தேடுதல்

இறைவேண்டலில் விசுவாசிகள் இறைவேண்டலில் விசுவாசிகள்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 27 – ஆண்டவரின் பாதைகள்

ஆண்டவரின் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், அநீத வழியகற்றி நீதியின் வழியில் பயணிக்கவும், எப்போதும் ஆண்டவரின் நலன்களுக்காகக் காத்திருக்கவும் மன்றாடுவோம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

விவிலியத் தேடல்: திருப்பாடல் 27 – ஆண்டவரின் பாதைகள்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் திருப்பாடல் 27ல் 7 முதல் 10 வரை உள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வார நம் விவிலியத் தேடலில் 11 முதல் 14 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.  

ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்; என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும். என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர். வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. (வசனம் 11-14).

தாவீதின் திருப்பாடல்களில் நாம் திரும்பத் திரும்ப கேட்கும் வார்த்தை ‘ஆண்டவரே உம்  வழிகளை எனக்குக் கற்பியும்’ என்பதுதான். சிறுபிள்ளைகளுக்கு ஆசிரியர் கற்பிப்பதுபோன்று ஆண்டவர் தனக்குக் கற்பிக்கவேண்டும் என்று வேண்டுகிறார் தாவீது. அதேவேளையில், நல்லவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற சிறுபிள்ளையின் மனநிலையைத் தாவீது கொண்டிருப்பதையும் நாம் காண முடிகிறது.

“ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.” (திபா 25:4). “ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்” (திபா 86:11). “இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும்.” (விப 33:13),  வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;  யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார் (எசா 2:4) ஆகிய இறைவார்த்தைகள் இங்கே ஒப்புநோக்கத்தக்கன.

வாழ்க்கை என்பதே ஒரு பாடம்தான். அதில் பலவற்றைக் கற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். “பிறரது சொற்களிலிருந்து நீ ஏதாவது கற்க நேர்ந்தால், அந்த அனுபவத்தை நீ ஏற்கனவே பெற்றுள்ளாய் என்பதைத் தெரிந்துகொள். ஏனெனில் அனுபவம்தான் ஆசிரியர்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்தச் சம்பவம்தான் என் வாழ்வையே மாற்றியது. காரணம், அதுதான் எனக்கு மிகப் பெரியதொரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறோம். வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் இன்பங்கள் துன்ப துயரங்கள் ஆகிய அனைத்திலிருந்தும் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம். ஆன்மிக, சமய மற்றும் சமுதாய வாழ்வில் சாதனைகளை நிகழ்த்தியவர்களும், வரலாறு படைத்தவர்களும் பல்வேறு தருணங்களில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டவர்கள்தாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும் ஒரு கற்றல் கண்டிப்பாக இருக்கும். நாம் காணும் இறைவனின் இந்தப் படைப்பு, மனிதர்கள், வெற்றிகள், தோல்விகள், போராட்டங்கள், விருப்பு வெறுப்புகள் என எல்லாமே நமக்கு நாளும் பாடங்களாக அமைகின்றன.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த ஃபெமி ஓத்தெதோலா. (Femi Otedola) இவர்தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர். அவர் ஒரு நேர்காணலில், "உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது எது?" என்ற கேள்விக்கு "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளைக் கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின்  பொருளைப் புரிந்து கொண்டேன்."  என்று ஃபெமி கூறினார்: முதல் கட்டமாகச் செல்வத்தை சேர்த்தேன், ஆனால், இதில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கவில்லை. பின்னர் மதிப்புமிக்கப் பொருட்களைச் சேர்க்கும் கட்டம். ஆனால், இதன் வழியாகக் கிடைக்கும் இன்பமும் தற்காலிகமானது என்பதை உணர்ந்தேன். மதிப்புமிக்கப் பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது. பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவில் 95 விழுக்காடு எரிபொருள் (டீசல்) விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராகவும் இருந்தேன் ஆனால், இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கவே இல்லை. இறுதிக்காலத்தில்தான் என் நண்பர் அவருக்குத் தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்குச் சக்கர நாற்காலி வாங்கிக் கொடுக்கச் சொன்னார். என் நண்பர் கேட்டதற்காக, எறக்குறைய 200 குழந்தைகளுக்கு நானும் உடனடியாகச் சக்கர நாற்காலிகள் வாங்கினேன். ஆனால், நண்பரோ நானும் அவருடன் வந்து அந்தச் சக்கர நாற்காலிகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்று என்னை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். நானும் அவரின் மன ஆறுதலுக்காக அவருடன் சென்றேன்.

