தவக்காலம் - மூன்றாம் ஞாயிறு: மனமாறுவோம் புதுவாழ்வு பெறுவோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. விப 3: 1-8a,13-15 II. 1 கொரி 10: 1-6,10-12 III. லூக் 13: 1-9)
தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகின்றோம். மனமாற்றம் என்ற மையக்கருத்தை அடிப்டையாகக் கொண்டே இன்றைய மூன்று வாசகங்களும் சுழன்று வருகின்றன. அதிலும் சிறப்பாக, தனிப்பட்ட ஒரு மனிதருடைய மனமாற்றம்தான் அவர் சார்ந்துள்ள ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காப்பாற்றும் என்ற முக்கிய கருத்தையும் முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
நான் யார், நான் எதை நோக்கிப் பயணிக்கின்றேன், நான் யாருக்காகப் பயணிக்கின்றேன், என் பாதை சரியானதுதானா என்ற கேள்விகளை எழுப்பி, நம்மை சரியான பாதையில் நடத்திச்செல்வதுதான் உண்மையான மனமாற்றம் என்று மனமாற்றத்தை நாம் வரையறை செய்யலாம். சங்கிலித் தொடர்போன்று நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம். ஒருவர் செய்யும் நற்காரியங்கள் அவரைச் சார்ந்துள்ள எல்லாருக்கும் கிடைப்பதுபோல, ஒருவர் செய்யும் தீமையும் அவரைச் சார்ந்துள்ள அனைவரையும் பாதிக்கும் என்பது திண்ணம். இருள்நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைந்த வாழ்விற்குள் நுழைவதையும், தீமையான வாழ்விலிருந்து நன்மையான வாழ்விற்குள் நுழைவதையும், தன்னலத்திலிருந்து பிறர்நலத்திற்குக் கடந்து செல்வதையும் ‘மனமாற்றம்’ என்று நாம் அடையாளப்படுத்தலாம்.
பொதுவாக, மனமாற்றம் என்பது தனிமனிதருடைய மாற்றத்தை மையப்படுத்தியதாகவே அமைகின்றது என்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது. உரோமை பேரரசர் கான்ஸ்டன்டைன் பெற்ற மனமாற்றம்தான், கிறித்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வேதகலாபனைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த சவுலின் மனமாற்றம்தான், இந்தத் திருஅவையின் வளர்ச்சிக்கான வித்தாக அமைந்தது. இயேசு சபையின் நிறுவுநர் புனித இலயோலா இஞ்ஞாசியாரின் மனமாற்றம்தான், கத்தோலிக்கத் திருஅவையை உடைக்க விரும்பிய கால்வின், மார்ட்டின் லூத்தர் ஆகியோரிடமிருந்து அதனை காப்பாற்றியது. பெயரும் புகழும் பெறவேண்டும் என்ற இவ்வுலகத்தின் மதிப்பீடுகளுக்குள் புதைந்துபோயிருந்த புனித சவேரியாரின் மனமாற்றம்தான், அளவிட முடியாத ஆன்மாக்களை ஆண்டவர் இயேசுவிடம் கொண்டுவந்து சேர்த்தது. எல்சால்வதோர் நாட்டில் இயேசுசபை அருள்பணியாளார் ரொத்திலியோ கிராந்தே அவர்களின் கொடூர மரணத்தைப் பார்த்தபிறகு மனமாற்றம் பெற்ற பேராயர் ஆஸ்கர் ரோமெரோ அவர்கள், தன் இன்னுயிரைக் கொடுத்து இன்று அம்மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழிகாட்டியிருக்கிறார். இப்படியாகத் தனிமனிதரிடம் ஏற்பட்ட மனமாற்றத்திற்கான வரலாற்றை நாம் விவரித்துக்கொண்டே போகலாம். இன்றைய முதல் வாசகம், மோசேயின் மனமாற்றம் குறித்துப் பேசுகிறது. மோசே மதியான் தேசத்தில் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டு அவர் மகள் ஒருவரை மனைவியாக்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் எகிப்தில் வாழ்ந்தபோது அவருக்கு நிகழ்ந்த அனுபவம் அவர் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முட்செடி அனுபவம் மோசேயை முற்றிலுமாக மனமாற்றியது. பாஸ்கா என்ற கடத்தல் நிகழ்வைப்போல மோசே தன்னலத்திலிருந்து கடந்து பிறர்நலத்திற்குள் நுழைகின்றார். அவர் ஒருவருடைய மனமாற்றம் எகிப்தில் அடிமை நிலையில் உழன்றுகொண்டிருந்த ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களையும் காப்பாற்றியது.
