தேடுதல்

பெரூஜியாவில் உள்ள அருளாளர் திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட் அருங்காட்சியகம் பெரூஜியாவில் உள்ள அருளாளர் திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட் அருங்காட்சியகம்  

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட்

இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் மன்னர்களிடையே அமைதியை உருவாக்க உழைத்த தொமினிக்கன் துறவுசபை அதிபரே பின்னாளில் திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட் ஆனார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அரசியல் அதிகாரத்தோடு மோதி தோல்விகண்டு, இறுதியில் கொடிய காய்ச்சலுக்குப் பலியான திருத்தந்தை எட்டாம் போனிபாசைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர் திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட். இவரின் இயற்பெயர்  நிக்கோலாஸ் பொக்காசினி. இவர் 1240ம் ஆண்டு இத்தாலியின் Treviso எனுமிடத்தில் பிறந்து, தன் 14ம் வயதிலேயே தொமினிக்கன் துறவுமடத்தில் நுழைந்தார். 14 ஆண்டுகள் துறவறக் கல்வியைப் பெற்று இறையியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1296ம் ஆண்டு இவர் தொமினிக்கன் துறவு சபையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அத்துறவு சபை அங்கத்தினர்கள் எவரும், திருத்தந்தை எட்டாம் போனிபாசின் எதிரிகளோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கட்டளையிட்டார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திருத்தந்தைக்கு ஆதரவாக தங்கள் மறையுரைகளில் குறிப்பிடுமாறும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தை எட்டாம் போனிபாசின் தேர்வு நியாயமானதாக, சட்டத்திற்கு இயைந்ததாக இருந்தது என்பதே இவரின் பலமான வாதமாக இருந்தது. திருத்தந்தை மீதான தொமினிக்கன் அதிபர் பொக்காசினியின் அபிமானத்தை அறிய வந்த திருத்தந்தை எட்டாம் போனிபாஸ் அவர்கள், பல சலுகைகளையும், தன் உறுதிப்பாட்டையும் அச்சபைக்கு வழங்கினார். தொமினிக்கன் துறவி பொக்காசினி, இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்ட், மற்றும் பிரான்ஸ் மன்னர் 4ம் பிலிப்புக்கு இடையே அமைதியை உருவாக்கவும் உழைத்தார்.

தொமினிக்கன் அதிபர் பொக்காசினி அவர்கள், 1298ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். ஹங்கேரியில் உள்நாட்டுப்போர் நிகழ்ந்தபோது, அமைதிக்கான திருப்பீடப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார் இந்த கர்தினால். 1303ல் திருத்தந்தை எட்டாம் போனிபாஸ் உயிரிழந்தபோது, அக்டோபர் மாதம் 22ம் தேதி கர்தினால்களால் ஒருமித்த மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கர்தினால் பொக்காசினி. இவர் பொறுப்பேற்றவுடன், பிரெஞ்ச் அரசுடன் அமைதியை ஏற்படுத்திக்கொண்டார். முந்தைய திருத்தந்தை எட்டாம் பொனிபாஸ், பிரெஞ்ச் மன்னருக்கு எதிராக விதித்திருந்த தடைகளை அகற்றினார். கர்தினால் பொக்காசினியாக இருந்து திருத்தந்தையானவுடன் பதினோராம் பெனடிக்ட் என்ற பெயரை எடுத்துக்கொண்ட இந்த திருத்தந்தை, அரசுக்குத் துணைபோன கர்தினால்களை மன்னித்தார், ஆனால் அவர்களுக்கு பழைய பதவிகளை வழங்க மறுத்தார். தனிப்பட்ட முறையில் அவர்களை மன்னித்தாலும், திருப்பீடத்திற்கும், முன்னாள் திருத்தந்தைக்கும் எதிராக அவர்கள் சென்றது தவறுதான் என்பதை உணர்த்தவே இவ்வாறுச் செய்தார். முன்னாள் திருத்தந்தையை எதிர்த்துப் போராடிய பிரபுக்களை திருஅவையிலிருந்து விலக்கியதோடு, அவர்கள் திருஅவை நீதிமன்றம் முன் வந்து  விளக்கம் தரவேண்டும் எனவும் பணித்தார், திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட்.

இத்தாலியின் பெரூஜியா நகரில் இருந்தபோது இத்திருத்தந்தையின் மரணம் திடீரென நிகழ்ந்தது. இவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் எனவும், அதற்கு காரணம், இவரால் திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்ட ஆளுநர் நோகரேட்டின் வில்லியம் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 1304ம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி, அதாவது பொறுப்பேற்று ஓராண்டிற்குள்ளயே இறைபதம் சேர்ந்தார் திருத்தந்தை பதினோராம் பெனடிக்ட். 1773ம் ஆண்டில் அருளாளராக அறிவிக்கப்பட்டார் இந்த திருத்தந்தை. புனித மத்தேயு நற்செய்தி, திருப்பாடல்கள், யோபு நூல், திருவெளிப்பாடு நூல் ஆகியவைகளுக்கான விளக்கவுரைகள், மற்றும் மறையுரைகள் என நிறைய எழுதி வைத்துள்ளார்.

திருத்தந்தை பதினோராம் பெனடிக்டைத் தொடர்ந்து திருஅவை தலைமைப் பொறுப்பேற்றவர் திருத்தந்தை 5ம் கிளமென்ட். 1305ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வுச்செய்யப்பட்ட இத்திருத்தந்தை குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2022, 15:09