உக்ரைனின் அமைதிக்காக ஐரோப்பியத் திருஅவை செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைன் நாட்டில் அமைதி, மற்றும், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்காக, மார்ச் 2, இப்புதனன்று துவங்கும் தவக்காலம் முழுவதும், ஐரோப்பியத் திருஅவை திருப்பலிகள் நிறைவேற்றி செபிக்கவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஒவ்வொரு திருஅவையும், இத்தவக்காலம் முழுவதும் நிறைவேற்றுகின்ற திருப்பலிகளை இக்கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்குமாறு, CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரும், வில்னியுஸ் பேராயருமான Gintaras Grušas அவர்கள், மார்ச் 01, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைனில் அமைதி, போர் மற்றும், பெருந்தொற்றால் இறந்தவர்களின் ஆன்மாக்களின் நிறையமைதி, பெருந்தொற்றுக் கிருமிகளால் இன்றும் துன்புறுவோரின் நல்சுகம் ஆகிய கருத்துக்களுக்காக, தலத்திருஅவைகள் திருப்பலிகள் நிறைவேற்றிச் செபிக்குமாறு, பேராயரின் அறிக்கை விண்ணப்பிக்கின்றது.
திருநீற்றுப்புதனாகிய மார்ச் 2, இப்புதன்கிழமை, இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு, நம்பிக்கையாளர்கள் அனைவரும் இணைந்து அந்நாளில் செபிக்குமாறு பேராயர் Grušas அவர்கள் கூறியுள்ளார்.
துன்புறும் மக்களோடு திருஅவை அருகிலிருக்கிறது என்பதை உறுதிசெய்வதற்கு தவக்காலம் நல்லதொரு வாய்ப்பு என்றுரைத்துள்ள பேராயர், இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பைக் கடைப்பிடித்து, ஐரோப்பியக் கண்டத்தில் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வை உருவாக்கவும், அக்கண்டத்தில் போர் முடிவடையவும் செபிக்குமாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்