பெந்தக்கோஸ்து ஞாயிறு: நீதியின் குரலாக ஒலிக்கும் தூய ஆவியார்
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. திப 2: 1-11 II. உரோ 8: 8-17 III. யோவா 14: 15-16, 23-26)
கடந்த மே மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 10 அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். அவர்களில் டைட்டஸ் பிராண்ட்ஸ்மாவும் ஒருவர். இவருடைய வாழ்வும் மரணமும் சற்று வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் தக்காவோ வதைமுகாமில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவர். 1881ம் ஆண்டில் நெதர்லாந்தில் பிறந்த இவர், கார்மேல் சபைத் துறவியாக அருள்பொழிவு செய்யப்பட்டார். உரோம் பாப்பிறை கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில், முனைவர் பட்டம் பெற்று, சமூகவியல் படிப்பையும் முடித்தவர். மெய்யியல் மற்றும், தியானயோகிகள் ஆழ்நிலை வரலாறு கல்வியைக் கற்றுக்கொடுத்தவர். நெதர்லாந்து ஆயர்கள், இவரைக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் செய்தித் தொடர்பாளராக நியமித்து, நாத்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து விளம்பரங்கள் செய்யுமாறு பணிக்கப்பட்டார். 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்தபோது பிராண்ட்ஸ்மா கைது செய்யப்பட்டார். கத்தோலிக்கச் செய்தித்தாள்கள் நாத்சி பிரச்சாரத்தை வெளியிட வேண்டும் என்று அவர் அறிவித்தால், அவர் துறவு மடத்தில் அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்படுவார் என்று நாத்சிகள் அவரிடம் கூறியபோது பிராண்ட்ஸ்மா அதை ஏற்க மறுத்துவிட்டார். அதற்காக அவர் டச்சாவ் வதை முகாமில் கொடுந்துயரங்களுக்கும் பட்டினிக்கும் ஆளானார். அதே ஆண்டு ஜூலை 26ம் நாளன்று கார்போலிக் அமிலம் எனப்படும் நஞ்சு ஊசி செலுத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 61.
நம் அன்னையாம் திருஅவை இந்நாளில் பெந்தக்கோஸ்து என்று அழைக்கப்படும் தூய ஆவியானவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்நாளைத் திருஅவைப் பிறந்த நாளாகவும் நாம் சிறப்பிக்கின்றோம். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின்பு அவரின் துணையாளராக வரும் தூய ஆவி திருத்தூதர்களை இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் நீட்சிகளாக வழிநடத்துகிறார். படைப்பின் தொடக்கத்திலேயே நீர்த்திரளின்மேல் அசைந்தாடிக் கொண்டிருந்த கடவுளின் ஆவியானவர் (தொநூ 1:2) உலகின் இறுதிவரைக்கும் உடன்பயணிக்கும் துணையாளராகச் செயல்படுகின்றார்.
“உலகிலே செய்யுமாறு தந்தை மகனிடம் ஒப்படைத்த வேலையைச் செய்துமுடித்ததும் திருஅவையை எந்நாளும் தொடர்ந்து தூய்மையாக்கவும், இதனால் நம்பிக்கை கொண்டோர் எல்லோரும் கிறிஸ்துவின் வழியாக ஒரே ஆவி மூலம் தந்தையை அணுகும் பேறுபெறவும் பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவி அனுப்பப்பெற்றார். இவரே வாழ்வின் ஆவியாக, அதாவது பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வை அளிப்பவராகத் திகழ்கின்றார். ஆவியார் திருஅவையையும் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களையும் கோவிலாகக் கொண்டு குடியிருக்கிறார்; அவர்களிடமிருந்த வண்ணம் அவர் வேண்டுகிறார்; அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கின்றார்; முழு உண்மையை நோக்கித் திருஅவையை வழி நடத்துகிறார்; ஒன்றிப்பாலும் பணியாலும் அதில் ஒற்றுமையை விளைவிக்கிறார்; இன்னும் பலதரப்பட்ட திருஅவை ஆட்சி சார்ந்த கொடைகளையும் அருள்கொடைகளையும் அதற்கு அளித்து அதனை வழிநடத்துகிறார்; தம் கனிகளால் அதற்கு அணிசெய்கிறார்; நற்செய்தியின் வல்லமையால் திருஅவை இளமைப் பொலிவோடு துலங்கச் செய்கிறார்; என்றும் அதற்கு மறுமலர்ச்சி தருகிறார்; அதன் மணமகனான கிறிஸ்துவுடன் முழுமையாய் ஒன்றிக்கத் திருஅவையை வழிநடத்திச் செல்கிறார்” என்று தூய ஆவியாரின் செயல்பாடுகள் பற்றி ‘திருஅவையைத் தூய்மையாக்கும் தூய ஆவியார்’ என்ற தலைப்பில் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் எடுத்தியம்புகின்றன.
நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" (யோவா 16:12-13) என்று ஏற்கனவே தூய ஆவியார் வருகையின் நோக்கம் பற்றி தொடக்க உரைக் கொடுத்துவிட்டார் இயேசு ஆண்டவர். இன்றைய நற்செய்தியிலே, “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவா 14:26) என்கின்றார் இயேசு. எனவே, தூய ஆவியானவர் கற்றுத்தரும் செயல்களில் நீதிக்கான செயல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே பெந்தக்கோஸ்து பெருவிழாவான இன்று, ‘நீதியின் குரலாக ஒலிக்கும் தூய ஆவியானவர்’ என்ற தலைப்பில் நம் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம்.
