தெய்வநிந்தனை சட்டங்கள் குறித்து, பேராயர் வெல்பி கவலை
மேரி தெரேசா: வத்திக்கான்
பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கின்ற தெய்வநிந்தனைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து, இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டீன் வெல்பி அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தானில் மூன்று நாள்கள் பயணத்தை முடித்து திரும்பும்போது, Dawn நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய பேராயர் வெல்பி அவர்கள், தெய்வநிந்தனைச் சட்டம், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உட்பட, முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரைக் குறிவைத்து, தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
எனினும், இவ்வாறு அச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றவர்களில், ஐம்பது விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் முஸ்லிம்கள் என்றும், இவர்களே, இவர்களுக்கு எதிராக, அச்சட்டத்தை, அவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்றும், பேராயர் வெல்பி அவர்கள் கருத்து தெரிவித்தார் என Dawn நாளிதழ் கூறியுள்ளது.
கட்டாய மனமாற்றம், குழந்தைத் திருமணம், கல்வி, வேலைவாய்ப்புகள் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள் குறித்த தன் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்ட பேராயர் வெல்பி அவர்கள், சனவரி 30ம் தேதி, இரு கிறிஸ்தவப் போதகர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டது குறித்து தன் கண்டனத்தையும் வெளியிட்டார்.
1947ம் ஆண்டில் பாகிஸ்தான் நாடு உருவானது முதல், கிறிஸ்தவர்கள், குடிமக்களாக, சமஉரிமைகளைப் பெறுவதற்குப் போராடிவருகின்றனர். பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள் 2 விழுக்காட்டுக்கும் குறைவே. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்