தேடுதல்

இறைவேண்டல் செய்யும் பெண் இறைவேண்டல் செய்யும் பெண்  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 31-4 -திக்கற்றவருக்குத் தெய்வமே துணை

சவுல் போன்ற அதிகாரவெறி கொண்டவர்களால், உடன்பிறந்த உறவுகளால், நம்மை பயன்படுத்திவிட்டு எச்சில் பொருளாய் தூக்கி எறிபவர்களால் நாம் துன்புறுத்தப்படும் போது, நமது இறுதி நம்பிக்கையும் நம்மைக் காப்பவருமான கடவுளிடம் திரும்புவோம்.
திருப்பாடல் 31-4

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

'துன்புறுவோரைக் காக்கும் கடவுள்' என்ற தலைப்பில் கடந்த வார நமது விவிலியத் தேடலில் 31ம் திருப்பாடலில் 8 முதல் 19 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 11 முதல் 14 வரையுள்ள இறைவார்த்தைகள் வெளிப்படுத்தும் உள்ளொளிகள் குறித்து தியானிப்போம். இப்போது, அவ்வார்த்தைகளை வாசிப்போம்.   

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன். (வசனம் 11-14).

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சகுந்தலா (49). இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 மகள்கள் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சகுந்தலா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் சந்தேக மரணம் எனக் காவலர்கள் விசாரித்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சகுந்தலாதான் குழந்தையைக் கிணற்றில் வீசியுள்ளார் என கொலை வழக்குப்பதிவு செய்து, காவலர்கள் சகுந்தலாவை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம்,  சகுந்தலா மீதான கொலை வழக்கில்,  அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  சகுந்தலா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மேல் முறையீடு செய்தார். கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற சகுந்தலாவின்  மேல் முறையீட்டு  மனு மீதான இறுதி கட்ட விசாரணையின் போது,  அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு வழக்கறிஞர்கள் தாமஸ் பிராங்ளின் சீசர், கவுதன் ஆகியோர் சகுந்தலாவின் மேல் முறையீடு மீதான உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை இரத்து செய்து, அவருக்கு பிணை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சகுந்தலாவுக்கு பிணை அளித்து, அவர் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் விசாரணை நடத்த கடந்த ஆண்டு ஜுலை 8ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சகுந்தலாவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சகுந்தலாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாட்சிகளின் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், பிறழ் சாட்சியம், உடற்கூறாய்வு அறிக்கை உள்ளிட்டவற்றில் உள்ள குளறுபடி ஆகியவற்றை வாதங்களாக முன் வைத்தனர். குறிப்பாக, குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உடற்கூறாய்வின் அறிக்கையின்படி, இறந்த பிறகே குழந்தை கிணற்றில் விழுந்துள்ளது. எனவே,  சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை என்றும், சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்றும் வாதிட்டனர். இதனால் சகுந்தலாவுக்கு அளிக்கப்பட்ட ஆயுள்தண்டனை இரத்து செய்யப்படுகிறது என்றும் அவரிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால், அதைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் உத்தரவிட்டனர். இதன் வழியாக, செய்யாத குற்றத்துக்காக 11 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவித்து வந்த சகுந்தலா, 18 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கிலிருந்து குற்றமற்றவர் என முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்படிபட்ட நிலையில் சகுந்தலா தனிமைச் சிறையில் மனதளவிலும் உடளவிலும் எத்தனை துயரங்களை அனுபவித்திருப்பார். தான் குற்றமற்றவர் என எத்தனை நாள்கள் அவர் மனதிற்குள் புலம்பி அழுதிருப்பார். ஆனாலும் அவர் கடவுள்மீது கொண்டிருந்த நம்பிக்கையாலும், தனியொரு பெண்ணாக துணிச்சலோடு மனம் தளர்ந்துவிடாமல் போராடியதாலும் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். தாவீதுக்கு நிகழ்ந்து போன்று அவரும் தன்னுடைய எதிரிகளால் சூழ்ச்சிநிறை வலைகளில் மிகவும் கொடுமையாக சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கின்றது. தாவீது கூறுவது போன்று, உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன் என்ற இறைவார்த்தைகளை சகுந்தலாவின் வாழ்வோடு நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், “மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்” என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன் (எரே : 19), என்று எரேமியா புலம்புவதைப் பார்க்கிறோம். அவ்வாறே, புனித பவுலடியாரும் தனது நற்செய்தி அறிவிப்புப் பணியில் தன் எதிரிகளால் கொடுந்துயர்களை அனுபவித்தார். உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள் (திப 16:22).