தன் சீடர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்த குரு ஒருவர், ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் இரண்டு ஓநாய்கள் வாழ்கின்றன. அவை எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றன என்றார். உடனே எழுந்த சீடர் ஒருவர், “குருவே, அப்படியென்றால் இறுதியில் எந்த ஓநாய் சண்டையில் வெற்றியடையும்” என்று கேட்டார். அதற்கு குரு, “நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவூட்டி வளர்க்கிறாயோ அந்த ஓநாய்தான் இறுதியில் வெல்லும்” என்றார் குரு. நமது உள்ளங்களிலும் தூய ஆவிக்கும் தீய ஆவிக்குமான போராட்டம் இடைவிடாது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதாவது, வாழ்வா சாவா, நன்மையா தீமையா, ஒளியா இருளா, உயர்வா, தாழ்வா, நீதியா அநீதீயா என மனிதர் தனது வாழ்க்கையில் போராடுகிற பொழுதெல்லாம் அவர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தே அவரின் வாழ்வு மாறுபடுகிறது. குறிப்பாக நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், உடன்பிறந்த உணர்வுநிலை என உயர்ந்த விழுமியங்கள் பக்கம் நிற்கவேண்டுமென்றால் அவர் கட்டாயம் தூய ஆவியானவரின் உடனிருப்பைத்தான் தேடவேண்டும். இவைகளன்றி, சுயநலம் கொண்டு இவ்வுலகப் பேரின்பங்களில் மூழ்கி வாழ நினைப்பவர்கள் தீய ஆவியின் பக்கம் நின்றுகொள்வர். உலகம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை இந்த இரண்டு ஆவிகளுக்கான போராட்டங்கள் என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆக, தூய ஆவியாரின் பக்கம் நிற்பவர்கள் நீதிக்காகத் தங்கள் இன்னுயிரை இழப்பவர்களாகவும், தீய ஆவியின் பக்கம் நிற்பவர்கள், அவர்களின் உயிர்களைப் பறிக்கும் தீயவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும் மூத்த பெண் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ். பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றியவர். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த இவர் சமூகச் சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், போராட்டக்காரராகவும் விளங்கினார். வகுப்பு வாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிராகச் செயல்பட்டவர். மத்திய அரசை விமர்சித்தும், இந்துத்துவாவை எதிர்த்தும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை இவர் எழுதி வந்தார். கோரக்பூரில் நிகழ்ந்த குழந்தைகள் மரணம், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து எழுதிய இவர், பணமதிப்பிழக்கம், ரோஹிங்க்யா இனத்தவர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் பேசி வந்தார். இவரின் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றுக்காக பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி இவர்மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். வலது சாரிகளை கடுமையாக விமர்சித்து வந்த கவுரி லங்கேஷ், எப்போதும் தன் கருத்துக்களை முன்வைக்கத் தயங்காத துணிச்சல் மிக்கவர்.
இந்நிலையில், 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று, வெளியே சென்று விட்டு தனது காரில் வீட்டுக்கு திரும்பினார். காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்வதற்காக வாயிற்கதவைத் திறக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், அவரைத் துப்பாகியால் சரமாரியாக சுட்டனர். இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இக்கொலைக்குப் பல்வேறு கண்டனக் குரல்களும் எழுந்தன. ஆகவே நீதிக்காகக் குரல் கொடுத்து உயிர்துறக்கும் அனைவருமே தூய ஆவியாரால் இயக்கப்படுபவர்களே!
பழைய ஏற்பட்டு நூல்களில் இறைவாக்கினர்கள் தூய ஆவியாரின் எழுச்சிப்பெற்று நீதிக்காகக் குரல்கொடுப்பதைக் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, சிறிய இறைவாக்கினர்கள் மிகப்பெரும் துணிச்சலோடு உண்மையின் பக்கம் நின்றுகொண்டு நீதிக்காகக் குரல் எழுப்புகின்றனர். “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்; ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’ ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் (ஆமோ 8:4-7). அவ்வாறே முதியவர் இருவரின் தீய ஆசைக்கு இணங்காத சூசன்னா என்ற தெய்வபயம் நிறைந்த இளம்பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அவர் சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட நிலையில் கடவுளை நோக்கி அபயக்குரல் எழுப்புகிறார். அப்போது, தானியேல் என்னும் இளைஞன் வழியாகக் கடவுள் அப்பெண்ணைக் காப்பாற்றி நீதியை நிலைநிறுத்துவதைப் பார்க்கிறோம். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார். கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்ட பொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டிவிட்டார். தானியேல் உரத்த குரலில், “இவருடைய இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கத்தினார். (தானி (இ) 2:44)
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தார் தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா என்பவர். அவர் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற நேரம். இந்தச் சம்பவம் சோபியாவுக்கு மிகுந்த வேதனையை அளித்ததால், அதனைத் தங்க முடியாத அவர் தமிழிசையைக் கண்டதும் மிகவும் துணிச்சலாக உரத்தக் குரலில், பாசிச பா.ஜ. ஆட்சி ஒழிக! பாசிச பா.ஜ. ஆட்சி ஒழிக! என்று கத்தினார். அதைக் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன், விமான நிலையத்தில் அவரை மிரட்டும் நோக்கத்தில் அவரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். கூடவே பா.ஜ தொண்டர்களும் அவருடன் சேர்ந்துகொண்டு தீட்டியுள்ளனர். அதன் பிறகு தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல் துறையினர் சோபியாமீது மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தொழுகைக் கூடத்தில் எசாயாவின் ஏட்டுச்சுருளை எடுத்து வாசிக்கத் தொடங்கிய நமதாண்டவர் இயேசு, “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்” (லூக் 4:18) என்றுதான் தொடங்குகின்றார். ஆகவே, எங்கெல்லாம் அநீதி தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் ஆவியானவரின் நீதிக்கான குரலாக நாம் ஒலிக்கவேண்டும். அதற்கான அருளை இந்நாளில் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்