ஆனால், இன்றைய உலகம் வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. மண்ணாசையும், பொன்னாசையும், பதவி வெறியும் மனிதரைவிட்டு அகன்றபாடில்லை. கடந்த கால உலக வரலாற்றை வாசிக்கும்போது, இரக்கமற்ற அரக்க மனம் கொண்ட பல தலைவர்கள் மனமாற்றம் பெறாததால் மனிதம் வீழ்ந்துபோனது என்பதையும் அறிய வருகிறோம். ஹிட்லர், முசோலினி, இடியமீன் போன்றோர் இதற்கு மாபெரும் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றனர். இவர்களில் ஹிட்லர் என்பவர் மனித வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கறையாகப் படிந்துவிட்டார். ஹிட்லர் மனித இனத்தின் தோலில் அமர்ந்து ஒரு தீய அசுரனாக வலம் வந்தார். 6 மில்லியன் யூதர்களை அழித்தது உட்பட, இதுவரைப் பதிவு செய்யப்படாத மனிதர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களை அரங்கேற்றியவர். அவர் நாடுகளை அழித்தொழிக்கத் திட்டமிட்டார், மேலும் மனித இனத்தின் பெரும்பகுதியை அடிமைகளாக மாற்றினார். அவர் தனது சொந்த மக்களை ஏமாற்றி, அவர்தான் ஜெர்மனியின் கடைசி நம்பிக்கை என்று அவர்களை நம்ப வைத்தார். உண்மையில் ஜெர்மனியின் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியை தனது தீய சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகவே அவர் பயன்படுத்த விரும்பினார். அவர் ஜெர்மனியர்களை ஏமாற்றி ஒரு பைத்தியக்காரச் சித்தாந்தத்தின் பெயரில் அவர்களின் நாட்டை நாசமாக்கினார். மனித இனத்தைக் கொடூரமாக அழித்தவர்களும், தன்னை யாருமே வீழ்த்த முடியாது என்று வீரவசனம் பேசியவர்களும் இறுதியில் வீழ்ந்து போனதாகத்தான் வரலாறும் பதிவு செய்திருக்கின்றது. ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றோர் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில், "தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்" (1 கொரி 10:12) என்று மக்களை எச்சரிக்கின்றார் புனித பவுலடியார்.
இத்தகைய சிந்தனைகளின் அடிப்படையில் இப்போது நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதிக்குச் செவிமடுப்போம்.
அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார் (லூக்10:1-5)
இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியிலே, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை எடுத்துக்காட்டி நடைமுறை விடயங்கள் குறித்து மிக இயல்பாகப் பேசுகிறார் இயேசு. இன்று உலகமே உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது உக்ரைன் நாட்டைத்தான். திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கி உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும், “தயவு செய்து போரை நிறுத்துங்கள், அப்பாவி மக்களும் அவர்களிலும் குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பெருத்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள், எனவே, அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்” என்று எவ்வளவோ கோரிக்கைகள் வைத்தாகிவிட்டது. ஆனால், இரஷ்ய அதிபர் புதின் கொஞ்சம்கூட இறங்கிவர மறுக்கிறார். இப்போது கீவ் நகரைத் தரைமட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்ரைனில், இரஷ்யாவின் ஏறத்தாழ இரண்டு இலட்சம் படைவீரர்கள் கடும் தாக்குதல்களை நடத்திவரும்வேளை, உக்ரைனிலிருந்து 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்து சாரை சாரையாக அண்டை நாடுகளுக்குச் செல்வதை, உடைந்துபோன உள்ளங்களுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றோம். தனிப்பட்ட சிலரின் தவறான முடிவுகளால் ஒட்டுமொத்த உக்ரைன் மக்களும் இன்று துயரத்தின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்டச் சம்பவங்களால் உக்ரைன் நாட்டிலுள்ள எல்லாரும் பாவிகள் என்று நாம் சொல்ல முடியுமா? அல்லது