தேடுதல்

உக்ரைனில் மனிதாபிமான உதவிகள் உக்ரைனில் மனிதாபிமான உதவிகள் 

உக்ரைனில் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் சகோதரிகளுக்கு ACN உதவி

உக்ரைனில் புலம்பெயர்ந்தோருக்கு உதவிவரும் துறவற சபை சகோதரிகளுக்கு தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு உதவி வழங்கியுள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருக்கு உதவிவரும் துறவற சபை அருள்சகோதரிகளுக்கு, ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு உதவி வழங்கியுள்ளது. 

உக்ரனின் Lviv நகர உயர்மறைமாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வகையில், ACN அமைப்பு, வீரத்துவத்துடன் பணியாற்றிவரும் துறவற சபை சகோதரிகளுக்கு ஏறத்தாழ 72,000 யூரோக்களைக் கொடுத்துள்ளது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால், தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேறியுள்ளவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக, அதிலும் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பொருட்டு  லிவிவ் நகரிலுள்ள தங்கள் துறவற சபையின் கதவுகள் எப்போதும் திறந்தேயுள்ளன என்று, புனித யோசேப்பு சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Tobiasza அவர்கள் ACN  அமைப்பிடம் கூறினார்.

சிறப்புத் தேவையுடையவர்களைக் கவனித்துக்கொள்வது உட்பட, சபை தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகத் தெரிவித்த அருள்சகோதரி Tobiasza அவர்கள், புலம்பெயர்ந்து வருவோரை தங்கவைப்பதிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதிலும், குறிப்பாக, அவர்தம் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதிலும் சிறப்பான அக்கறை காட்டிவருவதாகவும் ACN அமைப்பிடம் மேலும் தெரிவித்தார்.

சகோதரிகள் கவனித்து வரும் புலம்பெயர்ந்தவர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ACN அமைப்பைத் தொடர்புகொண்ட, உக்ரைனின் இலத்தீன்-வழிபாட்டுமுறை பெண் துறவு சபைகள் அமைப்பின் தலைவரான சகோதரி Edita Duszczak அவர்களின் அவசர கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் ACN இந்த உதவியை அறிவித்துள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2022, 16:18