தேடுதல்

ஷேஷன் அன்னை மரியாவிடம் இறைவேண்டல் ஷேஷன் அன்னை மரியாவிடம் இறைவேண்டல்  

கர்தினால் ஜென் கைதுக்கு கர்தினால் போ கடுமையான கண்டனம்

மே 24ம் தேதி ஹாங்காங், மற்றும் சீனாவுக்காக இறைவேண்டல் செய்யுமாறு கர்தினால் சார்லஸ் போ அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஹாங்காங்கில் கடந்த வாரத்தில் 90 வயது நிரம்பிய கர்தினால் ஜோசப் ஜென் (Joseph Zen Ze-kiun) அவர்களை காவல்துறை கைது செய்தது குறித்து, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (FABC) தலைவரான, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 

ஹாங்காங் நகரம், ஆசியாவில் மிகவும் சுதந்திரமான மற்றும், மிகவும் திறந்த மனதுள்ள நகரங்களில் ஒன்று என, மே 14, கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தன் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ள, யாங்கூன் பேராயராகிய கர்தினால் போ அவர்கள், இப்போது, அந்நகரம், ஒரு காவல்துறை மாநிலமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சீன மத்திய அரசின் கட்டளையின் பேரில், ஹாங்காங் அதிகாரிகளால் நடத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கை இடம்பெற்றது குறித்தும், இந்த முன்னாள் பிரித்தானிய காலனியில் மனித உரிமைகள் மீறப்படுவது மற்றும், மத சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது குறித்தும், கர்தினால் போ அவர்கள், தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், கூட்டம் நடத்தும் சுதந்திரம், கழகங்கள் அமைக்க சுதந்திரம், கல்வி நிறுவனங்கள் நடத்த சுதந்திரம் போன்ற, ஹாங்காங் நகர மக்களின் பாரம்பரியச் சுதந்திரங்களை ஹாங்காங் அரசு அகற்றி வருகிறது என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், இப்போது மத சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுவது தெளிவாகத் தெரிகின்றன என்று கூறியுள்ளார்.

1984ம் ஆண்டின் சீன-பிரித்தானிய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஹாங்காங்கின் தன்னாட்சி நிலைமை தொடர்ந்து மீறப்பட்டுவருவது அதிர்ச்சியைத் தருகின்றது என்றுரைத்துள்ள கர்தினால் போ அவர்கள், கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழா (ஷேஷன் அன்னை மரியா விழா) சிறப்பிக்கப்படும் மே 24ம் தேதி, ஹாங்காங் மற்றும், சீனாவுக்காக கத்தோலிக்கரும், மற்ற கிறிஸ்தவர்களும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2022, 16:09