தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், காங்கோ ஆயர் Fridolin திருத்தந்தை பிரான்சிஸ், காங்கோ ஆயர் Fridolin 

காங்கோ சனநாயக குடியரசில் திருத்தந்தை ஒப்புரவை ஊக்குவிப்பார்

வருகிற ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார்

மேரி தெரேசா: வத்திக்கான்

வருகிற ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் ஒப்புரவு நடவடிக்கைகளை ஊக்குவிப்பார் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் குறித்து, ACN எனப்படும் துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் திருஅவை அமைப்புக்குப் பேட்டியளித்த, அந்நாட்டின் Kikwit ஆயர் Timothée Bodika Mansiyai அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்திற்கு நடைபெற்றுவரும் தயாரிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், காங்கோ சனநாயக குடியரசுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 37 ஆண்டுகளுக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்த செய்தி வெளியானதும், எமது நாடு மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது என உணர்ந்தோம் என்று ஆயர் Bodika அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்து மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும்வண்ணம் ஆயர்கள் அவர்களை ஆன்மீக முறையில் தயாரித்து வருகின்றனர் என்றுரைத்த ஆயர் Bodika அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்படி, தலத்திருஅவையில் பொதுநிலையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார். 

ஆப்ரிக்கக் கண்டத்தில் இரண்டாவது பெரிய நாடான காங்கோ சனநாயக குடியரசு, வளமையான நாடு, அதேநேரம், பரவலாக நிறைய இன்னல்கள் மற்றும், ஆயுத மோதல்களையும் சந்தித்துள்ளது, இந்நாட்டில் திருத்தந்தை ஒப்புரவு நடவடிக்கைகளை ஊக்குவிப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஆயர் Bodika அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2022, 16:13