திருத்தந்தையர் வரலாறு – 4ம் செலஸ்டின், 4ம் இன்னசென்ட்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை 9ம் கிரகரி கூட்ட விரும்பிய பொதுஅவையில் ஆயர்கள் பங்கேற்கக் கூடாது என கட்டளையிட்டு தடை செய்ததுடன், அதனை மீறியவர்களை கைது செய்த பேரரசர் இரண்டாம் பெரடரிக், திருத்தந்தையை அச்சுறுத்தும் நோக்கத்தில் படைகளை நடத்தி உரோம் நகருக்கு வந்தவேளையில், திருத்தந்தை 9ம் கிரகரி இறைபதம் சேர்ந்தார். 1241ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, திருத்தந்தை 9ம் கிரகரி எதிர்பாராத விதமாக ஏறத்தாழ தனது 100வது(96) வயதில் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபர் 25ம் தேதி, புதிய திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார், திருத்தந்தை மூன்றாம் உர்பானின் உறவினரான மிலான் நகரைச் சேர்ந்த கர்தினால் Gofredo Castiglioni. திருப்பீடத்திற்கும் பேரரசர் இரண்டாம் பெரடரிக்குக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தநேரத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கஸ்திலியோனி அவர்கள், திருத்தந்தை 9ம் கிரகரியால் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருந்தவர். 1241ம் ஆண்டு, அக்டோபர் 25ம் தேதி, நான்காம் செலஸ்டின் என்ற பெயருடன் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய திருத்தந்தை, அதே ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி, 15 நாட்கள் திருஅவையை வழிநடத்தியபின்னர் இறைபதம் எய்தினார். தனக்கு வளைந்து கொடுக்காத திருத்தந்தை 9ம் கிரகரி இறந்ததும், அதற்கு அடுத்து வந்த திருத்தந்தை 4ம் செலஸ்டின் அவர்களும் 15 நாட்களுக்குப்பின் உயிரிழந்ததும், பேரரசர் இரண்டாம் பெரடரிக்கின் தீய எண்ணங்களுக்கு பலம் சேர்ப்பதாக இருந்தன. உரோம் நகரைச் சுற்றியிருந்த திருஅவை மாவட்டங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பேரரசர், தனக்கு வேண்டிய ஒருவரைத்தான் கர்தினால்கள் அடுத்த திருத்தந்தையாகத் தேர்வுசெய்யவேண்டும் என கட்டாயப்படுத்தினார். ஏற்கனவே திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பேரரசரின் குரலுக்குச் செவிமடுக்க மறுத்த கர்தினால்கள் அனைவரும், உரோம் நகருக்கு அருகில் உள்ள அனானி என்ற நகருக்கு தப்பியோடி, அங்கு தேர்தலை நடத்தி, Sinibaldo de Fiesehi என்பவரை புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவரும் 4ம் இன்னசென்ட் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். திருப்பீடத்திற்கு எதிர்ப்பு, திருஅவையிலிருந்து விலக்கி வைப்பு, தனக்குச் சாதகமாக இருப்பவர்தான் திருத்தந்தையாக வரவேண்டும் என்ற பேரரசரின் விருப்பம் போன்ற குளறுபடிகளால், புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவும், பொறுப்பேற்கவும் ஓராண்டு ஏழு மாதங்கள் 15 நாட்கள் பிடித்தன. தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பேரரசருடன் நட்பு பாராட்டி வந்த திருத்தந்தை 4ம் இன்னசென்ட், 1243ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி பொறுப்பேற்றவுடன், பேரரசரும், வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், அமைதிப் பரிந்துரைகளை முன்வைக்கவும் குழு ஒன்றை அனுப்பினார். ஆனால், பேரரசரின் நயவஞ்சகத்தை நன்கே அறிந்திருந்த புதிய திருத்தந்தை, அக்குழுவை சந்திக்க மறுத்தார். ஏனெனில், அக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்களும், பேரரசரைப்போல், திருஅவையிலிருந்து திருத்தந்தை 9ம் கிரகரியால் விலக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள். தான் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் திருத்தந்தை