அருளாளர் Titus Brandsmaவுக்கு நெதர்லாந்து தூதரகம் அஞ்சலி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மனியில் நாத்சிகள் இயற்றிய யூத-விரோதச் சட்டங்களை ஏற்காமல் துணிச்சலுடன் அவற்றை எதிர்த்துப் பேசிய கார்மெல் சபையைச் சேர்ந்த இறையியலாளரும், பத்திரிக்கையாளரும் மற்றும் எழுத்தாளருமான அருளாளர் டைட்டஸ் பிராண்ட்மாவுக்குத் திருப்பீடத்திற்கான நெதர்லாந்து தூதரகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் ஆகிய உயர்ந்த மதிப்பீடுகளுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த அருளாளர் பிராண்ட்மாவுக்கு மரியாதை செய்யும் விதமாகத் திருப்பீடத்திற்கான நெதர்லாந்து அரசுத் தூதரகம் ஒரு கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல் பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த திருப்பீடத்திற்கான நெதர்லாந்தின் தூதுவர் கரோலின் வெய்ஜர்ஸ் அவர்கள், வீரத்துவமிக்க அருளாளர் பிராண்ட்மா அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு அனைத்து மதத்தினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு நற்செயலாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1942ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்தபோது பிராண்ட்மா கைது செய்யப்பட்டார். கத்தோலிக்கச் செய்தித்தாள்கள் நாத்சி பிரச்சாரத்தை வெளியிட வேண்டும் என்று அவர் அறிவித்தால், அவர் துறவு மடத்தில் அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்படுவார் என்று நாத்சிகள் அவரிடம் கூறியபோது பிராண்ட்மா அதை ஏற்க மறுத்துவிட்டார். அதற்காக அவர் டச்சாவ் வதை முகாமில் கொடுந்துயரங்களுக்கும் பட்டினிக்கும் ஆளானார். அதே ஆண்டு ஜூலை 26ம் நாளன்று கார்போலிக் அமிலம் கொண்ட விஷ ஊசி செலுத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 61.
மே 15, வரும் ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், அருளாளர் டைட்டஸ் பிராண்ட்மா உட்பட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்