தேடுதல்

மங்கோலியாவின் புதிய கர்தினால் ஆயர் Giorgio Marengo மங்கோலியாவின் புதிய கர்தினால் ஆயர் Giorgio Marengo  

சிறுபான்மை மங்கோலியாவிற்கு கர்தினால்-மறைப்பணியாளர் மகிழ்ச்சி

ஆயர் Marengo அவர்கள், தலைமைப் பணியை ஏற்றதிலிருந்து, மங்கோலிய அரசோடு நல்லுறவுகளை ஏற்படுத்தவும், பல்சமய உரையாடலை ஊக்குவிக்கவும் நல்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

மங்கோலியா நாட்டின் தலைநகரான Ulaanbataarவின் ஆயர் Giorgio Marengo அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினாலாக அறிவித்திருப்பது குறித்து, அந்நாட்டு மறைப்பணியாளர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

1,400 கத்தோலிக்கரை மட்டுமே கொண்டிருக்கும் சிறிய மங்கோலியத் திருஅவையை வழிநடத்தும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மறைப்பணியாளர் ஆயர் Giorgio Marengo அவர்கள், கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சியையும் அதேநேரம் வியப்பையும் அளித்துள்ளது என்று, மங்கோலியாவில் மறைப்பணியாற்றுவோர் கூறியுள்ளனர்.

மே 29, இஞ்ஞாயிறு நண்பகலில் அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 21 புதிய கர்தினால்களுள், ஆயர் Giorgio Marengo அவர்களும் ஒருவர். இந்த 21 பேரில் இரு இந்தியர்கள் உட்பட 6 பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 21 பேரும், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடைபெறும் கர்தினால்கள் அவையில், கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள்.

தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து பீதேஸ் செய்தியோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட 48 வயது நிரம்பிய ஆயர் Giorgio Marengo அவர்கள், இந்த எதிர்பாராத அருளின் நேரம், தன்னை வியப்படையச் செய்துள்ளது, திருத்தந்தையின் இந்த அறிவிப்பு, உலகெங்கும் பரவியுள்ள சிறிய கத்தோலிக்க சமுதாயங்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை மற்றும், மறைப்பணி ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

கொன்சலாத்தா மறைப்பணி சபையையச் சேர்ந்த நான், இந்த எனது நியமனத்தை அன்னை மரியாவிடம் அர்ப்பணிக்கின்றேன், அவர் என்னை வழிநடத்துவார் என்றும் மங்கோலிய ஆயர் Marengo அவர்கள் கூறியுள்ளார்.

ஈராண்டுக்கு முன்னர் ஆயர் பணியை ஏற்றதிலிருந்து, மங்கோலிய அரசோடு நல்லுறவுகளை ஏற்படுத்தவும், பல்சமய உரையாடலை ஊக்குவிக்கவும் ஆயர் Marengo அவர்கள் நல்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

கொன்சலாத்தா மறைப்பணியாளர் சபையைச் சேர்ந்த ஆயர் Giorgio Marengo அவர்கள், 2020ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து மங்கோலியத் திருஅவையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். வருகிற ஜூன் மாதத்தில் 48 வயதை எட்டவிருக்கும் இவர், திருஅவையின் கர்தினால்கள் அவையில் இளம் வயதுடையவராக இருக்கிறார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2022, 14:44