தேடுதல்

இறைவேண்டல் செய்யும் உக்ரேனிலிருந்து புலம்பெயர்ந்த பெண்  இறைவேண்டல் செய்யும் உக்ரேனிலிருந்து புலம்பெயர்ந்த பெண்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 32-2–ஆண்டவரே எனது புகலிடம்!

இறைவனின் மீட்புத் திட்டத்தில் ரூத்துவுக்கு புகலிடம் கொடுக்கும் போவாசும், அவரிடம் புகலிடம் பெறும் ரூத்துவும் பங்குபெறும் பேறுபெறுகின்றனர்.
திருப்பாடல் 32-2

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தமிழக வரலாற்றில் அனைத்து மக்களுக்கும் புகலிடமாய் விளங்கியவர் காமராஜர் அவர்கள். அவரது ஆட்சியின்போது, ஏழைகள், வறியவர்கள், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என எல்லாருக்கும் புகலிடம் தருபவராக இருந்தார். எவ்வித வேறுபாடுமின்றி எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் அனைவருக்குமே அவர் புகலிடமாக விளங்கினார். அவரது வாழ்வியல் நெறிமுறைகள், அணுகுமுறைகள், செயல்பாடுகள் என அனைத்திலும் அப்பண்பை துலங்கிடச் செய்தார். சுயநலத்திற்கு இடம்கொடாமல் பொதுநலத்திற்கு இடம்கொடுத்ததன் காரணமாக இப்பண்பை அவர் வளர்த்துக்கொள்ள சாத்தியமாயிற்று. காமராஜர் சுருக்கமாகப் பேசினாலும் நறுக்கென்று பேசக் கூடியவர். ‘‘ஆகட்டும், பார்க்கலாமின்னேன்’’ என்றுதான் அவர் சொல்வார். ஆனால், அந்தச் செயலையே சாதித்தும் காட்டியிருப்பார். அவர் அதிகம் படிக்காதவர் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டது. அதற்கு காமராஜர் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிப் பதிலளித்தார். ‘‘நான் படிக்காதவன் என்கிறார்கள். அது உண்மைதான். ஆனாலும், நான் இன்னொரு படிப்பைப் படித்தவன். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கே நகரங்களாகவும், சிற்றூர்களாகவும், கிராமங்களாகவும் எத்தனை ஊர்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். வெறும் ஊர்களை மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள்; எந்தெந்த ஊர்களில் என்னென்ன தொழில்கள் நடக்கின்றன; எந்தெந்த ஊர்களில் என்னென்ன மாதிரி மக்கள் வாழ்க்கைத் தரம் இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஓரளவு தெரியும். எந்தெந்த ஊர்களுக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றியும் நான் நன்கு அறிவேன். மேலும் எந்தெந்த ஊர்களில் விவசாயம் நல்லபடியாக நடக்கின்றன என்பதும் எனக்குத தெரியும். இன்னும் ஏரி, குளங்கள் வசதியும், சாலை வசதியும் தேவைப்படுகிற ஊர்களைப் பற்றியும் அறிவேன். அதுபோல ஒவ்வோர் ஊரிலும் கல்வி வசதியும், சுகாதார வசதியும் எப்படி உள்ளன என்பதையும் அறிவேன். இதுபோல இந்தியாவைப் பற்றியும் ஓரளவு எனக்குத் தெரியும். இந்தப் படிப்பைத் தவிர, ஒரு வரைபடத்தில் குறுக்கு, நெடுக்காகப் போடப்பட்ட கோடுகளை அறிந்துகொள்வதே பூகோளம் என்றால், அந்தப் பூகோளத்தை அறிந்துகொள்வதுதான் படிப்பு என்றால், எனக்கு அந்தப் படிப்பு எல்லாம் தேவையில்லை’’ என்றார் காமராஜர். மக்களின் இன்ப துன்பங்களை அறிந்தவர்கள்தாம் அவர்களின் உண்மை புகலிடமாகவும் விளங்கிட முடியும்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கடவுளால் மன்னிக்கப்படுபவர் பேறுபெற்றவர்' என்ற தலைப்பில் 32வது திருப்பாடலில் 1 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6,7 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இறைபிரசன்னத்தில் இப்போது இறைவார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

"ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்." (வசனம் 6,7).

