தேடுதல்

உயிர்த்த இயேசு தன் சீடர்களுடன் உயிர்த்த இயேசு தன் சீடர்களுடன் 

பாஸ்கா காலம் 3ம் ஞாயிறு: பற்றுள்ள வாழ்விலிருந்து.....

பேதுருவைப் போன்று பழைய வாழ்வுக்குரியவற்றை களைந்துவிட்டு புதிய வாழ்வுக்குரியவற்றை அணிந்துகொள்வோம். நற்செய்தி அறிவிப்புப் பணி நமது வாழ்வின் மையமாகட்டும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. தி.ப.5:27b-32. 40b-41 II. திவெ.5:11-14  III. யோவா.21:1-19)

ஞாயிறு மறையுரைச் சிந்தனை - 01.05.2022

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். பழைய வாழ்வுக்குரியவற்றைக் களைந்துவிட்டு புதிய வாழ்வுக்குரியவற்றை அணிந்துகொள்ள இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இயேசு சபையினர் இவ்வாண்டை புனித இஞ்ஞாசியார் ஆண்டாகக் கொண்டாடுகின்றனர். அதாவது, புனித இஞ்ஞாசியார் மனமாற்றம் பெற்ற 500வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். அவர் பாம்பலூனா கோட்டையில் போரிட்டபோது காலில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்நிலையிலும்கூட அவர் உலக மாயையிலிருந்து  விடுபடவே இல்லை. எப்படியாவது மீண்டெழுந்து சென்று உலகுக்குரிய காரியங்களில் வெற்றிபெறவேண்டும் என்றே எண்ணிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, வீரதீரமிக்க ஒரு படைவீரனாகவும், பிறகு படைத் தளபதியாகவும் திகழவேண்டும், இன்னும் பல போர்களில் வெற்றபெற்று மன்னரின் மனதில் இடம் பிடிக்கவேண்டும், அம்மன்னருக்குப் பிரமாணிக்கமுள்ளவராக இருக்கவேண்டும், பெயரும் புகழும் பெறவேண்டும், தனது காதல் நாயகியைக் கரம்பிடிக்கவேண்டும் என அவருடைய உலக ஆசைகள் நீண்டுகொண்டே போயின. அதனால்தான், உடைந்த அவரின் காலை சேர்த்துவைக்க மருத்துவர்கள் முற்பட்டபோது, உயிர்போகும் அந்தக் கொடிய வலியைக்கூட அவர் தாங்கிக்கொண்டார். ஆனால் வேறு வழியே இல்லாமல் இயேசுவின் வாழ்வையும் புனிதர்களின் வாழ்வையும் படிக்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டபோது, முதலில் வேண்டாவெறுப்பாகத்தான் அதனை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவற்றால் ஈர்க்கப்பட்டு அந்நூல்களை விரும்பிப் படிக்கத் தொடங்கினார்.

இந்த இரண்டு நூல்களும் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வையே மாற்றியது. இவ்வுலக மன்னருக்காக அவர் எவற்றையெல்லாம் சாதிக்க வேண்டுமென்று விரும்பினாரோ, அவைகள் அனைத்தையும் அனைத்துலக மன்னராம் இயேசு ஆண்டவருக்காகச் சாதித்துக் காட்டினார். எந்தளவுக்கு இவ்வுலக மன்னருக்கு பிரமாணிக்கமாக இருக்க அவர் ஆசைப்பட்டாரோ அதற்கும் மேலாகவே கிறிஸ்து அரசருக்குப் பிரமாணிக்கமாக இருந்தார். அதனால்தான் அவரைப்போலவே இவ்வுலகக் காரியங்களில் மூழ்கிப்போய்கிடந்த புனித சவேரியாரை அவரால் மனமாற்றமடையச் செய்ய முடிந்தது. ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (லூக் 9:25) என்ற இறைவார்த்தையை சவேரியாரிடம் திரும்பத் திரும்ப சொல்லித்தான் அவரை மனமாற்றினார். அப்படியென்றால், இதே இறைவார்த்தை இஞ்ஞாசியாருடைய உள்ளத்தையும் துளைத்திருக்கவேண்டும். அதனால்தான், ஒப்புயர்வற்ற அரசராம் இயேசு கிறிஸ்து மட்டுமே அவர் வாழ்வின் மையமாகிப்போனார். ஆக, புனித இஞ்ஞாசியாரின் மனமாற்றம் அவரைப் பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்விற்குக் கொண்டு சென்றது.

புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர் என்ற ஒருவர் வந்தார். அவரிடம் புத்தர், “நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசிவழங்கவேண்டும் என்றால், நீ நாளை அதிகாலை 4 மணிக்குத் தனியாக வரவேண்டும்” என்றார். அதன்படி அவர் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் தனியாக புத்தரின் குடிசைக்கு வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர், “நான் உன்னைத் தனியாகத்தானே வரச்சொன்னேன். எதற்காக இப்படி இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அப்போது அவர், தனக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா? என்று திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர், “நான் வெளியே உள்ள ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே இருக்கும் ஆட்களைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார். தேவதத்தர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்குத் உண்மை தெரிந்தது தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கிறது என்று. உடனே அவர் புத்தரிடம், “எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, மீண்டுமாக வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டும் புத்தரிடம் வந்தார். இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும் பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.

பேதுருவின் வாழ்வை நாம் ஆய்வுசெய்து பார்க்கும்போது இதே சிந்தனைகள்தாம் நம் நினைவுக்கு வருகின்றன. இயேசுவுடன் இணைந்த நிலையில் பெயரும் புகழும் பெற்று இவ்வுலகுக்குரிய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிவிடலாம் என்று பேதுரு தப்புக்கணக்குப் போட்டிருந்தார். அதனுடைய வெளிப்பாடுகளில் ஒன்றுதான், இயேசு கைது செய்யப்பட்டபோது மால்குஸ் என்ற படைவீரனின் காதை வெட்டியது. அவரைப் பொறுத்தளவில் இயேசு என்ற மெசியா தாவீதைப் போன்று வாளேந்திப் போரிட்டு எதிரிகளை வென்று, அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யப் போகிறவர் என்றும், அவரது ஆட்சியில் தனக்கும் நிச்சயம் பங்குண்டு என்றும் நினைத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே கானல் நீராய் கரைந்து போனது. இயேசுவின் பாடுகளும் மரணமும் பேதுருவுக்கு அவநம்பிக்கையைத் தந்திருந்ததால்தான், தனது சகத் தோழர்களிடம், ‘நான் மீன்பிடிக்கப் போகிறேன்’ என்று கூறி உடைந்துபோன உள்ளத்துடன் அவர் தனது பழைய வாழ்வுக்குத் திரும்புவதை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

ஆனால், உயிர்த்த ஆண்டவரின் நேரடிச் சந்திப்பும் உரையாடலும் அவருடைய வாழ்வை முற்றிலுமாக மாற்றுகின்றன. அதிலும் குறிப்பாக, “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்றும், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்றும், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்றும் உயிர்த்த ஆண்டவர் மும்முறை கேட்டபோது, பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” (யோவா 21:15-17) என்று தனது உள்ளத்தைத் திறப்பதைப் பார்க்கின்றோம். இறுதியாக வரும், “என் ஆடுகளைப் பேணிவளர்” என்ற இயேசுவின் வார்த்தையே உயிர்த்தியாகமிக்க பேதுருவின் நற்செய்தி பணிக்குப் புதிய பாதையாக அமைகிறது. உயிர்த்த ஆண்டவரின் தரிசனம் அவரைப் பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்விற்குக் கடந்துபோகச் செய்கின்றது. அதன் விளைவாகத் தனது ஒப்புயர்வற்றத் தலைவருக்காக எதையும் இழக்கத் தயாராகிறார். ‘இனிமேல் இதுதான் எனது பாதை, இதில்தான் எனது பயணம்’ என்ற தெளிவு பிறக்கிறது. இயேசுவின் பாடுகளும், இறப்பும், உயிர்ப்பும் அவரது நற்செய்தி பணிக்கான உரமாக அமைகின்றன. அதன்பிறகு, ‘எது வந்தாலும் சரி, என்ன ஆனாலும் சரி, ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்ற வீரமிகு துணிச்சலோடு காரியத்தில் இறங்குவதைப் பார்க்கிறோம்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். (திபா 4:18-20)

முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான். அவன் கொஞ்சமும்  தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான். ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்றுகொண்டிருந்தான். அந்தப் பக்கமாக முல்லா நடந்துவந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்தவேண்டும் என்று எண்ணினான். முல்லா தன் அருகே வந்ததும், “முல்லா அவர்களே, உலகத்திலேயே நீங்கள்தான் முற்றும் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர்” என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான்” எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான்? என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!” என்றார் முல்லா.

நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களுக்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரணம், முல்லாவையும்விட மேலான துறவி இந்த ஊரில் யார் இருக்கமுடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து, “முல்லா, இந்த ஊரிலுள்ள அந்த மகத்துவம் வாய்ந்த துறவி யார்?” என்ற கேட்டான். “அந்தத் துறவி நீர்தான்” என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான்.” உடனே, “நானா அந்தத் துறவி, அது எப்படி?” என்று கேட்டான்.” அதற்கு முல்லா, “என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருள்களைத்தான் துறப்பது வழக்கம். ஆனால் நீயோ, கடவுளையே துறந்துவிட்ட துறவியாகிவிட்டாயே! ஆகவே, உம்மை மிஞ்சக்கூடிய துறவி இந்த உலகத்தில் யார் உள்ளனர்?” என்று பதிலளித்தார். அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தைவிட்டு வேகமாக அகன்றுவிட்டான். துறவு வாழ்வுக்குத்  தங்களையே அர்ப்பணிப்போர் எல்லாவற்றையும் துறக்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது.  

இன்றையச் சூழலில், எல்லாவற்றையும் இயேசுவுக்காகத் துறந்துவிட்டோம் என்றுகூறி துறவற வாழ்விற்குள் நுழைந்த துறவியரில் பெரும்பாலோர், இயேசுவைத் துறந்துவிட்டு மற்ற எல்லாவற்றையும் பற்றிக்கொண்டுள்ளனர். தங்களின் பதவிக்காலம் முடிந்தும்கூட அந்தப் பதவியைத் துறக்கத் தயாராக இல்லை. தனக்கான சாதியப் பற்றைத் துறக்கத் தயாராக இல்லை, துறவற வாழ்வுக்கு சற்றும் பொருந்தாத ஆணவத்தையும், அகந்தையையும், மேலாதிக்கச் சிந்தனையையும் துறக்கத் தயாராக இல்லை. இப்படி எதையுமே துறக்கத் தயாராக இல்லாமல், நான் ஒரு துறவியாக இருக்கிறேன், தாயின் கருவில் உருவாகுமுன்பே ஆண்டவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார், தூய ஆவியார் என்னை அருள்பொழிவு செய்துள்ளார், ஆண்டவரின் நற்செய்தியை நான் நாள்தோறும் அறிவிக்கின்றேன் என்று சொல்லிக்கொள்வதில் நமக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை இக்கணம் உணர்வோம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். (குறள் - 341) என்ற திருக்குறளில், ஒருவர் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவராக இருக்கின்றாரோ, அந்தப் பொருளால் அவர் துன்பம் அடைவதில்லை என்கிறார் வள்ளுவர். பற்றுள்ள வாழ்விலிருந்து பற்றற்ற வாழ்வுக்கு நாம் கடந்து செல்ல வேண்டும். இந்தக் கடத்தல் நிலை இல்லாத துறவிகள்தாம் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொள்கின்றனர். ஆகவே, பேதுருவைப் போன்று பழைய வாழ்வுக்குரியவற்றைக் களைந்துவிட்டு புதிய வாழ்வுக்குரியவற்றை நாம் அணிந்துகொள்வோம். இல்லற வாழ்வில் இருந்தாலும் சரி துறவற வாழ்வில் இருந்தாலும் சரி, பேதுருவின் வழியிலே நற்செய்தி அறிவிப்புப் பணி நமது வாழ்வின் மையமாகட்டும். அதற்கான அருளை உயிர்த்த ஆண்டவர் நம் உள்ளங்களில் ஊற்றட்டும். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

‘பற்றுள்ள வாழ்விலிருந்து பற்றற்ற வாழ்வுக்குக் கடந்து செல்வோம்' என்ற தலைப்பில் இன்றைய ஞாயிறு மறையுரைச் சிந்தனையை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2022, 16:19