தேடுதல்

பெரூஜியாவிலிருந்து அசிசி வந்தடைந்த அமைதி ஊர்வலம் (கோப்பு படம்) பெரூஜியாவிலிருந்து அசிசி வந்தடைந்த அமைதி ஊர்வலம் (கோப்பு படம்) 

அசிசியில் அமைதிப் பேரணி: போர் அறிவற்றது, நிறுத்துங்கள்

"பெருஜியா-அசிசி அமைதிப் பேரணி" என்ற தலைப்பில், 1961ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டுவரும் வரலாற்று சிறப்புமிக்க இப்பேரணியை, இவ்வாண்டில் ஒரு சிறப்பு நிகழ்வாக நடத்துவதற்கு பிரான்சிஸ்கன் துறவியர் தீர்மானித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ இரு மாதங்களாக குண்டுவீச்சுக்கள், கொலைகள், துயரங்கள், அழிவுகள் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய போர், சமுதாயத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளவேளை, நன்மனம்கொண்ட அனைத்து மாந்தரும் அமைதிக்காக எழுப்பும் குரலுக்குச் செவிமடுப்பதற்கு இதுவே நேரம் என்று, அமைதிப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்பவர்கள் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 24, வருகிற ஞாயிறன்று, இத்தாலியின் பெருஜியா நகரிலிருந்து அசிசி நகரத்திற்கு, 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஒரு சிறப்பு அமைதிப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ள இருபால் பிரான்சிஸ்கன் சபைத் துறவியர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள, அறிவற்றதனமாக நடத்தப்படும் போரை நிறுத்துங்கள் என மீண்டும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

"பெருஜியா-அசிசி அமைதிப் பேரணி" என்ற தலைப்பில், 1961ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டுவரும் வரலாற்று சிறப்புமிக்க இப்பேரணியை, இவ்வாண்டில் ஒரு சிறப்பு நிகழ்வாக நடத்துவதற்கு அத்துறவியர் தீர்மானித்துள்ளனர்.

போர் இடம்பெற்றுவரும் உக்ரைனில் அமைதியின் பாதை தெரிவுசெய்யப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்பேரணியை நடத்தவிருப்பதாக, அசிசி நகரின் புனித பிரான்சிஸ் புனித இல்லத்தின் காவலராகிய அருள்சகோதரர் மாற்கோ மொரோனி அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

தற்போது உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், ஏமன், லிபியா, சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல், சாஹெல், எத்தியோப்பியா, காங்கோ சனநாயக குடியரசு, ஆப்கானிஸ்தான் மற்றும், இப்பூமிக்கோளத்தின் ஏனைய நாடுகளிலும் துண்டு துண்டாய் இடம்பெறும் மூன்றாம் உலகப்போர் நிறுத்தப்படும்படியாகவும் விண்ணப்பிக்கப்படும் என்றும், மொரோனி அவர்கள் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில், அமைதி மற்றும், தோழமையுணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 1961ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, "பெருஜியா-அசிசி அமைதிப் பேரணி" முதன்முறையாக நடத்தப்பட்டது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2022, 15:11