தேடுதல்

மனித வர்த்தகம் மனித வர்த்தகம்  

உடல் உறுப்பு வர்த்தகம் குறித்த கர்தினால் போவின் எச்சரிக்கை

ஒழுக்கமற்ற செயலான மனித வியாபாரத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் : கர்தினால் சார்லஸ் போ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உடல் உறுப்பு வர்த்தகம் என்பது, புதிய ஓழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்று மியான்மாரின் யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் போ அவர்கள் எச்சரித்துள்ளார்.

பாப்பிறை சமூக அறிவியல் அமைப்பு இயங்கும் வத்திகானின் திருத்தந்தை நான்காம் பயஸ் கட்டடத்தில் சாந்தா மார்த்தா குழு நடத்திய கூட்டத்தின் இரண்டாவது நாளில் உரையாற்றிபோது, இவ்வாறு கூறிய கர்தினால் போ, இது ஒழுக்கமற்ற பேரழிவின் காலக்கட்டம் என்று வர்ணித்தார்.

இந்த நவீன கால அடிமைத்தனத்திற்கு எதிராகப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், உக்ரைன், மியான்மார் போன்ற இடங்களில் சுழலும் போர்கள், இந்தப் பிரச்சனையில் ஒரு புதிய அவநம்பிக்கையைக் கொடுத்துள்ளன என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மனித பலவீனத்தை வியாபாரமாக்கும் இந்த அறநெறியற்ற படுகொலை நம்மை ஆத்திரமடையச் செய்துள்ளது என்றும், இது ஒவ்வொரு நாட்டிலும், இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தோராய் வெளியேறும் போர்ச் சூழல் நிறைந்த பகுதிகளிலும் நடைபெறுகின்றது என்றும் மேலும் கவலை தெரிவித்தார் கத்தினால் போ.

அண்மைய ஆண்டுகளில் மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள அபரிவிதமான வளர்ச்சியானது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே பயனளிக்கும் அதே வேளையில், உடல் உறுப்புகள் நிகழ்நிலை சந்தைகள் வழியாக வர்த்தகம் செய்யப்படும் பொருள்களாக மாறியுள்ளன என்று எச்சரித்தார் கர்தினால் போ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பணிக்காலம் முழுவதும், இந்த மனித வர்த்தகத்தைக் கடுமையாகக்  கண்டித்துள்ளார் என்றும், இது மனிதகுலத்திற்கு எதிரான மாபெரும் குற்றம் என்று திரும்பத் திரும்ப கூறியுள்ளார் என்றும் எடுத்துக்காட்டியுள்ள கர்தினால் போ,  கிறிஸ்தவராக இருக்கும் ஒவ்வொருவரும் இந்த மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராடவேண்டும் என்று அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2022, 16:06