அங்கே சக்கர நாற்காலிகளைக் குழந்தைகளுக்கு நானே கொடுத்தேன். அப்போதுதான் அந்தக் குழந்தைகளின் முகங்களில் ஒருவிதமான மகிழ்ச்சியின் ஒளியைக் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து மகிழ்ச்சியோடு, சுற்றிச் சுற்றி  நகர்ந்து வந்ததைப் பார்த்தேன். "அவர்களின் மகழ்ச்சியை என்னால் விவரிக்கவே முடியவில்லை. அது எனக்குள் ஏதோ சொல்லமுடியாத ஓர் அற்புதத்தை உணர்த்தியது.' எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது, அவர்களில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிக நேசமாகப் பிடித்து கொண்டது,  அப்போது, நான் சிரித்துக்கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன். ஆனால், அந்தக் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே விடாமல் இறுகப் பிடித்துக்கொண்டது. நான் குனிந்து அந்தக் குழந்தையிடம், ‘உனக்கு வேறு ஏதாவது வேணுமா’ என்று கேட்டேன். அந்தக் குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்ததுடன் வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியது. அந்தக் குழந்தை என்னிடம், "நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களைச் சொர்க்கத்தில் சந்திக்கும்போது, உங்களுக்காகக் கடவுளிடம் பேசி, உங்களுக்குப் பிடித்ததை நான் வாங்கித் தருகிறேன்" என்று கூறிவிட்டு, அந்தச் சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாடச் சென்று விட்டது. தெய்வத்தின் அருளை அன்றுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியைவிட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தைவிட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலைவிட ஆற்றல் மிக்க ஆயுதமுமில்லை என்ற பாடங்களை அந்தக் குழந்தையிடமிருந்து அன்று நான் கற்றுக்கொண்டேன் என்று கூறினார்.

இரண்டாவதாக, “என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்” (வசனம் 12) என்றுரைக்கின்றார் தாவீது. நமதாண்டவர் இயேசுவையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சிகளை ஏவிவிட்டதை திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்” என்று கூறினார்கள். (மத் 26:59-61). ஆக, குற்றமறியா இயேசுவுக்கே இது நிகழ்ந்திருக்கிறது என்றால் அப்பாவி மக்களுக்குச் சொல்லத்தான் வேண்டுமோ?

சாதி, மதம், இனம், அரசியல் ஆகியவற்றின் பெயரால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் அநீதச் சூழலை நம் அன்றடாட வாழ்வில் பார்க்கின்றோம். பொய்ச்சாட்சிகளை ஏற்பாடு செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க விடுவதும், குற்றமற்ற அப்பாவி மக்களைத் தண்டிப்பதும் அன்று தொடங்கி இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு  தமிழத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் மனதை நொறுக்கும் செய்தி ஒன்றை வாசித்தேன். ‘வட இந்தியச் சிறைகளில் வாடும் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது அந்தச் செய்தி. தமிழகத்திலிருந்து வட இந்தியாவிற்கு வேலை தேடிச் செல்லும் தமிழக இளைஞர்கள் சூழ்ச்சியோடு பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுச் சிறைகளில் தண்டனைகளை அனுபவித்து வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வட இந்தியப் பகுதிகளில் சமூகக் குற்றங்களில் ஈடுபட்டு வரும் பல பெரும்குற்றவாளிகளால், இப்படிப்பட்ட அநீதியான முறையில் அப்பாவித் தமிழர்கள் சிக்கவைக்கப்பட்டு, அவர்கள் இளமைக்காலம் முழுவதும் சிறையிலேயே சீரழிக்கப்படுவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மூன்றாவதாக, ‘ஆண்டவருக்காகக் காத்திரு’ என்கிறார் பேரரசர் தாவீது. வாழ்வோரின் நாட்டில் ஆண்டவரின் நலன்களைக் காண நாம் அவசியம் காத்திருக்கத்தான் வேண்டும். நமது வாழ்வில் இந்தக் காத்திருத்தல் பல நிலைகளில் நடைபெறுகிறது. விதைகளை விதைத்துவிட்டு அதன் விளைச்சலுக்காகக் காத்திருக்கிறார் விவசாயி. வயிற்றில் கருத்தாங்கிய குழந்தையைப் பெற்றெடுக்கப் பத்து மாதங்கள் அதன் தாய் காத்திருக்கிறார். நாள்தோறும் பகலவனின் உதயத்திற்காகவும் மறைவிற்காகவும் காத்திருக்கின்றோம். இப்படியாக, வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக நாம் காத்திருக்கிறோம். இங்கே, ‘நம் ஆண்டவருக்காக நம் நெஞ்சம் காத்திருக்கவேண்டும்’ என்கிறார் தாவீது. ஆகவே, ஆண்டவரின் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், அநீத வழியகற்றி நீதியின் வழியில் பயணிக்கவும், எப்போதும் ஆண்டவரின் நலன்களுக்காகக் காத்திருக்கவும் அன்பு நிறைந்த ஆண்டவரிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2022, 13:29