தேடுதல்

ஆடுகளை அறிந்த ஆயர் ஆண்டவர் ஆடுகளை அறிந்த ஆயர் ஆண்டவர் 

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு: ஆடுகளை அறிந்த ஆயர் ஆண்டவர்

துன்புறும் மக்களைக் காக்கும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றும், அவர்களுக்காக நம் வாழ்வையே தியாகமாக்கும் நல்லாயர்களாய் வாழ்வோம்.
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு: ஆடுகளை அறிந்த ஆயர் ஆண்டவர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 13: 14, 43-52 II. திவெ 7: 9, 14b-17  III. யோவா 10: 27-30)

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமைக்குள் இன்று நாம் நுழைகின்றோம். நம் அன்னையாம் திருஅவை இஞ்ஞாயிறை 'நல்லாயன் ஞாயிறு' என்று சிறப்பிக்கின்றது. ஆடுகளின் துயரங்களை அறிந்த ஆயர்களாக நாம் வாழ்வதற்கு இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

சாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்தச் சிறகு முறிந்துபோன பறவையை வாஞ்சையோடு தடவிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்த வழியாகப் பெண்மணி ஒருவர் வந்தார். இயல்பிலேயே இரக்கக்குணம் நிறைந்த அவர், மரத்தடியில் சிறுவன் அமர்ந்திருப்பதையும் அவனுடைய கையில் சிறகு முறிந்துபோன பறவை இருப்பதையும் கண்டார். சிறுவனின் அருகே சென்ற அந்தப் பெண், ``தம்பி! உன் கையிலிருக்கும் சிறகு முறிந்துபோன இந்தப் பறவையை என்னிடம் தருகிறாயா? அதை நான் வீட்டுக்குக் கொண்டுபோய், அதற்கு மருத்துவம் பார்த்து, அது குணமடைந்ததும் உன்னிடமோ அல்லது இங்கிருக்கும் காட்டிலோ விட்டுவிடுகிறேன்’’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன் அவரிடம், ``வேண்டாம் அம்மா! இந்தப் பறவையை நானே பார்த்துக்கொள்கிறேன், ஏனென்றால், இந்தப் பறவையை என்னைவிட சிறப்பாக வேறு யாராலும் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்றான்.

``உன்னைப்போல அந்தப் பறவையை வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது என்று எதை வைத்துச் சொல்கிறாய்’’ என்று அவர் கேட்க, சிறுவன் மெல்ல எழுந்து நின்றான். அப்போதுதான் அந்தச் சிறுவனின் ஒரு கால் ஊனம் என்பதை அவர் கவனித்தார். அவருக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, ``ஆமாம் தம்பி! நீ சொல்வதும் சரிதான். இந்தப் பறவையை உன்னைவிட வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்நிகழ்வில், அந்தச் சிறுவன் சிறகு முறிந்துபோன பறவையின் துயரத்தைத் தன்னுடைய துயரமாகப் பார்த்தான். அதனால்தான் அந்தப் பறவையை தானே கவனித்துக்கொள்வது என்று முடிவு செய்தான். ஓர் உண்மையான ஆயருக்கு அல்லது தலைவனுக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி என்பது, துன்புறும் சக மனிதரின் துன்பத்தை தன்னுள் ஏற்று, அவர்களுடைய துன்பத்தை இன்பமாக மாற்ற முயலுவதே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மக்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகவே பார்த்தார். அது மட்டுமன்றி, அவர்களுடைய துன்பத்தை, அவல நிலையைப் போக்க இறப்பதற்கும் துணிந்தார். இப்படியாக இயேசு பரிவுள்ளம்கொண்ட நல்லாயனாகத் திகழ்ந்தார். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” (மத் 11:28-30) என்ற இயேசுவின் வார்த்தைகள், நல்ல ஆயருக்கான சான்றாக அமைகின்றன.

