தேடுதல்

உக்ரைனிலிருந்து புலம்பெயரும் மக்கள் உக்ரைனிலிருந்து புலம்பெயரும் மக்கள்  

Odessa ஆயர்: உக்ரைன் ஆதரவுக்கு ACN அமைப்பிற்கு நன்றி

உக்ரைனின் ஒதெஸ்ஸா தலத்திருஅவைக்கு உதவிவரும் ACN அமைப்பிற்கு ஆயர் Šyrokoradjuk நன்றி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனின் ஒதெஸ்ஸா தலத்திருஅவைக்கு உதவிவரும் ACN  என அழைக்கப்படும் Aid to the Church in Need என்ற திருப்பீட பிறரன்பு அமைப்பிற்கு நன்றி கூறியுள்ளார், அத்தலத்திருஅவை ஆயர் Stanislav Šyrokoradjuk.

கருங்கடலின் கரையோரம் உள்ள ஒதெஸ்ஸா நகரம் இரஷ்யப் படைகளின் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் தலத்திருஅவைக்கு உதவி வரும் ACN என்ற தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பிற்கு நன்றி கூறியுள்ளார் கத்தோலிக்க ஆயர் Šyrokoradjuk.

ஒதெஸ்ஸா நகரமானது இதுவரை உக்ரைன் மீதான இரஷ்யாவின் மிக மோசமான தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது, ஆனாலும், நாட்டின் முக்கியத் துறைமுக நகரமான இந்நகரத்திற்கு எதிரான இராணுவத் தாக்குதல் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும், மக்கள் மத்தியில் ஒவ்வொரு நிமிடமும் இது பேரச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் ஆயர் Stanislav தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு  அர்ப்பணிக்கப்பட்ட ACN அமைப்புக்குத் தான் அனுப்பிய காணொளிச் செய்தியில் நன்றி கூறியுள்ள ஆயர் Stanislav அவர்கள், எஞ்சியிருப்பவர்கள், வான்வழித் தாக்குதல் எழுப்பும் அபாயத் சங்கொலிகள் மத்தியில் பூமியின் அடித்தளத் தங்குமிடங்களில் உறங்குகிறார்கள் என்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருள் உதவியாலும், இறைவேண்டலாலும் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆலங்களில் அருள்பணியாளர்கள் இருப்பது மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்றும், அவர்கள் திருப்பலிகளைக் கொண்டாடுகிறார்கள், இறைவேண்டல்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் ஆயர் Stanislav எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2022, 15:27