சமணர்கள் நான்கு தானங்களை, தங்களின் பேரறமாய்ப் போற்றினர். அவையாவன, அன்னதானம், அபய தானம் ஔசச தானம், சாத்திர தானம். சமணர்களது தானத்தில், இரண்டாமிடம் பெற்றுள்ள அபயதானம் என்பது மிகவும் முக்கியமானது. இது ‘அஞ்சினான் புகலிடம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சமணர்களின் அபயதானமே, தமிழகத்தில் அஞ்சினான் புகலிடங்களாக வளர்ந்து தழைத்தன. அஞ்சினான் என்றால் ‘அச்சப்படுபவன்’ என்பது பொருளாகும். பொருளாதார ரீதியில் தாழ்வுற்ற நிலைக்குச் சென்றவர்களுக்கும், பகைமையால், பகை நாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இருக்க இடமும், உண்ண உணவும் கொடுத்துக் காக்கும் இடமே, அஞ்சினான் புகலிடமாகும். இதை சமணர்கள் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். தமிழகம் எங்கும் இந்த அஞ்சினான் புகலிடங்கள் இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. தமிழக மன்னர்கள் பலரும், இந்த அஞ்சினான் புகலிடங்களுக்கு, இடம், பொருள் கொடுத்து உதவியுள்ளனர். சமணர்களால் பின்பற்றப்பட்ட இந்தத் தானங்கள், பிற்காலத்தில் மற்றவர்களாலும் தொடரப்பட்டிருக்கின்றன. சமணத்தைத் தொடர்ந்து, அயலகம் வழியாக, இந்தியாவிற்குள் புகுந்த மற்ற மதங்களும் கூட, இந்தத் தானங்களைத் தொடர்ந்து கடைபிடித்துள்ளன. ‘அஞ்சினான் புகலிடம்’ என்பதற்கு ‘ஆசிரியம்’ என்ற சொல்லாட்சியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும் அஞ்சினான் புகலிடங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. ஒரு நாடு, மற்றொரு நாட்டோடு போர் தொடுக்கும்பொழுது, ஓர் அறிவிப்பு செய்வார்கள். அந்தணர், அறவோர், பெண்டிர், உடல் நலிந்தவர்கள், குழந்தைகள் என, உடல் வலிமை இல்லாதவர்களைப் பட்டியலிடுவார்கள். இவர்களுக்குப் போரில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிப்பார்கள். இவ்வாறு விலக்கு அளிப்பதோடு நின்று விடாமல், இவர்கள் அனைவரையும், ஓரிடத்தில் அமர்த்தி, பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, புகலிடம் தருவார்கள். இதுவும் அஞ்சினான் புகலிடம்தான். இவ்வாறு முனைவர் மணி.மாறன் அவர்கள் அஞ்சினான் புகலிடம் குறித்து விளக்கம் தருகின்றார்.

