கர்தினால் போ: மியான்மாரில் தொடர் சிலுவைப்பாதை வாழ்வு
மேரி தெரேசா: வத்திக்கான்
மியான்மார் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறை, பெரிய அளவில் நிலவும் புலம்பெயர்வோர் பிரச்சனை போன்றவற்றால் அந்நாட்டு மக்களின் வாழ்வில் சிலுவைப்பாதை இன்றும் தொடர்கிறது என்று, யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் மியான்மாரின் மன்டலே பேராலயம் இராணுவத்தினரால் திடீர்சோதனை செய்யப்பட்டது, நாட்டில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி, கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை, அந்நாட்டுத் தலத்திருஅவை கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாரிக்கும் விதம் போன்றவை குறித்து, ஏப்ரல் 13, இப்புதனன்று வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்தினால் போ அவர்கள், இவ்வாறு கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மன்டலே பேராலயம் படைவீரர்களால் திடீர்சோதனை செய்யப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் போ அவர்கள், மியான்மாரில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மோசமாகிவரும்நிலையில், அந்நாட்டில் நிலவும் கடும் மனிதாபிமான நெருக்கடிகள் களையப்பட, உதவிக்கும் விண்ணப்பித்துள்ளார்.
2017ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மார் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப்பின், அவர் விட்டுச்சென்ற பாதையில் நடப்பதற்கு கத்தோலிக்கர் முயற்சித்து வருகின்றனர் எனவும், கர்தினால் போ அவர்கள் எடுத்துரைத்தார்.
மியான்மாரில் அமைதி நிலவ திருத்தந்தை தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பு, துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை அளிக்கின்றது எனவும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் போ அவர்கள், வத்திக்கான் செய்திகளிடம் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்