வாழ்வு தரும் உணவு நானே, உலகின் ஒளி நானே, உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, வழியும் உண்மையும் வாழ்வும் நானே, உண்மையான திராட்சைச் செடி நானே, நல்ல ஆயன் நானே என்ற ஆண்டவரின் இந்தச் சொற்களில் ஒரு கனிவுள்ள ஆயரின் அல்லது தலைவரின் பேரன்பு வெளிப்படுவதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றில் மிகவும் சிறப்பாக ‘நல்ல ஆயன் நானே’ என்பதைக் குறித்து இந்நாளில் சிறப்பாகச் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். காரணம்’ இதுவே எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக அமைகின்றது. இப்படிப்பட்ட நல்லாயனின் அன்பு மக்களாய் வாழ்வதில் நாம் பெருமிதம் கொள்வோம். இன்றைய பதிலுரைப் பாடலும், நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள் என்கிறது.

பழைய ஏற்பாடு முழுவதும் யாவே இறைவன் தான் தெரிந்துகொண்ட மக்களின் ஆயராக இருப்பதைப் பார்க்கின்றோம். தொடக்க நூலில் யாக்கோபு தன் பிள்ளைகளை ஆசிர்வதிக்கின்றார். அப்போது அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கியபோது: “என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கி வருகிறார். (தொநூ 48:15) என்றுரைக்கின்றார். மேலும் தாவீது அரசரும், ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார் (திபா 23:1-3) என்று பாடுகிறார்.

குறிப்பாக, எசாயா புத்தகத்தில் மெசியாவாகிய இயேசு எப்படிப்பட்ட ஆயராக இருப்பார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்” (எசா 40:10-11). ஆக, எசாயா முன்குறித்து இறைவாக்குரைத்ததை நல்லாயனாகிய இயேசு நிறைவேற்றிக் காட்டுகின்றார்.

ஒரு ஆயர் என்பவர் தன் உயிரையே இழக்கக்கூடியவராக இருக்கவேண்டும். ஓர் உயர்ந்த இலட்சியத்துக்காக அவர் தனது உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவராக இருந்தால்தான் அவர் ஒரு நல்ல ஆயராக இருக்கமுடியும். ஆனால் நம்மில் பலர் எவ்விதத் தியாகமும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகின்றோம். அதனால்தான் தோல்விகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் நல்ல ஆயர் என்பவர் அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவார்கள். தன்னுடைய தன்மானத்தை விட்டுக்கொடுத்துக்கூட உறவில் பிணைப்பை ஏற்படுத்த கடும் முயற்சி செய்வார்கள். அதிகாரத்தின் வழியாகப் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலமாட்டார்கள். அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய சூழலில், பலவிதமான மனிதர்களோடு உற்சாகமாக இணைந்து செயல்படுவார்கள். கூட்டு முயற்சியில் ஈடுபட விரும்புவார்கள். இவர்களுடைய அணுகுமுறை நல்ல ஆயருக்குரிய தலைமைப்பண்பை எப்போதும் வெளிப்படுத்தும்.

தன்னை நம்பி இருக்கும் மக்களாகிய ஆடுகளைக் காப்பாற்ற இன்றைக்கு எத்தனை ஆயர்கள் தயாராக இருக்கிறார்கள்? ஆடுகளை முன்னால் அனுப்பி பலிகொடுத்துவிட்டு பின்னால் இருந்து கூப்பாடு போடுகிற ஆயர்கள்தாம் இன்று அதிகம். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவியைத் தக்கவைத்துக்கொண்டாலே போதும் என்றே நினைக்கின்றனர் இன்றைய ஆயர்கள். விலையுர்ந்த ஆடைகள், காலணிகள், வாகனங்கள், பொருள்கள் இவைகளில்தான் அவர்களின் ஒட்டுமொத்த கவனமும் செல்கின்றது. எளிமை, ஏழ்மை, இரக்கம், பிறரன்பு, தியாகம் ஆகியவற்றை அவர்களிடத்தில் அதிகம் பார்க்கமுடிவதில்லை. சுகபோக வாழ்வும், சுருட்டுகின்ற குணமும் அவர்களின் வாழ்வில் மொத்தமாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன. புலி தோலைப் போர்திக்கொண்டு ஆடுகளை அநியாயமாக வேட்டையாடும் அரக்கமனம் கொண்டோராகவே வாழ்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு ஆயர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை நல்லாயனாம் இயேசு தனது வாழ்க்கையால் வாழ்ந்து காட்டியிருக்கின்றார். “திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.” (யோவா 10:10-11)

