உக்ரேனிய குழந்தைகளுக்கு ஹங்கேரி ஆசிரியர்கள் கற்பிக்க ஆவல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனின் மோதலில் இருந்து தப்பியோடி வருபவர்களை வரவேற்பதில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் பணிகளைப் பாராட்டியுள்ளார் ஹங்கேரி நாட்டுக் கர்தினால் ஒருவர்.
ஏப்ரல் 17, உயிர்ப்புப் பெருவிழாவன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தொண்டு நிறுவனங்களைப் பாராட்டியுள்ள ஹங்கேரியின் கர்தினால் Péter Erdő அவர்கள், இயேசு ஆண்டவர், தனது வாழ்வையே உயிர்த்தியாகம் செய்து, படைப்பாளரான கடவுளுக்கும் உலகுக்கும் இடையேயான அமைதியை மீட்டெடுத்தார் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு தடைபடாமல் இருப்பது முக்கியம் என்று கூறியுள்ள கர்தினால் Erdő அவர்கள், ஹங்கேரியின் கத்தோலிக்கப் பள்ளிகளில் சுமார் 200 ஆசிரியர்கள் உக்ரேனிய குழந்தைகளுக்கு கற்பிக்க முன்வந்துள்ளனர் என்றும், புடாபெஸ்ட் நகரிலும் அதற்கு வெளியிலும் உள்ள பல பள்ளிகள் உக்ரேனிய அல்லது இரஷ்ய மொழி மட்டுமே பேசும் குழந்தைகளுக்கு வகுப்புகளைத் தொடங்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும் உக்ரேனிய மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கும் இடையே நிலவும் சமய உறவானது தொடர்ந்து காக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள கர்தினால் Erdő அவர்கள், அண்மையில் இறைவேண்டலின் சக்தியை எடுத்துக்காட்டி அமைதிக்காக ஒன்றிணைந்து செபிக்க அழைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் அவ்வறிக்கையில நினைவு கூர்ந்துள்ளார்.
இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கில் இரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடங்கியுள்ளதை உக்ரேனிய அரசுத்தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார். Mykolaiv மற்றும் Golubivka நகரங்களிலுள்ள 25 உக்ரேனிய இராணுவத் தகவல் தொடர்பு மையங்களையும், இந்நகரங்களின் முக்கியத்துவம் வாய்ந்த 1260 இடங்களையும் தாக்கியுள்ளதாக இரஷ்யாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் Igor Konashenkov அவர்களும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்