தேடுதல்

Brusselsல் உக்ரைனுக்கு ஆதரவு Brusselsல் உக்ரைனுக்கு ஆதரவு 

இந்திய ஆயர்கள் உக்ரைனில் அமைதிக்காக இறைவேண்டல்

திருநீற்றுப்புதனை இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு பக்திமுயற்சிகளில் செலவழிக்குமாறு, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருநீற்றுப்புதனை இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு பக்திமுயற்சிகளில் செலவழிக்குமாறு, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, அனைத்து மறைமாவட்டங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

உக்ரைன் மற்றும், இரஷ்யாவுக்கிடையே இடம்பெற்றுவரும் போர் முடிவடைந்து அப்பகுதியில் அமைதி நிலவவேண்டும் என்ற கருத்துக்காக, தவக்காலம் துவங்கும் மார்ச் 2, இப்புதன்கிழமையை, இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு நாளாக கடைப்பிடிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு இந்தியக் கத்தோலிக்கரும் இணையுமாறு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவரான, கோவா-டாமன் பேராயர் பிலிப்நேரி ஃபெராவோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியின் இளவரசரைப் பின்செல்லும் நாம், இப்போதையக் கொடுந்துயரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இறைவேண்டல் மற்றும், தியாகம் ஆகிய ஆன்மீக ஆயுதங்களால் நம்மை நிரப்பவேண்டும் என்றும், உக்ரைனிலும், உலகின் சில பகுதிகளிலும் இடம்பெறும் போர்கள் முடிவுக்கு வரவும், உலகில் அமைதி நிலவவும் கடவுளை மன்றாடுவோம் என்றும், பேராயர் பெராவோ அவர்கள் கூறியுள்ளார். (UCAN)

இதற்கிடையே, ஐந்தாவது நாளாக போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Kharkiv நகரம், ஏவுகணையால் தாக்கப்பட்டிருப்பதாக, மார்ச் 1 இச்செவ்வாய்க்கிழமை செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2022, 15:58