தேடுதல்

திருத்தந்தை 5ம் கிளமென்ட் திருத்தந்தை 5ம் கிளமென்ட் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 5ம் கிளமென்ட்

1305ம் ஆண்டிற்கும் 1309க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரான்சின் பல்வேறு இடங்களில் மாறி மாறி இருந்துவந்த திருத்தந்தை 5ம் கிளமென்ட், பின்னரே Avignonஐ தன் நிரந்தர இடமாக்கிக்கொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பதவியேற்ற ஓராண்டிற்குள்ளேயே, அதாவது, 1304ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி உயிரிழந்த திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட் குறித்து கடந்த வாரம் கண்டோம். இத்திருத்தந்தைக்குப்பின் வந்தவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5ம் கிளமென்ட் எனும் திருத்தந்தை. 1264ம் ஆண்டு பிரான்சின் Villandraut எனுமிடத்தில் Bertrand de Got என்ற இயற்பெயருடன் பிறந்தார் இவர். இவர் ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் மூத்த சகோதரர் Lyonsன் பேராயராக இருந்தார். இளவயதிலேயே Bertrand de Got, பிரெஞ்சு மன்னர் Philip the Fairன் நண்பராக விளங்கினார். 1304ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பெனடிக்ட் உயிரிழந்தபின்னர் கூடிய கர்தினால்கள் அவை, அடுத்து யாரைத் தேர்ந்தெடுப்பது என திணறியது. இத்தாலி, மற்றும் பிரான்சின் கர்தினால்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதால், 11 மாதங்கள் எவ்வித முடிவுமின்றி தொடர்ந்தது. இறுதியில், பலம்பொருந்திய பிரான்ஸ் மன்னரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத கர்தினால்கள், திருத்தந்தை 5ம் கிளமென்டை தேர்வு செய்தனர். மொத்தம் இருந்த 15 கர்தினால்களுள் 10 பேர் இத்திருத்தந்தைக்கு ஆதரவாக வாக்களித்தனர். புதிய திருத்தந்தையாக பேராயர் Bertrand de Got தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர் பெருஜியா வரவேண்டும் என்றும், அங்கிருந்து உரோம் நகர் சென்று திருத்தந்தையாகப் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம் என்றும் கர்தினால்கள் செய்தி அனுப்பினர். ஆனால் அவரோ, பிரான்சின் Lyonsல் முடிசூட்டிக்கொள்ள விரும்புவதாகவும், கர்தினால்களை அங்கு வருமாறும் அழைப்புவிடுத்தார். 1305ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி Lyons நகரிலேயே மன்னர் Philip the Fair முன்னிலையில் முடிசூட்டிக்கொண்டார் திருத்தந்தை 5ம் கிளமென்ட்.

மிக ஆடம்பரமாக இடம்பெற்ற இம்முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின்போது, எதிர்பாராத சில துயரச் சம்பவங்களும் நிகழ்ந்தன. இவற்றை கெட்ட அறிகுறிகளாக நோக்கினர் பலர். முடிசூட்டுவிழாவில் திருத்தந்தை குதிரை மீதேறி பவனி சென்றபோது, பக்கவாட்டுச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், அவர் குதிரையிலிருந்து தூக்கி வீசியெறியப்பட்டார். இவர் மகுடத்தில் இருந்த மிக விலையுயர்ந்த கல் ஒன்று காணாமல்போனது. சுவர் வீழ்ந்த இடிபாடுகளில் சிக்கி திருத்தந்தையின் சகோதரர் உயிரிழந்தார். அதுமட்டுமல்ல, 12 திருத்தந்தையர்களின் தேர்வு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, 13 திருத்தந்தையர்களைப் பார்த்துள்ள வயது முதிர்ந்த கர்தினால் Matteo Orsiniயும் இவ்விபத்தில் காலமானார். இதெல்லாம் போதாதென்று, மறுநாள் திருத்தந்தையின் பணியாளர்களுக்கும், கர்தினால்களின் காவலர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் திருத்தந்தையின் பிறிதொரு சகோதரரும் கொல்லப்பட்டார். திருத்தந்தை 5ம் கிளமென்டின் திருத்தந்தை பணி துவக்கம் சோகம் நிறைந்ததாகவே இருந்தது. 1305ம் ஆண்டிற்கும் 1309க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரான்சின் பல்வேறு இடங்களில் மாறி மாறி இருந்துவந்த திருத்தந்தை, பின்னரே Avignonஐ தன் நிரந்தர இடமாக்கிக் கொண்டார். இதனால் மன்னர் Philip the Fairன் ஆதிக்கத்திற்கு தன்னை உட்படுத்தியவராக மாற்றிக்கொண்டார் திருத்தந்தை 5ம் கிளமென்ட். பிரான்ஸ் மன்னரின் நோக்கமெல்லாம், உலகளாவிய பிரெஞ்சு மன்னராட்சியைக் கொணர்வது, மற்றும் முன்னாள் திருத்தந்தை எட்டாம் போனிபாசின் பெயரைக் கெடுத்து பழிவாங்குவதாக இருந்தது.

திருஅவையின் நிலங்களை நிர்வகிக்க மூன்று கர்தினால்கள் கொண்ட அவையை உருவாக்கினார் இத்திருத்தந்தை. அதேவேளை இத்திருத்தந்தையின் சகோதரர் Arnaud Garsias de Got இத்தாலியின் Spoletoவில் திருத்தந்தையின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். திருத்தந்தையுடன் மிக நெருக்கமாக இருந்த மன்னர் பிலிப்பு, தன் எதிரியான முன்னாள் திருத்தந்தை எட்டாம் போனிபாசின் பெயரைக் கெடுக்க எடுத்த முயற்சிகளுக்கு, திருத்தந்தை 5ம் கிளமென்டும் ஓரளவு வளைந்துகொடுத்தாலும், குற்றச்சாட்டுகளை விசாரித்த திருஅவையே, முன்னாள் திருத்தந்தை குற்றமற்றவர் எனவே தீர்ப்பளித்தது. இதற்கிடையில், மன்னரும் குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள, அப்பிரச்சனை ஓரளவு முடிவுக்கு வந்தது. ஆனால், திருஅவை மற்றும் திருஅவை மீதான பிரான்ஸ் மன்னரின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அக்காலத்தில் மிகவும் புகழுடனும் மக்களின் நம்பிக்கைக்கு இயைந்ததாகவும் விளங்கிய Templar  என்ற சபையின் மீது மன்னரின் கோபம் திரும்பியது. அவர்கள்மீது தேவநிந்தனை குற்றச்சாட்டைப் புகுத்தி, அந்த பக்த சபையின் அதிபரைக் கைது செய்தார். பல்வேறு வகைகளில் அவர்களைக் கொடுமைப்படுத்தியதுடன், பலரை தீயிட்டுக் கொளுத்தவும் செய்தார். இடையிடையே திருத்தந்தை 5ம் கிளமென்ட் தலையிட்டு, தீர்வுகாண முயன்றாலும், அவரின் உறுதியற்ற நிலைப்பாட்டால், இப்பக்த சபை பல்வேறு துன்பங்களை அனுபவித்ததுடன், அவராலேயே அது தடைசெய்யவும்பட்டது. பல சுழல்களில், பிரான்ஸ் மக்களின் கைப்பாவைப் போலவே செயல்பட்ட திருத்தந்தை 5ம் கிளமென்ட் 1314ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி காலமானார்.

அன்பு நேயர்களே, அடுத்து பொறுப்பேற்ற திருத்தந்தை 22ம் யோவான் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2022, 16:42