தேடுதல்

உக்ரைன் நிகழ்நிலை கலந்துரையாடல் உக்ரைன் நிகழ்நிலை கலந்துரையாடல்  

உக்ரைன் குறித்து கவலையை வெளியிட்டுள்ள பேராயர் Sviatoslav Shevchu

உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களும், இராணுவக் குவிப்புகளும் அரசுக்கும் குடிமக்களுக்கும் பெரும் துயர்களைத் தந்து வருகின்றன : பேராயர் Sviatoslav Shevchuk.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த எட்டு ஆண்டுகளாக உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களும், இரஷ்யாவின் இராணுவக் குவிப்புகளும் உக்ரைன் அரசுக்கு மட்டுமல்ல, சாதாரண குடிமக்களுக்கும் பெரும் துயர்களைத் தந்து வருவதாக கவலையை வெளியிட்டார் உக்ரைன் கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் Sviatoslav Shevchuk.

துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் Aid to the Church in need என்ற பாப்பிறைப் பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்த இணையதளம் வழியான நிகழ்நிலை கருத்தரங்கில் பங்குபெற்று உரையாற்றிய பேராயர் Shevchuk அவர்கள், எரிசக்தி எண்ணெய், எரிவாயு போன்றவைகளின் விலையேற்றத்தாலும், பேரச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் பின்வாங்குவதாலும் பொதுமக்களின் துயரங்கள் அதிகரித்துள்ளதாகவும், எண்ணற்றோர் புலம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இராணுவ பதட்டநிலை, தவறான தகவல் பரிமாற்றங்கள், அரசியல் விரிவாக்க மோதல்கள், பொருளாதார சரிவு போன்றவைகளை எதிர்நோக்கி இருக்கும் உக்ரைன் நாட்டில், திருஅவையின்மீது மக்களின் நம்பிக்கை உறுதியானதாக உள்ளது என மேலும் கூறினார் கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் Sviatoslav Shevchuk.

இதே நிகழ்நிலை கருத்தரங்கில் 77 பேருள் ஒருவராகக் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டின் திருப்பீடத்தூதர், பேராயர் Visvaldos Kulboker அவர்கள், உக்ரைன் நாட்டின்மீது திருத்தந்தையின் அக்கறையை வெளிப்படுத்தி நாட்டின் அமைதிக்காகவும், அரசுத் தலைவர்களின் மனமாற்றத்திற்காகவும் செபிக்கவேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் நினைவூட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 பிப்ரவரி 2022, 15:45