தேடுதல்

ஆண்டவரின் விண்ணேற்றம் ஆண்டவரின் விண்ணேற்றம் 

ஆண்டவரின் விண்ணேற்றம்: உயிர்த்த ஆண்டவரின் நீட்சிகள் நாம்

நற்செய்தி அறிவிப்பு என்ற தொடர் ஓட்டப் பயணத்தில் உயிர்த்த ஆண்டவர் வழியிலே நாமும் அவரின் நீட்சிகளாகவும் சாட்சிகளாகவும் வாழ்வோம்.
ஞாயிறு சிந்தனை 29052022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 1: 1-11   II. எபி  9: 24-28; 10: 19-23  III. லூக் 24: 46-53)

கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார் என்பதற்காகப் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோ குலேக்சப் என்ற மறைப்பணியாளர் 1985ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் நாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மிகக் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட அவர், எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்தவர், “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தேன் என்பதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமையாக வதைக்கப்பட்டேன். நான் சிறை கம்பிகளுக்குள் அடைபட்டிருந்தபோதும் கூட நற்செய்தியை அறிவிக்கத் தவறியதில்லை. சிறைக்குள் இருந்த அனைத்துக் கைதிகளுக்கும் நான் நற்செய்தியை அறிவித்து வந்தேன். சிறைக்கு வெளிய நான் நற்செய்தி அறிவித்திருந்தால் எத்தனை பேர் கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக் கொண்டிருப்பார்களோ, அதைவிட அதிகாகமாகவே சிறைக்குள் பலரை அவர்மீது நம்பிக்கைக்கு கொள்ளச் செய்திருக்கிறேன்” என்றார். பல்வேறு துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் அவமானங்களுக்கும் மத்தியில் கிறிஸ்துவை இன்முகத்தோடு அறிவித்த நற்செய்தி பணியாளர் கிறிஸ்டோ குலேக்சப் அவர்கள் இன்றைய நம் சிந்தனைக்கு விருந்தாகிறார்.

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை இன்று கொண்டாடுகிறோம். இயேசுவின் நீட்சிகளாய் அவரது நற்செய்தியை அறிவிக்க நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகமும் இதனையே மையக் கருத்தாகத் தாங்கி வருகின்றது. இப்போது நற்செய்தி வாசகத்திற்கு அமைந்த மனதுடன் செவிமடுப்போம்.

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார். பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

இன்றைய நற்செய்தியில், மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்று கூறும் ஆண்டவரின் வார்த்தைகள் நம்மை சற்று ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன. வலிகளையும் துன்பங்களையும் ஏற்காத வாழ்க்கை உண்மையான வெற்றியின் அடையாளமாய் இருக்க முடியாது. இலட்சியத்தை வென்றுகாட்ட வேண்டும் என்றால் கூடவே வலிகளையும் சுமந்தே ஆகவேண்டும். ஆனால் அவைகளை சுகமான வலிகளாகவே நாம் கருதவேண்டும். நாம் தொடக்கத்தில் பார்த்த நிகழ்வில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில் அவரின் நீட்சியாக விளங்கிய கிறிஸ்டோ குலேக்சப் எல்லா வலிகளையும் பொறுத்துக்கொண்டார். பழைய ஏற்பாட்டு நூல்களில் வரும் பெரிய மற்றும் சிறிய இறைவாக்கினர்கள் அனைவரும் யாவே இறைவனின் நீட்சிகளாக, இறைவார்த்தை அறிவிப்புப் பணியில் சந்தித்த எதிர்ப்புகளையும் சவால்களையும் துயரங்களையும் நாம் நன்கு அறிவோம். அவ்வாறே இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு அவரின் நீட்சிகளாக, அனைத்து சீடர்களும் நற்செய்தி அறிவிப்புப் பணியில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர்.

நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது. (2 கொரி 4:8-12), என்று புனித பவுலடியார் நற்செய்தி பணியில் ஏற்பட்ட துயரங்களைப் பற்றி பட்டியலிடும் அதேவேளையில், அப்படிப்பட்ட துயரநிலையிலும் கூட தங்களின் நம்பிக்கையை இழக்காத சூழல் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த பெரிய கப்பல் ஒன்று, திடீரென்று வீசிய பெரும்புயலில் சிக்கிச் சின்னாபின்னமானது. இதனால் கப்பலில் பயணம் செய்த பலர் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தார்கள். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து அருகிலிருந்த தீவில் ஒதுங்கினார். தீவில் இருந்தவர்களோ பழங்குடி மக்கள். ஆனாலும் அவர்கள் அவரை நல்லமுறையில் வரவேற்று உபசரித்தனர்.  பின்னர் அவர் அவர்களோடு பேசும்பொழுதுதான் அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதை அறிந்துகொண்டார். இது தெரிந்ததும் அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினீர்கள். மதம் என்பது போதை என்பதும், மூட நம்பிக்கைகளின் மொத்த வடிவம் என்பதும், அது உங்களைச் சோம்பேறிகளாக்கிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று சீறினார். அதற்கு அந்தப் பழங்குடி மக்களின் தலைவர் அவரிடம், “ஐயா! நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. ஒருகாலத்தில் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாக இருந்த எங்களுக்கு, இங்கு வந்த அருள்பணியாளர் ஒருவர் தம் உயிரைப் பணயம் வைத்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து எங்களை நல்லவராக்கினார். ஒருவேளை அவர் மட்டும் இங்கு வராமலும், நற்செய்தி அறிவிக்காமலும் இருந்திருந்தால், நாங்கள் இந்நாளவரை மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாகவே இருந்திருப்போம். நீங்களும் இந்நேரம் வரைக்கும் இங்கு உயிரோடு இருந்திருக்க முடியாது” என்றார்.

''அனைவருக்கும் மீட்பின் அருளடையாளமாய்'' விளங்க கடவுளால் மக்களினத்தார்க்கு அனுப்பப்பட்ட திருஅவை தன் இயல்பான பொதுமைத் தன்மையின் உள்ளார்ந்த கோரிக்கைகளுக்கு ஏற்பவும், தன்னை நிறுவியவரின் கட்டளைக்குப் பணிந்தும் எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியை பறைசாற்ற முயல்கிறது. இத்திருஅவை திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. திருத்தூதர்களோ கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ''உண்மையின் செய்தியைப் பறைசாற்றிச் சபைகளைத் தோற்றுவித்தனர். இன்றைய வரலாற்றுச் சூழமைவு மனித குலத்தைப் புதியதொரு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இப்பின்னணியில், மண்ணுலகிற்கு உப்பும், ஒளியுமான திருஅவை எல்லாப் படைப்புகளையும் மீட்டுப் புதுப்பிக்க உடனடியாக அழைக்கப்படுகிறது. இதனால் அனைத்தும் கிறிஸ்துவில் புத்துயிர் பெற்று அவரில் எல்லா மனிதரும் ஒரே குடும்பமும் கடவுளின் ஒரே மக்களினமுமாக அமைவர்” என்று நற்செய்தி அறிவிப்புப் பணி பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் எடுத்துரைக்கின்றன.

