கர்தினால் இரஞ்சித்: இலங்கைக்கு புதியதொரு தொடக்கம் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், அந்நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும்வேளை, அந்நாட்டிற்கு புதியதொரு தொடக்கமும், தேசிய அளவில் மாற்றமும் தேவைப்படுகின்றன என்று, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது எனவும், அந்நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகியுள்ள இந்நேரத்தில், நாட்டினர் அனைவரும் வளமையான வாழ்வுக்கு மேற்கொண்டுள்ள பாதை உண்மையானதா என்ற கேள்விக்குப் பதிலுறுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார், கர்தினால் இரஞ்சித்.
மார்ச் 27, இஞ்ஞாயிறன்று கொழும்பு நகரின் மீட்பராம் கிறிஸ்து பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, குடிமக்களும் தெரிந்துகொண்ட தவறான தெரிவுகளால், இன்றைய நாடு, ஒரு நம்பிக்கையற்ற சூழலை எதிர்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் மற்றும், கலாச்சாரச் சக்திகளிடம் சுரண்டப்படுவதற்கு, குடிமக்கள் தங்களையே அனுமதித்துள்ளனர் எனவும், 1948ம் ஆண்டில் பிரித்தானியாவிடமிருந்து இலங்கை விடுதலை அடைந்ததற்குப்பின், தற்போது அந்நாட்டின் 2 கோடியே 20 இலட்சம் மக்கள், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறினார்.
எரிவாயு நிலையங்களில் மக்கள் மணிக்கணக்காய் காத்திருப்பதைக் காண முடிகின்றது என்றுரைத்துள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி ஏற்றம், கடன் பிரச்சனை, பொருள்கள் பற்றாக்குறை, வெளிநாட்டு பணமாற்றத்தில் கடும் சரிவு போன்ற பிரச்சனைகளைக் குறிப்பிட்டுள்ளார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்