உயிர்ப்புப் பெருவிழா தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
இலங்கையில், 2019ம் ஆண்டில், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு நீதி கேட்டு, அந்நாட்டின் அனைத்து நிலைகளிலுள்ள மக்களும் அரசை வலியுறுத்தி வருகின்றனர் என, யூக்கா செய்தி கூறுகிறது.
பொருளாதாரத்தில் கடுமையான சூழல்களை, நாடு எதிர்கொண்டுவரும் இவ்வேளையில் இலங்கை அரசை பதவி விலகுமாறும், 269 பேரின் உயிரைக் காவுகொண்ட அந்தப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய உண்மையான குற்றவாளிகள் குறித்த விவரங்களை வெளியிடுமாறும் போராட்டதாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே கருத்துக்களுக்காக, ஏப்ரல் 17, இஞ்ஞாயிறன்று, கொழும்பு நகரில் அரசுத்தலைவர் செயலகத்தின் முன்பாக, அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்றன. மேலும், பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன. இவற்றில், பல்வேறு மதப் பிரதிநிதிகளும் பங்குபெற்றனர்.
இலங்கையில் இடம்பெறும் இப்போராட்டங்களில், கத்தோலிக்கத் திருஅவை பொது மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றது எனவும், இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியும், அவை குறித்த உண்மைகள் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கு திருஅவை அரசிடம் விளக்கம் கேட்கிறது எனவும், அருள்பணி சிரில் காமினி அவர்கள் கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கொண்டாடப்பட்ட உயிர்ப்புப் பெருவிழாவன்று, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் உட்பட மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர பயணியர் விடுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 269 பேர் உயிரிழந்தனர் மற்றும், 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டாலர் என்று சொல்லப்படுகிறது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்