இலங்கையில் பொருளாதார  நெருக்கடி இலங்கையில் பொருளாதார நெருக்கடி 

அரசுத்தலைவரின் எல்லையற்ற அதிகாரம் அகற்றப்படவேண்டும்

இலங்கையில் அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் உடனடியாக இரத்துசெய்யப்படவேண்டும் என்று விண்ணப்பிக்கும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறையில்லா அதிகாரம் தடைசெய்யப்படுவதற்கு, அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று, அந்நாட்டு மதத் தலைவர்கள் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், வல்லமைமிக்க இராஜபக்ஷே குடும்பம், அமோக வெற்றிபெற்றதையடுத்து, அரசுத்தலைவருக்கு வரையறையில்லா அதிகாரங்களை அளிக்கும் முறையில், அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.  

இலங்கை, சுதந்திரம் அடைந்ததற்குப்பின்னர், தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும்வேளை, அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவரும் மக்கள், அரசுத்தலைவருக்கு எல்லா அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்து வருகின்றனர்.

இலங்கைக்கு உறுதியான அரசியல் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று, சிங்கள கத்தோலிக்க வார இதழின் ஆசிரியர் அருள்பணி சிரில் காமினி (Cyril Gamini) அவர்கள் கூறியுள்ளவேளை, அரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்று, புத்தமத குரு Omalpe Sobitha Thera அவர்கள் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில், அரசுத்தலைவரின் அதிகாரம் குறித்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, பிரதமர் இரணில் விக்ரமசிங்கே அவர்கள் உட்பட, தற்போதைய அரசின் கடமையாகும் எனவும் Omalpe Sobitha Thera அவர்கள், கொழும்பு நகரில் மே 25, இப்புதனன்று தெரிவித்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2022, 14:04