தேடுதல்

துன்புறுவோரைக் காக்கும் கடவுள் துன்புறுவோரைக் காக்கும் கடவுள்  (©paul - stock.adobe.com)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 31-3–துன்புறுவோரை காக்கும் கடவுள்

பூமியில் மனிதர் எதிர்கொள்ளும் எல்லா வகையான துன்பங்களுக்கும் காரணம், கடவுள் காட்டிய கட்டளைகளுக்கு அடிபணியாமல் வாழ்வதுதான்
திருப்பாடல் 31 பகுதி 3

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 31ம் திருப்பாடலில் 5 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 8 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைஒளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

"என் எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை; அகன்ற இடத்தில் காலூன்றி நிற்கவைத்தீர். ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்; துயரத்தால் என் கண்ணும் என் உயிரும் என் உடலும் தளர்ந்து போயின. என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது;  ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது; துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது;  என் எலும்புகள் தளர்ந்து போகின்றன." (வசனங்கள் 8-10).

இன்றைய உலகில் மனிதர் எண்ணிலடங்கா பிரச்சனைகளையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். குடும்ப உறவுகளில் தீராத பகைமை, மணமுறிவுகள், அமைதியின்மை, இயற்கை பேரழிவுகள், சாலை விபத்துகள், போர்கள், இன அழிப்பு, தீவிரவாதத் தாக்குதல்கள், கொடூர கொள்ளை நோய்கள், வறுமை, பட்டினி, குடிநீரின்மை என மனிதரின் பிரச்சனைகளும் துயரங்களும் நீண்டுகொண்டே செல்கின்றன. இதைத்தான், ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி’ என்று என்று கவிஞர் கண்ணதாசன் தன் கவிதையில் வடித்தார். பல நேரங்களில் இவற்றையெல்லாம் தாங்க முடியாத நிலையில், நம்மை உருவாக்கிய கடவுளை கடிந்துகொள்வதன் வழியாக நமது கோபத்தையும் ஆற்றாமையையும் கொஞ்சம் தணித்துக்கொள்கிறோம்.  

துயர நிகழ்வுகளைச் சந்திக்கும்போதெல்லாம் கோபப்படுவது மனிதரின் இயல்பான குணங்களில் ஒன்றுதான். என்னைச் சுற்றி இத்தனைபேர் இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்றும், என்னை மட்டும் கடவுள் ஏன் இப்படி பழிவாங்க வேண்டும் என்றும் நாம் கேள்விகள் எழுப்புகின்றோம். புலம்பித் தவிக்கின்றோம். ஆனால் அதேவேளையில், பிரிவுகளும், துன்ப துயரங்களும், வேதனை வருத்தங்களும்,  நோய்களும், இறப்புகளும் மனித வாழ்வில் பிரிக்கமுடியாதவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முற்படும்போது வாழ்க்கையின் பொருளைப் புரிந்துகொள்கிறோம். “பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி” (யோபு14:1) என்று யோபு வாழ்வின் நியதியை எடுத்துரைக்கின்றார். அப்படியானால் துன்பங்கள் அனைத்திற்கும் முடிவைக் கொண்டு வருவேன் என்று கடவுள் வாக்குறுதி அளித்திருப்பதைக் காணும்போது அவர்மீது இப்படிக் கோபப்படுவதில் அர்த்தமில்லை. மேலும் நமக்குத் தீமையை விளைவிக்கும் செயல்களைக் கடவுளே ஏற்படுத்துகிறார் என்று நினைப்பதிலும் நியாயமில்லை என்றே தோன்றுகிறது.

அப்படியென்றால், கடவுளை குறைசொல்வதைவிட, அவர் காட்டிய வழியில் நாம் வாழ்கின்றோமா என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும். பூமியில் மனிதர் எதிர்கொள்ளும் எல்லா வகையான துன்பங்களுக்கும் காரணம், கடவுள் காட்டிய கட்டளைகளுக்கு அடிபணியாமல் வாழ்வதுதான். துன்பங்களைச் சந்திக்கும்போது, அதற்கான காரணத்தை மறந்துவிடும் பார்வையற்றவர்களாய் வாழ்கின்றோம் என்பதை நாம் ஆன்ம பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். நாம் அனுபவிக்கும் துன்பங்களும் வேதனைகளும் நம்மைப் பக்குவப்படுத்தலாம் என்றும், கடவுள் அனுமதிக்கும் சோதனைகள் நம்முடைய இறைநம்பிக்கையைச் சுத்திகரிக்கலாம் என்றும் திருவிவிலியம் எடுத்துரைக்கின்றது. "உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்" (1கொரி 10:13). என்கிறார் புனித பவுலடியார். அதேவேளையில், கடும் சோதனைகளையும் துன்பங்களையும் சந்திக்கும் பலர், பொறுமைசாலிகளாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மாறுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழகத்திலுள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்த்த தந்தை, மகன் இருவருடைய படுகொலைகளால் தமிழகமே அதிர்ந்துபோனது. இதற்கு கடவுளா காரணம்? இல்லவே இல்லை. இதற்கு முக்கிய காரணம், ‘அதிகாரத் திமிர்’. ஏனென்றால், எதைச்செய்தாலும், தன்னை ‘அதிகார வர்க்கம்’ காப்பாற்றும் என்கிற ஆணவம். எவ்வளவு ஆணவம் கொண்டிருந்தாலும், தோ்தல் நேரத்தில் ‘வீசுவதை வீசி எறிந்தால் மக்கள் தங்களுக்கு மாறி மாறி வாக்களித்து, ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து விடுவார்கள் என்கிற மமதையே, இங்கு நடக்கிற எல்லா அப்பாவிகள் மற்றும் நீதிமான்களின் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம். இந்த இரண்டையும் தாண்டி, இந்தத் திமிரும், செருக்கும், ஆணவமும் இவர்களின் தலைக்கேற வேறுசில முக்கிய காரணங்களாக இருப்பவை சாதி, இனம், மொழி, மதம், மற்றும் அரசியல் கட்சிகள் என்ற அடையாளங்கள். ஏனென்றால், இவற்றைப் பார்த்து, வாக்களிக்கும் ஒவ்வொரு ‘மதியிழந்த’ வாக்காளனும், இந்த அப்பாவிகள் மற்றும் நீதிமான்கள் துன்பப்பட காரணமாக அமைகின்றனர் என்பதையும் இந்நேரத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இரஷ்ய அதிபர் விலாடி மீர் புதின் என்ற ஒற்றை மனிதரின் அதிகார வெறியும், ஆணவப்போக்கும் இன்று உக்ரைனின் இலட்சக்கணக்கான மக்களைப் புலம்பெயர்ந்தோராக்கி நிர்கதியில் நிற்க வைத்திருக்கின்றது. இப்போது குறுங்கதை ஒன்றை உள்ளத்தில் உள்வாங்குவோம்.