இந்தப் போரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்ற இரஷ்ய நாட்டிலுள்ள அனைவருமே மோசமானவர்கள் என்று கூற இயலுமா? அப்படியல்ல. இயேசு கூறுவதுபோல, மனமாற்றம் என்பது ஒரு தனிமனிதரிடமிருந்து தொடங்க வேண்டும். அப்படி ஒரு தனி மனிதர் மனமாற்றமடைய மறுக்கும்போது, அது எல்லோருக்குமான பேரழிவாக நிகழ்ந்துவிடுகிறது என்பதுதான் இயேசு குறித்துக்காட்டும் நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் ஒருவரை அழைத்து, இந்திய வரைபடத்தைப் பல பாகங்களாகக் கிழித்து அவன் கையில் கொடுத்து, இதைச் சரியாகப் பொறுத்திக் கொண்டுவா என்று கட்டளையிட்டார். இதனைப் பொருத்துவதற்கு அம்மாணவர் குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுத்துக்கொள்வார் என்று ஆசிரியர் எண்ணினார். ஆனால் அம்மாணவனோ, 10 நிமிடத்திற்குள் வரைபடத்தைச் சரிசெய்துகொண்டு வந்து விட்டான். ‘எப்படி இவ்வளவு விரைவாக இந்த வரைபடத்தைச் சரிசெய்துகொண்டு வந்துவிட்டாய்’ என்று அவனிடம் ஆசிரியர் ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு அம்மாணவன், “அதுவெல்லாம் ஒன்னுமில்ல சார், நீங்கள் கிழித்துக்கொடுத்த இந்திய வரைபடத்திற்குப் பின்புறம் ஒரு மனித உருவம் இருப்பதைக் கண்டுபிடித்தேன். எனவே மனிதரின் உடல் பாகங்களைச் சரியாகப் பொருத்தினேன். இந்திய வரைபடமும் சரியாகிவிட்டது” என்று கூறினார். ஒரு மனிதர் தன்னை சரிசெய்துகொண்டாலே போதும், மற்ற எல்லாமே சரியாகிவிடும் என்ற எளிய விடயத்தை நம் மனதிற்குள் மிக ஆழமாகப் புகுத்துகின்றது இந்நிகழ்வு.
இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியாக இயேசு ஒரு அழகான உவமை வழியாக மனமாற்றம் குறித்து எடுத்துரைக்கின்றார்.
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே, அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.” (லூக் 10:6-9).
இயேசு சபையின் தொடக்கப் பயிற்சியில் உள்ளவர்களுக்கு, “இந்தத் துறவு சபை உங்களுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுக்கும். அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு உங்களை நல்ல முறையில் உருவாக்கிக்கொள்ளுங்கள்” என்று பயிர்ச்சியளிப்பவர்கள் அடிக்கடிக் கூறுவார்கள். அவ்வாறே சிலரை வீட்டிற்கு அனுப்பும்போது, “உங்களுக்கு அதிகமான வாய்ப்புகளை இந்தச் சபைக் கொடுத்தது. ஆனால் நீங்கள் அவற்றையெல்லாம் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த இறுதி நேரத்தில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று கைவிரித்ததையும் நான் பார்த்திருக்கின்றேன். இந்த விடயம் நம் பணி வாழ்வின் எல்லா நிலைகளிலும் நடைபெறுகிறது. கடவுள் நமக்கும் மனம் மாறுவதற்கான வாய்ப்பை பலமுறை கொடுக்கிறார். நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா என்பதைக் குறித்து இந்நாளில் ஆழமாகச் சிந்திப்போம்.
“இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். “நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.” அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர் (யோவே 2:12-13).
வாய்ப்புகளை வசமாக்கிக் கொள்பவர்கள் வானளாவ உயர்ந்து நிற்கிறார்கள். வளர்ச்சிக்கான சந்தர்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் சாதனைப் படைத்து சரித்திரத்தில் உயர்கிறார்கள். மத்தேயு, சக்கேயு, மகதலா மரியா போன்றோர் மனமாற்றத்திற்காக இயேசுவால் அழைக்கப்பட்டபோது, அந்தச் சந்தர்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால், அவர்கள் இன்றும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்கள். இந்தத் தவக்காலம் நாம் மனம் மாறுவதற்கான ஒரு வாய்ப்பை நமக்கு மீண்டும் வழங்குகின்றது. பயன்படுத்திகொண்டு புதுவாழ்வு பெறுவோம். அதற்கான அருளை ஆண்டவர் இயேசுவிடம் இறைஞ்சுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்