துன்ப வேளையில் பெருவெள்ளம்போல பிரச்சனைகள் நம்மை நோக்கிப் பாய்ந்து வந்தாலும், அவைகள் நம்மை அணுகவிடாமால் நமக்குக் கடவுள் மிகச் சிறந்ததொரு புகலிடமாக இருக்கின்றார் என்பதை, இந்த இரு இறைவசனங்களிலும் தாவீது அரசர் எடுத்துக்காட்டுகின்றார். நமது திருவிவிலியத்தில் புகலிடம் கொடுத்த மனிதர்கள் குறித்து பல்வேறு எடுத்துக்காட்டுகள் காணக்கிடக்கின்றன. அதில் குறிப்பாக பழைய ஏற்பாட்டில் ரூத்து புத்தகத்தில் வரும் போவாசு குறித்து நாம் சற்று ஆழமாக சிந்திப்போம். மோவாபு நாட்டிற்குத் தன் கணவனுடன் பிழைப்புத் தேடி செல்கின்றார் நகோமி. அங்கு அவருக்கு மக்லோன் கிலியோன் என்னும் இரு குழந்தைகள் பிறக்கின்றன. அவ்விருவரும் வளர்ந்து மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொள்கின்றனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. திருமணமான சில நாள்களில் மக்லோனும் கிளியோனும் இறந்துபோய் விடுகின்றனர். இந்நிலையில் ஓர்பா என்ற பெண் தன் நாட்டிற்குத் திரும்ப போய்விடுகின்றார். ஆனால் ரூத்து என்ற பெண் மட்டும் தன் மாமியார் மீது கொண்ட அன்பினால் அவருடனேயே தங்கிவிடுகிறார். நகோமி தனது மருமகள் ரூத்துடன் மோவாபு நாட்டிலிருந்து திரும்பவும் பெத்லேகம் வருகிறார். அவருக்குத் தனது ஒரே புகலிடம் தனது மருமகள் ரூத்துதான். அவ்வாறே, ரூத்துவுக்கும் ஒரே புகலிடம் தனது மாமியார் நகோமிதான். இப்படிப்பட்ட நிலையில் ரூத்துவுக்கு நகோமியின் உறவினரான போவாசு புகலிடம் கொடுக்கிறார். அப்பெண் யார் என்பதை அறிந்தவராய், அவருடைய வயலில் அறுவடையாள்களின் பின்னே சென்று, கட்டுகளிலிருந்து சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்வதற்கு ரூத்துவுக்கு அனுமதிக் கொடுக்கிறார். அவருக்குப் புகலிடம் கொடுக்கும் போவாசின் உயர்ந்த மனதை வெளிப்படுத்தும் அவ்விலிய பகுதியை இப்போது வாசிப்போம்.  

போவாசு ரூத்தை நோக்கி, “பெண்ணே நான் சொல்வதைக் கேள். இந்த வயலைத் தவிர வேறு எந்த வயலுக்கும் போய் நீ கதிர் பொறுக்க வேண்டாம். என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு. அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து, அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர் பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்க கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால் அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக்கொள்” என்றார். ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, “என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர்? அயல் நாட்டுப் பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?” என்று கேட்டார். போவாசு, “உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும். நீ செய்துள்ள அனைத்திற்கும் ஆண்டவர் உனக்குத் தகுந்த பலன் அளிப்பார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருடைய இறக்கைகளின் அரவணைப்பை நீ தேடி வந்திருக்கிறாய். அவர் உனக்கு முழு நிறைவான பலனை அருள்வார்” என்றார் (ரூத் 8:12). இதற்குப் பிறகு போவாசு ரூத்தை மறுமணம் செய்துகொண்டு அவரின் முழு புகலிடமாகிப்போகிறார். இவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கு ‛ஓபேது’ என்று பெயரிடப்படுகிறது. ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார். ஈசாய்க்குத் தாவீது பிறந்தார். தாவீதின் வழித்தோன்றலில்தான் இயேசு பிறக்கிறார். ஆக, இறைவனின் மீட்புத் திட்டத்தில் ரூத்துவுக்குப் புகலிடம் கொடுக்கும் போவாசும், அவரிடம் புகலிடம் பெறும் ரூத்துவும் பங்குபெறும் பேறுபெறுகின்றனர்.

ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே. (திபா 9:9) என்றும், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர் (திபா 5:11) என்றும், தாவீது அரசர் வேறுசில திருப்பாடல்களிலும் ஆண்டவர் தரும் புகலிடம் குறித்துக் குறிப்பிடுகின்றார். ஆகவே, நமது அன்றாட வாழ்வில் நாமும் இறைவனையே என்றுமுள்ள புகலிடமாகக் கொள்வோம். அதேவேளையில் நம்மிடம் புகலிடம் தேடிவருவோருக்கும் அவர்களின் புகலிடமாக மாறுவோம். அதற்கான அருளை ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2022, 14:10