அந்தோணி என்பவர் முடிவெட்டிக் கொள்வதற்கு வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றார். முடிதிருத்துபவர் அவருக்கு நெருக்கமான நண்பர். இதனால் இருவரும் பல காரியங்கள் குறித்து மகிழ்ச்சியாக உரையாடுவது வழக்கம். அன்றும் அப்படியே பல காரியங்கள் குறித்து உரையாடினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது முடிதிருத்துபவர், “எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று கூட நான் நம்ப மாட்டேன்” என்றார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார் அந்தோணி. அதற்கு முடிதிருத்துபவர், “தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும், போரும் பகையும் இருக்குமா? இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை” என்றார்.

அந்தோணி அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார். முடிதிருத்தும் வேலைமுடிந்து, அந்தோணி வெளியே போனார். அவர் போன சற்று நேரத்தில், அவ்வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய் ஒரு ஆள் நிற்பதை முடிதிருத்துபவர் பார்த்தார். அந்த நபரைப் பார்த்தால்,  முடிதிருத்தும் கடையை மாதக் கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அப்போது அவர் நண்பரான அந்தோணி மீண்டும் கடைக்குள் வந்தார். “என்னப்பா விடயம், திரும்பவும் வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார் முடிதிருத்துபவர். “இங்கே முடிதிருத்துபவர் ஒருவர் கூட இல்லை என்று சொல்லிவிட்டுப்போகலாம் என்று வந்தேன்” என்றார் அந்தோணி. “என்ன உளறுகிறீர்கள்?  இதோ.. நான் இருக்கிறேனே. நானும் முடிதிருத்துபவன் தானே? என்னடம்தானே நீர் வழக்கமாக முடிவெட்டிக்கொள்கிறீர். அப்படி இருக்க, முடிதிருத்துபவரே இல்லை என்று எப்படி நீர் சொல்லலாம்?” என்று கோபமாகக் கேட்டார் முடிதிருத்துபவர். “ஓ அப்படியா...? இது உண்மை என்றால், அதோ தெருவில் நிற்கிற அந்த ஆள், இப்படி அதிகமான தலைமுடியுடனும், சிக்குப்பிடித்த தாடியுடனும் இருப்பாரா?” என்று கேட்டார் அந்தோணி. “அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அந்த நபர் என்னிடம் முடிவெட்டிக்கொள்வதற்கு வருவதில்லை” என்றார் முடிதிருத்துபவர். “சரியாகச் சொன்னீர் நண்பரே. அதுமாதிரிதான், கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால், மக்கள் அவரைத் தேடி வருவதில்லை. அதனால்தான் நிறைய துன்பமும், வேதனையும், பகையும், போரும் உலகில் நிறைந்துள்ளன!” என்றார் அந்தோணி. உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.

நாம் தியானித்துக் கொண்டிருக்கும் இந்தத் திருப்பாடலின் வரிகள், தாவீதின் வேதனை நிறைந்த புலம்பல்களையும், கண்ணீரையும் அதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ள சவுலின் சுயநலம் நிறைந்த பதவி வெறியையும், ஆணவப் போக்குகளையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன. "என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது;  ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது; துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது;  என் எலும்புகள் தளர்ந்து போகின்றன" என்ற வரிகள் அதனை நமக்கு உறுதி செய்கின்றன. ஆனாலும், இவ்வளவு துன்ப துயரங்கள், வேதனைகள் மற்றும் புலம்பல்கள் மத்தியிலும், என் எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை; அகன்ற இடத்தில் காலூன்றி நிற்கவைத்தீர் என்று தாவீது கூறுவதன் வழியாக கடவுள் எப்பொழுதும் துன்புறுவோரின் துணையாக இருக்கின்றார் என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றார். அது மட்டுமன்றி, சுயநலத்தால் மனிதர் நிகழ்த்தும் அத்தனை அநியாயங்களுக்கும் அட்டூழியச்செயல்களுக்கும் கடவுளை எவ்விதத்திலும் பழிசுமத்தவோ, குறைகூறவோ கூடாது என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறார் தாவீது அரசர். ஆகவே, நம் துன்ப துயரங்கள் மத்தியிலும் கடவுள்மீதான நமது நம்பிக்கையில் தளராமல் இருப்போம். படைத்த அவர் நம்மைப் பாதுகாத்துக்கொள்வார் என்றும் நம்புவோம். அதற்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2022, 13:18