விவிலியத் தேடல்:திருப்பாடல் 28–வலிமையும், அரணும், ஆயருமான இறைவன்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில் திருப்பாடல் 28ல் 1 முதல் 5 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். தாவீது அரசர், கடவுளை ‘கற்பாறை’ என்று அழைத்து தனது குரலுக்குச் செவிமடுக்குமாறு இறைவேண்டல் செய்ததைக் குறித்து சிந்தித்தோம். இவ்வார நமது விவிலியத் தேடலில் 6 முதல் 9 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நாம் நிறைவு செய்வோம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.
ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார். ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசைபாடி அவருக்கு நன்றி கூறுவேன். ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண். ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும். (வசனம் 6-9).
இந்த நான்கு இறைவசனங்களிலும் கடவுளை இஸ்ரயேல் மக்களின் வலிமையாகவும், அரணாகவும், விடுதலை தரும் நல்லாயராகவும் தாவீது அரசர் எடுத்துக்காட்டுகின்றார். இன்றயைச் சூழலில் தலைமைத்துவத்துக்கான அடையாளங்களாக இம்மூன்று பண்புகளையும் கொள்ளலாம். மக்களை வலிமையும் அரணுமாக நின்று காப்பதிலும், அவர்களின் நலன்களுக்காகத் தனது இன்னுயிரைக் கையளிப்பதிலும் தியாக மனம் கொண்ட நல்ல தலைவர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். இத்தகைய பண்புகளைத் தாவீது அரசரும் தன்னிலே கொண்டிருந்தார்.
முதலாவதாக, ஆபிரகாம், ஈசாக், யாகோப்பு தொடங்கி பழைய ஏற்பாடு முழுவதுமே யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களின் வலிமையும், கேடயமும், மீட்புமாக இருந்திருக்கின்றார் என்பதை அறிய வருகின்றோம். “ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்” (திபா 18:2), என்றும் “உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன்” (திபா 62:6) என்றும், “ஆண்டவரே, நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” (திபா 91:2). என்றும், தாவீது அரசர் கடவுளின் தலைமைத்துவ பண்புகளைத் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கின்றார். மேலும், “ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன்” (விப 15:2) என்றும், “இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே” (எசா 12:2) என்று வேறு சில பழைய ஏற்பாட்டு நூல்களும் எடுத்துரைக்கின்றன.
இரண்டாவதாக, தாவீது அரசர் ஆண்டவரை ஆயராக உருவகப்படுத்துகிறார். "ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்" (திபா 23:1-3) எனத் திருப்பாடல் 23ல் கூறுகிறார் தாவீது. ஒரு நல்ல ஆயர் அல்லது தலைவர் என்பவர் யார்? என்பது குறித்தும் நாம் இங்கே சிந்திக்கவேண்டும். மற்றவர் மனதில் நம்பிக்கை என்ற விதையை விதைக்கும்பொழுது தலைமைப் பொறுப்பு உங்களைத் தேடிவரும் என்று கூறுவார்கள். இன்றைய பொதுவாழ்விலும் சரி, துறவு வாழ்விலும் சரி, எப்படியாவது தலைமைப் பொறுப்பை அடைந்துவிடவேண்டும் என்று பலர் துடியாய்த் துடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் கையாளுகின்ற கீழ்த்தரமான வழிமுறைகள்தாம் தலைமைத்துவத்தின் இலக்கணத்தைப் பெரிதும் சிதைத்து வருகின்றன. அப்படியே அவர்கள் அந்தப் தலைமைப் பொறுப்பை அடைந்துவிட்டாலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குத்தான் பாடாய்ப்படுகிறார்களே ஒழிய, அதனைக்கொண்டு நல்லது செய்ய பலர் விரும்புவது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
“ஒரு மிகப்பெரும் மக்கள் கூட்டத்தின் தலைவன் என்பவன் முதலில் அம்மக்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும்” என்கிறார் நெல்சன் மண்டேலா. இன்று எத்தனை தலைவர்கள் மக்களின் குரல்களுக்குச் செவிமடுகின்றனர்? தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு மக்களின் கால்களைப் பிடிப்பதும், அப்பொறுப்பிற்கு வந்தபிறகு அம்மக்களின் கால்களை வாரிவிட்டு வீழ்த்தாட்டுவதும்தான் நம்மத்தியில் அடிக்கடி நடந்துகொண்டிருக்கிறது. இன்றையத் தலைவர்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகளாக உள்ளனர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இரட்டைவேடம் போடுபவர்களாக மக்களை வலம் வருகின்றனர். ஆபத்து நேரங்களில் ஆடுகளையே தங்களுக்கான பாதுகாப்பு கேடயங்களாக வைத்துத் தப்பிச்செல்லும் இரக்கமற்ற ஆயர்களாக வாழ்வதைப் பார்க்கிறோம். எனவேதான், இயேசு ஆண்டவர் இப்படிப்பட்ட ஆயர்களைக் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டுமென எச்சரிக்கின்றார். அதேவேளையில், தன்னைப்போன்று ஆடுகளுக்காகத் தன் உயிரையே கையளிக்கும் நல்லாயர்களாக வாழவேண்டும் என்றும் அழைப்புவிடுக்கின்றார்.
திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். “கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில், அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். (யோவா 10:10-15).
பெற்றோர், ஆசிரியர்கள், முதலாளிகள், அதிகாரிகள், தலைவர்கள், நீதிபதிகள், துறவுவாழ்வில் தலைமைப்பொறுப்பில் உள்ள எல்லோரும் ஆயர்கள்தாம். ஆனால் இவர்களில், மக்களாகிய ஆடுகளின்மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட நல்ல ஆயர்கள் எத்தனை பேர்? என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இயேசுவைப் போன்று உண்மையான ஆயருக்குள்ள நற்குணங்கள் நம்மிடம் துலங்குமேயானால், எப்படிப்பட்ட தீய குணங்கள் கொண்ட ஆடுகளையும் நம் அன்பின் பிடிக்குள் கொண்டுவந்துவிடலாம். அதற்குச் சான்றாக இதோ ஒரு நிகழ்வு.
'சிங் சிங்' என்பது ஒரு சிறையின் பெயர். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட சிறை இதுதான். கைதிகளாக அங்கிருந்தோர் மிக ஆபத்தான குற்றவாளிகள் என்பதால் இந்தச் சிறைக்குப் பொறுப்பேற்க அதிகாரிகள் மிகவும் தயங்கினர். 1921-ம் ஆண்டு இச்சிறைக்குப் பொறுப்பேற்றார் லூயிஸ் லாஸ் என்கிற அதிகாரி. அவர் பொறுப்பேற்றபோது அவரது மனைவி கேத்தரினிடம் பேசியவர்கள், அவரோ அவர்களின் குழந்தைகளோ சிறைக்குள் அடி எடுத்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்தனர்.
அப்போது, “சிறையில் இருக்கும் கைதிகளைப் பாதுகாப்பது எங்கள் இருவரின் கடமை. எங்களைப் பாதுகாப்பது கைதிகளின் கடமை. ஆகவே, எனக்குச் சிறிதும் கவலை இல்லை” என்றார் கேத்தரின். அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் அவர் கைதிகளின் குறைகளைப் பொறுமையாகக் கேட்டு அக்குறைகளை மிகுந்த அக்கறையுடன் சரிசெய்து வந்தார். பார்க்கும் திறன் இழந்த கைதி ஒருவருக்கு ப்ரெய்ல் முறை மூலம் படிக்கக் கற்றுத் தந்தார். பார்வை இருந்தாலும் பேசவும் கேட்கவும் முடியாத கைதி ஒருவர் சொல்ல நினைத்ததைப் புரிந்துகொள்ள சைகை மொழியைக் கற்றுக்கொண்டார் கேத்தரின். மேலும் கைதிகளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்து தந்தார்.
அவரது கணவர் சிறைக்குப் பொறுப்பேற்ற நாளிலிருந்து 16 ஆண்டுகளில் சிறைக்கைதிகளைத் தமது பிள்ளைகள்போல் நடத்திய கேத்தரின், 1937ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் ஒரு விபத்தில் இறந்துபோனார். கேத்தரின் அம்மையாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என்று அச்சிறையிலுள்ள கைதிகள் அனைவரும் கேட்க, சிறைத் துறையிலிருந்து அனுமதி வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கைதிகள் ஏறத்தாழ ஒரு மைல் தூரம் வரிசையில் நடந்துபோய், வழி மாறிய அந்த ஆடுகளுக்குத் தாயாக இருந்து அன்பு காட்டிய அந்தப் பெண்ணுக்குத் தங்கள் கண்ணீரைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு சிறைக்குத் திரும்பினர். இதில் குறிப்பிடும்படியான விடயம் என்னவென்றால், கண்காணிக்க யாருமே இல்லாத சூழலிலும் ஒரு கைதிகூட அங்கிருந்து தப்பிச்செல்ல முயலவில்லை என்பதுதான்.
நம் பொறுப்பில் இருப்போரை, நம்மைச் சார்ந்திருப்போரை எந்நாளும் காத்து வழிநடத்தும் பொறுப்புள்ள நல்ல ஆயர்களாக நாம் விளங்கிடவேண்டும் என்பதையே இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. ஆயர்கள் எவ்வழியோ ஆடுகளும் அவ்வழியே என்பதை மனதில் நிறுத்தி, நாம் ஒவ்வொருவரும் அவரவர் பணிகளில் நல்ல ஆயர்களாக விளங்கிட வேண்டும். இதைத்தான் ஆடுகளாகிய மக்களும் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர். நம் கடவுளாகிய ஆண்டவரும் இஸ்ரயேல் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப அவர்களின் உண்மையுள்ள ஆயராக விளங்கினார். அதனால்தான், தாவீது அரசர், “அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும்” என்று ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்புகிறார். ஆகவே, நம் ஒப்பற்ற ஆயராம் ஆண்டவரிடம் என்றென்றும் அடைக்கலம் தேடுவோம். அவரின் நல்ல ஆடுகளாய் வாழ்வோம். அதற்கான அருளை இந்நாளில் இறைஞ்சுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்