தேடுதல்

நைஜீரியாவில் மனித வர்த்தகத்தை எதிர்க்கும் பெண்கள் நைஜீரியாவில் மனித வர்த்தகத்தை எதிர்க்கும் பெண்கள் 

மனித வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு அவசியம் – திருப்பீடம்

பல்வேறு அரசு-சாரா மற்றும், பொதுமக்கள் அமைப்புகள், மனித வர்த்தகத்தைத் தடைசெய்யும் நடவடிக்கைகளுக்கு தங்களை அர்ப்பணித்துள்ளன - அருள்திரு உர்பான்சிஸ்க்

மேரி தெரேசா: வத்திக்கான்

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து உருவாக்கிவரும் எதிர்விளைவுகள், உக்ரைன் போர் உருவாக்கியுள்ள மனிதாபிமான நெருக்கடி உள்ளிட்ட அப்போரின் எதிர்த்தாக்கங்கள் ஆகியவை முன்னிறுத்தும் புதிய சவால்களுக்கு மத்தியில், மனித வர்த்தகர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வரவேற்றுள்ளார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

“பாதுகாப்பு: மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரின் உரிமைகளைப் பாதுகாத்தல், மற்றும், அவர்களுக்கு உதவுவதை வலுப்படுத்தல்” என்ற தலைப்பில், OSCE எனப்படும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவை நடத்திய கூட்டத்தில், ஏப்ரல் 4, இத்திங்களன்று உரையாற்றிய அருள்திரு யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இடைக்காலத் தலைவரான  கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், ஹங்கேரி நாட்டிலும், உக்ரைன் நாட்டின் Berehove நகரத்திலும் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தபோது, உக்ரைன் புலம்பெயர்ந்தோர், குறிப்பாக, பெண்களும் சிறுமிகளும், கடத்தல், மற்றும், தவறாகப் பயன்படுத்தல் ஆகிய ஆபத்துக்களை எதிர்கொள்வது குறித்து எச்சரிக்கை விடுத்ததை, அருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள் எடுத்துரைத்தார்.

எனவே மனித வர்த்தகம் குறித்து நாம் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றுரைத்த, வியன்னாவிலுள்ள ஐ.நா. மற்றும் அனைத்துலக அமைப்புக்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இவ்வாண்டு செபக்கருத்து ஒன்றில், மனித வர்த்தகத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பதோடு, அவ்வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார் என்று குறிப்பிட்டார்.     

மனித வர்த்தகம் என்ற மிகவும் வெறுக்கத்தக்க குற்றத்திற்குப் பலியாகுவோரைப் பாதுகாப்பதற்கு, அரசுகள் தேசிய அளவில் தெளிவான சட்டங்களை இயற்றி ஆதரவளித்து வருகின்றன என்று கூறியுள்ள அருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், பல்வேறு அரசு-சாரா மற்றும், பொதுமக்கள் அமைப்புகளும், மனித வர்த்தகத்தைத் தடைசெய்யவும், அதற்குப் பலியாகுவோருக்குப் பாதுகாப்பளிக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஏப்ரல் 2022, 15:14