தற்போதைய நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது பணியில் ஒரு நல்ல ஆயருக்குரிய பொறுப்புடன் இயேசுவின் இரகப்பெருக்கச் செயல்களை அதிகம் வெளிப்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாக, உக்ரைன் நாட்டில் இரஷ்ய படைகள் நடத்திவருகின்ற மனிதத்தன்மையற்ற செயல்களைக் கண்டு பெறும்வேதனை அடைந்துள்ள அவர், தனது இரக்கத்தைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். போர்நிறுத்தத்திற்காகப் பல்வேறு வகைகளில் தனது இறைவேண்டல்களை எழுப்புகிறார், அதற்காக உலக மக்களை அழைக்கிறார். போரால் இடம்பெயர்ந்துள்ள மக்களோடு தனது நெருக்கத்தை வெளிப்படுத்துகிறார், கர்தினால்களை அனுப்பி போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, குழந்தைகளை, வயது முதிர்ந்தோரைச் சந்திக்கச் செய்கின்றார், போரில் காயமடைந்தோரை பாதுகாக்காக இரண்டு அவசர மருத்துவ ஊர்திகளை வழங்கியுள்ளார். மேலும் உலகெங்கினும் பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைகள், இயற்கைச் சீற்றங்கள், மழை, வெள்ளம், புயல், விபத்து, வறுமை, பஞ்சம், பட்டினி  ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரோடும் தன் உடனிருப்பை வெளிப்படுத்தி வருகின்றார். அவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றார். இவைகள்தாம் நல்லாயானாம் இயேசுவின் வழியில் நம் இரக்கச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வழிகள் என்பதை இக்கணம் உணர்வோம்.

லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்று கூறி அவரைப் பற்றிய செய்தி ஒன்று வாட்ஸப்பில் வந்திருந்தது. இச்செய்தி வாழ்க்கையின் உண்மை நிலையை  நமக்கு எடுத்துதியம்புகிறது. "மரணத்தை விடஉண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை! இந்த உலகத்தில் விலை உயர்ந்த வாகனம் ஒன்று  என்னுடைய இல்லத்தில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப்படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான வடிவங்களிலும் வண்ணங்களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருள்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சாதாரண உடையில் இருக்கிறேன்.! என் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் இருக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! என் வீடு அரண்மனை போன்றும் கோட்டைம் போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர உணவகங்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு நான் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்! அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று, என் தலையில் முடியே இல்லை. உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர உணவகங்களில் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று, பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு! சிறியவகை தனியார் விமானத்தில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று, மருத்துவமனையின் தாழ்வாராத்திற்கு வருவதற்கே எனக்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்? எல்லா வசதி வாய்ப்புகளையும் நான் பெற்றிருந்தும் கூட அவைகள் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவும் இல்லை! ஆனால் சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன! என்று கூறுகின்றார் மிகவும் புகழ்வாய்ந்த பாடகரான லதா மங்கேஷ்கர்!

இவ்வளவுதான் நமது வாழ்க்கை. ஆகவே யாருக்கும் உதவாத. வெறும் பணம் பதவி அதிகாரம் என்று மட்டுமே வாழும் மனிதர்களை மதிப்பதைத் தவிர்ப்போம். நல்ல மனித நேயமுள்ள மனிதர்களாய் இருப்போம். துன்புறும் மக்களைக் காக்கும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றும், அவர்களுக்காக நம் வாழ்வையே தியாகமாக்கும் நல்ல ஆயர்களாய் வாழ்வோம். அதற்கான அருளை இந்நாளில் நல்லாயனாம் இயேசுவிடம் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2022, 16:28