இலங்கை தலத்திருஅவை: அரசு பதவி விலகவேண்டும்
1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப்பின், இப்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்வேளை, அரசு பதவி விலகவேண்டும் என்று, நாட்டின் பல்வேறு நகரங்களில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் உட்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 09, கடந்த சனிக்கிழமையன்று நீர்க்கொழும்புவில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் மற்றும், பல்சமயத் தலைவர்கள் இணைந்து, தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர்.
அப்போராட்டத்தின்போது உரையாற்றிய, கர்தினால் இரஞ்சித் அவர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமாகிக்கொண்டுவரும் இவ்வேளையில், பெரிய அளவில் மாற்றங்களோடு, நாட்டிற்குப் புதியதொரு துவக்கம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.
நாட்டை ஆள்வதற்கு திறமைகொண்ட யாரிடமாவது அதனை ஒப்படைக்கவேண்டும், மற்றும், ஊழல் அமைப்பை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள மக்களுக்குத் துணிச்சல் வேண்டும் என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறினார்.
விளம்பரத் தட்டிகள், கொடிகள் போன்றவற்றைப் பிடித்துக்கொண்டு போராடிய மக்கள், இலங்கை அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்களும், அவரது அரசும் பதவி விலகவேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், அரசுத்தலைவர் பதவி விலகும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இரத்னபுரா ஆயர் Cletus Chandrasiri Perera, பதுல்லா ஆயர் Winston S. Fernando, அனுராதபுரா ஆயர்
Norbert Andradhi போன்றோரும் கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, அரசுத்தலைவர் பதவி விலக மறுத்து வருகிறார் என்றும், இராஜபக்ஷே குடும்பத்தினர் சிலர், நாட்டிலிருந்து பணத்தைத் திருடிக்கொண்டு இலங்கையைவிட்டு வெளியேறிவிட்டனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்