உனக்கு எதிரி என்று வெளியில் யாரும் இல்லை. எல்லாம் உள்ளுக்குள்தான் அதாவது உன் உறவுகளுக்குள்தான் இருக்கிறது என்று கூறுவார்கள். அது பெருமளவு உண்மைதான். காரணம், சொத்தின்மீது கொள்ளும் பேராசைதான் உண்மை உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றன. சொத்துக்காக எத்தனை படுகொலைகள், எத்தனை உறவு முறிவுகள், எத்தனை பகையுணர்வுகள், எத்தனை நீதிமன்ற வழக்குகள் தினம்தினம் நிகழ்கின்றன. இதனால் உறவுகளைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளத்தில் வேதனைகள், பழிவாங்கத் தூண்டும் எண்ணங்கள், அவர்களை எதிரிகளாகவே பார்க்கத் தூண்டும் மனோபாவங்கள் என நீள்கின்றன.

அண்மையில் எனது நண்பர் ஒருவர் தன் குடும்பச் சூழல் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார். “எனது அப்பாவுடன் பிறந்தது மொத்தம் 7 பேர். அவர்களில் ஒருவர் பெண். தற்போது ஒரே ஒரு சித்தப்பா மட்டும்தான் உயிரோடு இருக்கிறார். எங்கள் குடும்பங்களில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணமே அவர்தான். வயதான இந்த நிலையிலும் கூட சொத்தின்மீது கொண்ட ஆசைமட்டும் அழியவில்லை. இப்போதுகூட யாரை ஏமாற்றலாம், யார் சொத்தை கொள்ளையடிக்கலாம் என்றுதான் திட்டம்போட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய அண்ணன் மகனான எனக்கு பத்திரத்தில் இடம் இருந்தும்கூட நடைபாதைத் தர மறுக்கிறார். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இது விடயமாக ஏற்பட்ட தகராறில் அவருடை மகன் மருமகன், எனது பெரியப்பா மகன் உட்பட என்னை அடித்து குற்றுயிரும் கொலை உயிருமாக விட்டுச் சென்றனர். ஒருவாரம் அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நியாயம் கேட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தேன். அங்கும் எங்கள் ஊரின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் எனது உறவுக்காரருமான ஒருவரை வைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டனர். ‘இது எங்கள் வீட்டுப் பிரச்னை. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று காவல் நிலையத்தில் கூறிய அவர் இன்றுவரை இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்கவே இல்லை. எங்கள் குடும்பங்களுக்குள் தொடர்ந்து பகையை மூட்டிவருவதே அவர்தான். அவர்களைப் பொருத்தமாட்டில் இன்றுவரை நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றோம். ‘எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள்’ என்ற திருப்பாடல் வார்த்தைகள் என் வாழ்விலும் அப்படியே நடக்கிறது. ஆனாலும் தாவீதைப் போன்று கடவுளிடம் என் வழக்கை ஒப்படைத்து செபித்து வருகிறேன். கடவுள் எனக்கு நீதி வழங்க வேண்டுமென எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று தனது வேதனையைக் கொட்டினார். திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்றும் கடவுள் நிச்சயம் உங்களுக்கு உதவுவார் என்றும் நான் அவருக்கு ஆறுதல் கூறினேன்.

கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்ட தாவீதே இந்தளவுக்குப் புலம்பித் தீர்க்கிறார் என்பதைக் காணும்போது, அவரை ஒழித்துக்கட்டுவதில் சவுல் எத்தகைய கொடியவராக  இருந்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்கமுடிகிறது. ஆகவே, நமது அன்றாட வாழ்விலும் சவுல் போன்ற அதிகாரவெறி கொண்டவர்களால், உடன்பிறந்த உறவுகளால், நம்மை பயன்படுத்திவிட்டு எச்சில் பொருளாய் தூக்கி எறிபவர்களால் நாம் துன்புறுத்தப்படும்போது, நமது இறுதி நம்பிக்கையும் நம்மைக் காப்பவருமான கடவுளிடம் சரணடைவோம். அதற்காக இப்போது இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2022, 13:11