இரண்டாவதாக, நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு தொடர் ஒட்டம். நாம் பள்ளிகளில் படித்த காலங்களில் தொடர் ஓட்டம் என்ற ஒரு விளையாட்டைப் பார்த்திருப்போம். இது மிகவும் விறுவிறுப்பான ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டில் ஒரு அணிக்கு மூவர் வீதம் 4 அணியிலிருந்து பன்னிரண்டு பேர் பங்குபெறுவர். முதலில் 4 பேர் கையில் கோலுடன்  வரிசையாக நிற்பர். அதிலிருந்து சற்று தூரத்தில் அடுத்த நான்கு பேர் நிற்பர். இறுதியாக அதிலிருந்து சற்று தொலைவில் இன்னும் 4 பேர் வரிசையாக நிற்பர். விசில் சப்தம் கேட்டதும் தொடக்க வரிசையில் இருப்பவர் ஒவ்வொருவரும் ஓடிப்போய் இரண்டாவது வரிசையில் நிற்கும் அவர் அணியைச் சேர்ந்தவரிடம் அந்தக் கோலைக் கொடுக்க வேண்டும். கோலைப் பெற்றுக்கொண்ட அவர்கள், ஓடிப்போய் கடைசி வரிசையில் நிற்கும் அவரவர் அணியினரிடம் அதனைக் கொடுக்க வேண்டும். அவர்களில் யார் முதலாவதாக ஓடிவந்து எல்லைக்கோட்டில் உள்ளவர்களிடம் அந்தக் கோலை சேர்ப்பிக்கின்றாரோ அந்த அணியைச் சேர்ந்தவர்களே போட்டியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவர். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், அந்தக் கோலை கையில் எடுத்துக்கொண்டு ஓடிச்செல்லும்போது அதனைக் கீழே போட்டுவிடவும் கூடாது, இடையில் நின்றுவிடவும் கூடாது. அத்துடன் அதனை சரியான நேரத்தில் சரியான நபரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். அதேவேளையில், எதிர்திசையில் இருக்கும் அந்தந்த அணியைச் சேர்ந்தவர்கள், மிகக் கவனமாக, அந்தக் கோலை பெற்றுக்கொண்டு இலக்கு நோக்கி ஓடுவதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

இந்த விளையாட்டில் கொடுக்கப்படும் கோலை போன்றதுதான் நற்செய்தி அறிவிப்புப் பணியும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு அவர் கொடுத்த ‘நற்செய்தி’ என்ற கோல் அவருடைய சீடர்கள் தொடங்கி பல தலைமுறையினரைக் கடந்து, இன்று நமது ஒவ்வொருவரின் கரங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் நமது பிள்ளைகளிடம் கொடுக்கவேண்டும். அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டு, அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பல்வேறு சந்ததிகள் தாண்டியும் அது தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதாவது, நமது ஆண்டவர் இயேசு கூறுவதுபோன்று, உலகம் முடிவுவரை அவரது வாழ்வு பற்றிய நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்படவேண்டும். ஆகவே, நமது கரங்களில் இருக்கும் நற்செய்தி என்னும் கோலை விழிப்புடனும், பொறுப்புடனும், நம்பிக்கையுடனும் நாம் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வோம். நற்செய்தி அறிவிப்பு என்னும் இந்தத் தொடர் ஓட்டத்தில் துன்பங்கள், வேதனைகள், அவமானங்கள், இடர்பாடுகள், இன்னல்கள், சித்ரவதைகள், வேதகலாபனைகள், கொடிய மரணங்கள் என அடுக்கடுக்காய்த் தொடர்ந்தாலும் அத்தனை சவால்களையும் இறைநம்பிக்கையுடனும், துணிவுடனும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். இயேசுவின் வழியில் இவைகளை நாம் வெற்றிகொள்ளும்போது, நமக்கான பரிசு விண்ணகத்தில் காத்திருக்கிறது என்பதையும் மனதில் கொள்வோம்.

ஆனால், ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும். (பிலி 3:13-14). என்றும், இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில், என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம் (கலா 6:17) என்றும் கூறுவதன் வழியாக, நற்செய்தி அறிவிப்புப் பணியில் நாம் எதிர்கொள்ளவேண்டிய இன்னல்களையும் அதற்காக நாம் பெறப்போகின்ற உயரிய வெற்றிப் பரிசையும் நம் கண்முன் நிறுத்துகிறார் புனித பவுலடியார்.

ஆகவே, நற்செய்தி அறிவிப்பு என்ற தொடர் ஓட்டப் பயணத்தில் உயிர்த்த ஆண்டவரின் வழியிலே நாமும் அவரின் நீட்சிகளாகவும் சாட்சிகளாகவும் வாழ்வோம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2022, 13:50