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுவருவதாக கவலையை வெளியிட்டுள்ளது இந்த பிறரன்பு அமைப்பு.
வட கென்யா பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நிமிடங்களே மழை பெய்துள்ளதாகக் கூறும் CAFOD அமைப்பு, வறட்சியால் பெருமளவான கால்நடைகள் செத்து மடிந்துள்ளதாகவும், இதனால் மக்களின் வாழ்க்கைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு ஆப்ரிக்கக் கண்டத்திற்கான நிதியுதவிகளைப் பாதியாகக் குறைத்துள்ள பிரிட்டனின் நடவடிக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என விண்ணப்பிக்கும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகாணல், முறிவுபட்டுள்ள உணவு அமைப்புமுறையை சீர்செய்தல், சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுதல், என பல பரிந்துரைகளை அனைத்துலக சமுதாயத்திற்கு முன்வைத்துள்ளது.(ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்