தேடுதல்

உக்ரைன் புலம்பெயர்ந்தோர் உக்ரைன் புலம்பெயர்ந்தோர் 

போரை நிறுத்துமாறு இரஷ்ய அரசுத்தலைவருக்கு வேண்டுகோள்

மாரியூபோல் நகர சிறார் மற்றும், மகப்பேறு மருத்துவமனை குண்டுவீச்சால் தாக்கப்பட்டிருப்பது, போரின் பயங்கரமான அடையாளம் - ஸ்காண்டிநேவிய ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டின் மாரியூபோல் நகரத்திலுள்ள, சிறார் மற்றும், மகப்பேறு மருத்துவமனை, புவியியல்படி எந்தவித இராணுவத் தாக்குதலுக்கு எட்டாத தூரத்தில், ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளவேளை, அம்மருத்துவமனை குண்டுவீச்சால் தாக்கப்பட்டிருப்பது, போரின் பயங்கரமான அடையாளமாக உள்ளது என்று, ஸ்காண்டிநேவிய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

உக்ரைனை இரஷ்யா ஆக்ரமித்திருப்பது குறித்து தங்களின் கடுங்கோபத்தை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்காண்டிநேவிய ஆயர்கள், உக்ரைன் மீது இரஷ்யா நடத்திவரும் போரை நிறுத்துமாறு, அந்நாட்டு அரசுத்தலைவர் விளாடிமீர் புடின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அன்னையரின் இரத்தமும் சிறாரின் அழுகுரலும் இம்மண்ணிலிருந்து விண்ணை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்றுரைத்துள்ள ஆயர்கள், போரை முடிவுக்குக்கொணர்ந்து, அமைதிக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாறு, அழைப்புவிடுத்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் இறையாண்மையை அவமதித்துள்ள இரஷ்யா, இலட்சக்கணக்கான மக்களின் சொல்லொண்ணாத் துயரங்களுக்கும் காரணமாகியுள்ளது எனவும் தங்களது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், உக்ரைன் நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் ஆற்றுவோம் எனவும் உறுதி கூறியுள்ளனர்.

இரஷ்ய அரசுத்தலைவருக்கு வேண்டுகோள்

இந்த அநீதியான போரை நிறுத்துமாறு, இரஷ்ய அரசுத்தலைவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், சில ஸ்காண்டிநேவிய நாடுகள், இரஷ்யா மற்றும், உக்ரைன் நாடுகளுடன் எல்லைகளையும், வரலாற்றுரீதியாக பிணைப்பையும் கொண்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2022, 14:42