தேடுதல்

உக்ரைனிலிருந்து புலம்பெயரும் மக்கள் உக்ரைனிலிருந்து புலம்பெயரும் மக்கள்  

உக்ரைன் புலம்பெயர்ந்தோருக்கு மோல்டோவா காரித்தாஸ் உதவி

மோல்டோவா நாடு, உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, ஒரு கோடியே 10 இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ளது - ஆயர் Anton Cosa

மேரி தெரேசா: வத்திக்கான்

இரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துவரும் போர், Transnistria வரை பரவும் என்ற அச்சம் நிலவும்வேளை, மோல்டோவா நாடு, உக்ரைன் நாட்டுப் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தொடர்ந்து பணியாற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது என்று, மோல்டோவா காரித்தாஸ் மையத்தின் இயக்குனர் அருள்பணி Petru Ciobanu அவர்கள் கூறியுள்ளார்.

1990ம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்திலிருந்து மோல்டோவா தனி நாடாகப் பிரிந்தவுடன், உக்ரேனுக்கும், மோல்டோவாவின் கிழக்கு எல்லைக்கும் இடையில் அமைந்துள்ள Transnistriaவும், மோல்டோவாவிலிருந்து பிரிவதாக அறிவித்தது. ஆனால் அந்நடவடிக்கை உலகளாவிய சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, அதேநேரம், உலகளாவிய சமுதாயம், Transnistriaவை மோல்டோவாவின் ஒரு பகுதியாகவே அங்கீகரித்துள்ளது. இந்த Transnistriaவின் சில பகுதிகளில், கடந்த இரு நாள்களில், விவரிக்க முடியாத அளவில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதையடுத்து, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன.

மேலும், Transnistriaவில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பது தெளிவாக இல்லாவிடினும், மோல்டோவாவின் சூழல் அச்சத்திற்குரியதாகவே உள்ளது என்று, ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் Annalena Baerbock அவர்கள் இப்புதனன்று கூறியுள்ளார்.

கவலைகள் அதிகரிப்பு

இச்சூழல் குறித்து SIR செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, மோல்டோவா குடியரசின் Chişinău ஆயர் Anton Cosa அவர்கள், போர் குறித்து தான் பயப்படவில்லை, ஆனால், இந்நெருக்கடி, மோல்டோவாவில், இரஷ்ய ஆதரவு, உக்ரைன் ஆதரவு என இரு குழுக்களை உருவாக்கி, அவற்றுக்கு இடையே முரண்பாட்டுச் சூழல்களை ஏற்படுத்தக்கூடும் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், கிறிஸ்தவ நாடு என்ற முறையில், மோல்டோவா, தன் அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாக இருக்கும், மற்றும், அமைதிக்காகத் தொடர்ந்து உழைக்கும் என்றுரைத்துள்ள ஆயர் Anton Cosa அவர்கள், தன் நாடு, உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, ஒரு கோடியே 10 இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2022, 15:50