அமைதி, உடன்பிறந்த உணர்விலிருந்து பிறக்கின்றது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உக்ரைன் நாட்டின் விவ் நகரில் நடைபெற்றுள்ள அமைதிப் பேரணி, அந்நாட்டில் போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று, இப்பேரணியில் கலந்துகொண்ட இத்தாலியின் பாரி உயர்மறைமாவட்ட பேராயர் Giuseppe Satriano அவர்கள் கூறியுள்ளார்.
"போரை நிறுத்துங்கள்" என்று முழக்கமிட்டுக்கொண்டே, ஏப்ரல் 02 இச்சனிக்கிழமையன்று, 220க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள், அறுபதுக்கும் அதிகமான கரவான் வாகனங்களோடு போலந்து நாட்டிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விவ் நகரை அடைந்தனர். ஏராளமான மருந்து மற்றும், உணவுப்பொருள்களுடன் இம்மக்கள் அந்நகர் சென்றுள்ளனர்.
திருத்தந்தை புனித 23ம் யோவான் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதிப் பேரணியில், 150க்கும் மேற்பட்ட, இத்தாலிய கத்தோலிக்க மற்றும், பொதுநிலை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, அவர்கள் எடுத்துச் சென்ற பொருள்களை உக்ரைன் மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்பேரணி நடைபெற்றது என்றும், நாம் வாழ்கின்ற வரலாற்றின் வருங்காலம் உடன்பிறந்த உணர்வைக் கொண்டதாய் இருக்கவேண்டும் என்றும், இவ்வுணர்வே பல்வேறு வரலாறுகள் மற்றும், உணர்வுகள்கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் என்றும், பேராயர் Satriano அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.
அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தனது திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியிருக்கும் கருத்தும் இதுவே எனவும், இவ்வுலகில் நாம் எல்லாரும் சகோதரர், சகோதரிகள், அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டிருப்பவர்கள் என்று திருத்தந்தை கூறியிருக்கிறார் எனவும், பேராயர் Satriano அவர்கள் தெரிவித்துள்ளார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்