நான்காம் இன்னசென்ட், ஆயர்களும், துறவுமட அதிபரும் என மூவர் அடங்கிய குழு ஒன்றை இத்தாலியின் தென்பகுதி நகர் மெல்பி(Melfi)யில் தங்கியிருந்த பேரரசரிடம் அனுப்பி, அவரால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள திருஅவைத் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 1244ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, திருத்தந்தையுடன் ஓர் உடன்பாட்டிற்கு முன்வந்தார் பேரரசர். திருஅவையிலிருந்து தான் கைப்பற்றிய மாநிலங்களை விட்டுக்கொடுப்பது, திருத்தந்தை 9ம் கிரகரி கூட்டிய பொது அவையில் கலந்து கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்ட ஆயர்களை விடுதலைசெய்வது, திருத்தந்தைக்கு ஆதரவளித்த சிற்றரசுகளுக்கு மன்னிப்பு வழங்குவது என்ற வாக்குறுதிகளை வழங்கினார் பேரரசர் இரண்டாம் பெரடரிக். எவ்வகையிலும் நம்பகத்தன்மையற்ற பேரரசர், இத்தகைய வாக்குறுதிகளை அளித்த அதேவேளையில், உரோம் நகரில் கலகத்தைத் தூண்டியதுடன், தன்னால் கைது செய்யப்பட்ட ஆயர்களை விடுவிக்கவும் மறுத்தார். பேரரசரின் ஆதரவு பெற்ற கலகக்காரர்களால், திருத்தந்தை நான்காம் இன்னசென்ட், இத்தாலியை விட்டே வெளியேற ஆவல் கொண்டார். இவர் பிறந்த இடமான ஜெனோவாவிலிருந்து கப்பல் ஒன்று உரோம் நகருக்கு அருகில் இருக்கும் சிவித்தா வெக்கியா (Civitavecchia) நகருக்கு அனுப்பப்பட, ஏற்கனவே Sutri நகருக்கு வந்திருந்த திருத்தந்தை, ஜூன் 27 இரவோடு இரவாக, தலைமறைவாக, அந்த கப்பல் வழி இத்தாலியின் ஜெனோவா நகர் வந்தடைந்து, அக்டோபர் மாதம் பிரான்ஸ் சென்றடைந்தார். ஆறு ஆண்டுகள் பிரான்சிலேயே இருந்த திருத்தந்தை, புதிய பேரரசரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் இறங்கினார். இவரின் இந்த முயற்சி முழு வெற்றியடைவில்லை. பிரான்ஸ் மன்னர் புனித ஒன்பதாம் லுயியின் அமைதி முயற்சிகளும் வெற்றி காணவில்லை. இதற்கிடையில் 1250ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி, பேரரசர் இரண்டாம் பெரடரிக் காலமானார். அதற்குப் பின்னர் ஆட்சியை வழிநடத்திய நான்காம் கொன்ராட் (Conrad IV) மற்றும் மான்ப்ரெட் (Manfred) ஆகியோருக்கு எதிராகவும் திருத்தந்தையின் போராட்டம் தொடர்ந்தது. 1264ம் ஆண்டு மே மாதம் நான்காம் கொன்ராட் இறந்த பின்னரும், மான்ப்ரெட் திருத்தந்தைக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். சிசிலி தீவின் சுதந்திரம் குறித்ததில் முரண்பாடு வளர்ந்தது.
இதற்கிடையில், இங்கிலாந்திலும், ஆஸ்திரியாவில், ஹங்கேரியிலும், போர்த்துக்கல்லிலும், மன்னராட்சியின் குறைகளைக் களையவும், அமைதி நிலவவும் உதவினார் திருத்தந்தை. Prussia, இரஷ்யா, அர்மேனியா, மற்றும் மங்கோலியாவில் தலத்திருஅவைகளின் பணிகளுக்கு பெரும் ஆதரவளித்தார் திருத்தந்தை நான்காம் இன்னசென்ட். பேரரசருடன் இடம்பெற்ற மோதலில் திருத்தந்தை அதிகக் கவனம் செலுத்தியதால் திருஅவையின் நிர்வாக விவகாரங்கள் மிகப் பெரிய அளவில் சீர்கேடடைந்தன என சில வரலாற்று ஆசிரியர்கள் உரைக்கின்றனர். புனித பெனடிக்டின் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட சில்வெஸ்டர் துறவு சபையை 1247ம் ஆண்டும், ஏழை கிளாரா துறவு சபையை 1253ம் ஆண்டிலும் அங்கீகரித்தவர் திருத்தந்தை நான்காம் இன்னசென்ட் அவர்களே. இறையடியார்கள் எட்மண்ட் ரிச், வில்லியம், வெரோனாவின் பேதுரு, போலந்தின் ஸ்தனிஸ்லாஸ் ஆகியோரை திருஅவையில் புனிதர்களாக அறிவித்தவரும் இவரே.
திருஅவையை வழிநடத்திய 11 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த போதிலும், மிக உறுதியுடன் செயல்பட்ட திருத்தந்தை நான்காம் இன்னசென்ட், 1254ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்